கருப்பு

Rating 5/5

40

a K Vijay Anandh review

பாதிக்கப்பட்ட மக்கள் தீர்வு வேண்டி , காக்கிசட்டை வழியாக , கருப்பு சட்டைகளை அணுகும் போதுஅதாவது கருப்பு கவுன் அணிந்த வக்கீலையும் அணிந்த கருப்பு கோட் அணிந்த நீதிபதியையும்அணுகும் போது மறுக்கப்படும் நீதி , காவல்தெய்வமான கருப்பு என்கிற கருப்பசாமி யை அணுகும் போது கிடைக்கின்றது. எத்தனை நாள்தான் கோர்ட் வளாகத்திற்குள் சும்மாவே நின்று கொண்டிருப்பது ? ஒரு கை பார்த்துவிடுவோம் என்று, தன்னிடம் முறையிடும் பக்தனுக்காக களத்தில் இறங்கி ஆடுகிறான் கருப்பு.

சூர்யா , இவர் படம் வெளிவரட்டும் ஒரு பார்த்துவிடலாம் என்று காத்துக்கொண்டிருந்தவர்களுக்கு , கருப்பாக வந்து ஷாக் கொடுத்திருக்கிறார். வெறுத்தவர்களையும் வென்று காட்டிவிட்டான் கருப்பு என்று தான் சொல்லவேண்டும். இந்தக்கதையை , விஜய்க்கு சொல்லியிருந்தாலும் , சூர்யாவை தான் கருப்பு ஆட்க்கொள்ளவேண்டும் என்று நினைத்திருந்தால் அதை மாற்ற யாரால் முடியும் ? கருப்பின் விரைப்பு , கூர்மையான பார்வை, பக்தர்களுக்கு காட்டும் கனிவு, தீயசக்திகளை பந்தாடும் ஆக்ரோஷம் என்று கருப்பன் இப்டித்தாண்டா இருப்பான் என்று காட்டிவிட்டார் சூர்யா. ஒரு நீட்டிக்கப்பட்ட கேமியோ என்று சொல்லத்தக்க அளவில் படத்தின் மூன்றில் ஒரு பங்குதான் முழுமையாக ஆக்ரமித்திருக்கிறார் சூர்யா. ஆம், காட்சிக்கு காட்சி வந்து கொண்டிருந்தால் கடவுளுக்கு மதிப்பேது ! டெக்னிக்கலி லாஜிக்கலி அது தான் சரி என்பதை , திரைக்கதை எழுதியவர்கள் முடிவு செய்ததை , சரியாக புரிந்துகொண்டு ஒத்துழைத்திருக்கிறார் சூர்யா. கருப்பனாக குதிரையில் வரும் வித்தியாசமான ஒப்பனையிலும் சரி , இறுதிக்காட்சிகளில் வானத்திற்கும் பூமிக்கும் குதிக்கும் கருப்பாக இருந்தாலும் சரி , ஒப்பனையிலும் கடவுளுக்கென்று அதாவது கருப்புக்கென்று பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கோரியோகிராப்பிலும் சரி , சூர்யாவும் அதற்கு காரணமாக இருந்த அத்தனை பேரும் சிறப்பாக உழைத்திருக்கிறார்கள். ஸ்டண்ட் மாஸ்டர்களைப் பற்றி குறிப்பிடடே ஆகவேண்டும் , விக்ரம் மோர் மற்றும் அன்பறிவு இருவரும் கருப்பின் கதாபாத்தித்திற்கு ஏற்ப சண்டைக்காட்சிகளை அமைத்திருக்கிறார்கள். வேண்டுதல் நிறைவேற , கருப்பு சிலைக்கு மிளகாய் அரைத்து தலை வரை பூசும் அந்த விஷயத்தை சண்டை காட்சியில் கொண்டு வந்து , வில்லன் ஒரு மிளகாய் பொடி மூட்டையை கருப்பின் தலையில் மூடுவதாக அமைத்திருப்பது , மெய்சிலிர்க்கும் ரகம். தினமும் மிளகாய் சாந்தை பூசிக்கொள்பவருக்கு , அதெல்லாம் எம்மாத்திரம் ?

பேத்தி அனகா மாயா ரவியுடன் , அவளது சிகிசைக்காக சென்னை வந்திறங்கும் தாத்தா இந்திரன்ஸ் , நகையை தொலைத்துவிட்டு காவல் நிலையம்கோர்ட் என்று நடையாய் நடக்கும் காட்சிகளில் அனைவரையும் அழவைத்துவிடுகிறார்கள். நகை கிடைத்துவிடுகிறது , பேத்தி மரணித்து விடுகிறாள் , நகைகளை தூக்கி எறிந்துவிட்டு உடையும் காட்சிகளில் இந்திரன்ஸ் மிக மிக யதார்த்தமாக நடித்திருக்கிறார். இன்னொரு பக்கம் ஷிவதா , தன்னை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய அமைச்சர் வேல ராமூர்த்தியை நீதிமன்றம் மூலம் தண்டிக்கலாம் என்று பார்த்தால் , காசு வாங்கிக்கொண்டு அவருக்கு ஆதரவாக செயல்படும் நீதிமன்றத்தால் நரக வேதனை அடையும் அபலைப்பெண் வேடம் , கச்சிதமாக நடித்திருக்கிறார்.

வக்கீல் கொடுக்கும் ரிப்போர்ட்டுகளில் பக்கத்திற்கு பக்கம் ஏறிக்கொண்டே போகும் ஆஃபர்களுக்கு ஏற்ப தீர்ப்பு வாசிக்கும் , வில்லத்தனமான நீதிபதியாக உட்கார்ந்து கொண்டே மிரட்டியிருக்கிறார் நட்டி நடராஜ். ” பேபி கண்ணா வந்திருக்கிறது வெள்ளைக்கார சாமியா இருந்தாக்கூட பாவ மன்னிப்பு கேட்டுக்கலாம்டா.. வந்திருக்கிறது கருப்புடா கசக்கி பிழிஞ்சு தூக்கி எறிஞ்சுருவாண்டா … பேபி பேபி கண்ணா ஹேய் நீ கன்வர்டட் தானஅதனால தான் டா உங்களுக்கு பயமும் பக்தியும் இல்லாமப்போச்சுடா …” என்று நட்டி நடராஜ் பேசும் இடம் உச்சக்கட்ட கைதட்டல் பெறும்.

சுவாசிகா , மன்சூரலிகான் , கராத்தே கார்த்திக், தீபா , மாறன் , ஜார்ஜ் மரியம் என்று நடித்திருக்கும் ஒவ்வொருவரும் சிறப்பா பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

திரிஷா , பெரிய வாய்ப்புகள் இல்லாமல் இருந்தாலும் , இவர் வருவதே முழுமையான திருப்தியை கொடுக்கிறது . குறிப்பாக , கருப்பு சம்பந்தப்பட்ட பாடல் காட்சியில் , கருப்புக்கு தடபுடலாக படையலிட்டு , அவரை சாப்பிடவைக்கும் அழகு , கண்களை மூடி திரும்பிக்கொள்ளும் அழகு என்று சின்ன சின்ன காட்சிகள் சிறப்பான ஸ்கிரீன் அனுபவத்தை கொடுத்துவிடுகிறார்.

ஆர் ஜே பாலாஜி , வாய்க்கு நான் , வம்புக்கு நீங்கள் என்று ஒரு பெரிய அடிமைக்கூட்டத்தை வைத்துக்கொண்டு நியாயம் கேட்டு கோர்ட்டுக்கு வரும் அப்பாவிகளை சுரண்டி பிழைக்கும் கொடூர வில்லனாக அட்டகாசமாக நடித்திருக்கிறார்.

திரையரங்கில் பலர் மீது கருப்பு இறங்கி ஆடிக்கொண்டிருப்பதே சாய் அபயங்கரின் இசைக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய அங்கீகாரம் , இதற்கு மேல் என்ன சொல்வது !

படம் பார்ப்பவர்களுக்கு ஒரே ஒரு ஆசை தான் சார் ! கருப்பு மகிமையால் நீதிமன்றத்தில் வாய் குளறி , தனது கட்சிக்காரரையே போட்டுக்கொடுக்கும் ஆர் ஜே பாலாஜி போல , தனது கட்சிக்காரர் என்று பார்க்காமல் யார் அந்த சார் ? என்பதை சம்பந்தப்பட்டவர்களை வைத்து சட்டமன்றத்தில் உளற வைத்துவிட்டால் , பல ஆண்டுக்கேள்விக்கு ஒரு பதில் கிடைத்தது போல ஆகிவிடும். ருப்பு படத்தில் நீதிமன்ற காட்சிகள் முடிந்தபிறகு, கடைசியில் ஒரு சட்டமன்ற காட்சி வருவதால் இந்த நப்பாசை!

கருப்பு கனிவுடன் பரிசீலிப்பாரா ?

மற்றபடி கருப்பு , 300 கோடி க்கும் மேல் அடிக்கப்போகும் சூர்யாவின் காந்தாரா !