a K. Vijay Anandh review
கல்வியையும் சற்குணத்தையும் பிரிக்கமுடியாது போல ., வாகை சூடவா படத்தில் ஒவ்வொருவருக்கும் அடிப்படைக்கல்வி கிடைக்கவேண்டும் என்கிற கருத்தைஸ் சொன்னவர் , அந்த அடிப்படை கல்வியை முடித்துக்கொண்டு அரசுவேலைக்கு செல்ல எழுதும் எக்ஸாமில் நடக்கும் முறைகேடுகளை அம்பலப்படுத்தியுள்ளார்.
ஒரு வாரத்தில் நடக்கும் கதை இந்த எக்ஸாம். க்ரூப் 2 மாதிரியான ஒரு முக்கியமான தேர்வு நடைபெறவிருக்கிறது. முறைகேடுகள் அதிகமாக நடைபெறுகிறது என்று அறியப்படும் , ஊட்டியில் ஒரு குறிப்பிடட பகுதிக்கு டெபுடேஷன் டி எஸ் பி ஆக , அதிதி பாலன் அனுப்பப்படுகிறார். அவரை அதிரடியாக கடத்தி ஆள்மாறாட்டம் செய்து அவருக்கு பதிலாக துஷாரா விஜயன் டி எஸ் பி ஆக செல்கிறார்., அவரை அனுப்புவது அப்பாஸ்.
எதற்கு இந்த ஆள் மாறாட்டம் ? எதற்காக ஒரு தனியார் கோச்சிங் செண்டர் குறிவைக்கப்படுகிறது ? எதற்காக ஒரு குறிப்பிட்ட தேர்வு மையம் காவல்துறையின் கண்காணிப்பு வளையத்திற்குள் வருகிறது ..? ஒரு சீனியர் எஸ் பி ஏன் இந்த விஷயத்தில் கண்டுகொள்ளாமல் இருக்கிறார் ? துஷாரா விஜயன் யார் ? அவருக்கும் அப்பாஸுக்கும் என்ன தொடர்பு ? கோச்சிங் செண்டர் நடத்தும் நரேன் மணி யார் ? என்கிற பல கேள்விகளுக்கான விடை , அடுத்தடுத்த எபிசோடுகளில் ஆச்சிரியப்படும் வகையில் விரிகிறது.
துஷாரா விஜயனுக்கு தற்காப்பு கலைகள் மற்றும் துப்பாக்கி சுடுதல் ஆகியவற்றை அப்பாஸ் கற்றுக்கொடுக்கும் போது , இவர்கள் ஏதேனும் நக்சல் இயக்கத்தை சார்ந்தவர்களாக இருப்பார்களோ என்கிற சந்தேகம் எழும் .
இதில் , துஷாரா விஜயன் , அதிதி பாலன் மற்றும் சிறுவயது ஜெயசூர்யா – வளர்ந்த நரேன் மணி ஆகிய மூவருக்கும் இடையில் நடக்கும் சம்பவங்களே , அதிலும் பள்ளி இறுதி முதல் அரசுப்பணிக்கு தேர்வாக போட்டித்தேர்வு எழுதும் காலம் வரை நடக்கும் சம்பவங்கள் மூன்று பேரின் வாழ்க்கையை எப்படி புரட்டிப்போடுகின்றன என்பதை , மிகவும் எளிமையாக அதேநேரம் மிகவும் அழுத்தமாக பதிய வைத்து விடுகிறார் சற்குணம்.
ஜெயசூர்யா , மாவட்ட அளவில் பள்ளி இறுதி ஆண்டு தேர்வில் தங்கப்பதக்கம் வாங்கிய மாணவன் , மீனவ தாயாரின் அகால மரணத்திற்கு பிறகு, தனது மேற்படிப்பு கனவை தியாகம் செய்துவிட்டு தனது அக்காவுடன் ஏதாவது ஒரு வேலை கிடைக்காத என்று பயணப்படும் காட்சிக்கள் கண்ணீர் வரவழைக்கும் ரகம். முதலிலேயே வந்துவிடும் அந்த எபிசோட் ஏதோ கொரியன் படம் அல்லது ஹாலிவுட் படம் பார்ப்பது போன்ற பிரமையை ஏற்படுத்திவிடுகிறது. நிறுத்தி நிதானமாக பேசும் இளம் வயது ஜெயசூர்யாவின் உடல்மொழியை வளர்ந்து பிறகு நரேன் மணி மூலம் காட்டிய விதம் அருமை. இருவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
வாத்துமேய்க்கும் அம்மாவுடன் வளர்ந்தாலும் , வாழ்க்கையில் படித்து பெரிய ஆளாக வரவேண்டும் என்கிற கனவுடன் , மிகவும் நேர்மையுடன் பயணிக்கும் துஷாரா விஜயன் , அரசு வேலைக்கான போட்டித்தேர்வில் நடக்கும் தில்லுமுல்லுவை அதிதி பாலன் மூலம் அறிந்து எதிர்க்கும் காட்சிகள் அருமை.
தாசில்தாரின் மகளான அதிதி பாலன் என்ன பண்ணுவார் ? நடைமுறையில் இருக்கும் தில்லுமுல்லுகளை பயன்படுத்தி வேலை வாங்கிவிடுகிறார் .
ஐ ஏ எஸ் கனவுடன் பயணிக்கும் அப்பாஸ் , ஒரு சிறைக்காவலாராக பணியாற்றும் கதையை சொல்லுமிடத்திலும் எக்ஸாம் தொடர் எமோஷனலாக கனெக்ட் ஆகிவிடுகிறது.
ஊட்டியில் , டி எஸ் பியின் டிரைவராக வரும் காவலர் சரவணஷக்தி , ” நேர்மையில்லாத ஒரிஜினல் … நேர்மையான டூப்ளிகேட் .. ஆகிய இருவரில் யாருக்கு சல்யூட் அடிக்க தோன்றுகிறதென்றால் , அது ஜான்சிக்கு தான் ..” என்று சொல்லும் இடம் அருமை. ஒவ்வொரு படங்களிலும் எம் எஸ் பாஸ்கருக்கென்று இப்படி ஸ்கோர் செய்ய ஒரு காட்சி அமைந்துவிடும் , அதுபோல சரவணஷக்திக்கு இந்தக்காட்சி !
ஒரு கட்டத்தில், என்னடா இது துஷாரா விஜயனையும் அதிதி பாலனையும் சும்மா பேசவிட்டு வேடிக்கை பார்க்க வைத்துவிடுவார்களோ என்கிற சலிப்பு தோன்றும் அந்த நொடி, இருவருக்கும் இடையில் மறுபடியும் ஒரு ஹாலிவுட் பட சண்டைக்காட்சி போன்று ஒன்றை அமைத்து பார்வையாளர்களை நிமிர்ந்து உட்கார வைத்துவிடுகிறார்கள். அந்த எபிசோடை மிஸ் செய்து விடாதீர்கள்.
பல லட்சம் இளைஞர்களின் கனவுகளை சிதைக்கும் வகையில், நீட் தேர்வு முறைகேடுகள் என்று அனைத்து வகையான போட்டித்தேர்வுகளிலும் முறைகேடுகள் உண்மையாகவே நடந்து கொண்டிருக்கும் நிலையில் எக்ஸாம் தொடர் , பெரிய வரவேற்பை பெறும் என்றால் அது மிகையல்ல.
Optional Mark Recognition சுருக்கமாக OMR ஷீட் போன்ற டைட்டில் டிசைன் , அருள் அமரேந்திரனின் அட்டகாசமான ஒளிப்பதிவு , சாம் சி எஸ் இன் அட்டகாசமான இசை என்று விறு விறுப்பான தொடராக எக்ஸாம் , மிகப்பெரிய வெற்றி பெறும் !