போகுமிடம் வெகுதூரமில்லை

mysixer rating 4.5

73

a K. Vijay Anandh review

மனைவியின் பிரசவத்தேவைக்காக, ஒரு சவத்துடன் தனியாளாக நெல்லைக்கு பயணமாகும் விமல். கருணாஸ் லிப்ட் கேட்கும் வரை அமைதியாக செல்லும் அந்த பயணம், அடுத்த ஒவ்வொரு நிமிடமும் சுவராஸ்யமும் போராட்டமுமாக நெல்லைக்கு சென்று சேர்கிறது.

பக்கா சென்னைக்காரரான கருணாஸ், நாடக கலைஞர் நரோவில் நளினமூர்த்தியாக, நாஞ்சில் தமிழ் பேசுகிறார். அதுவரை சென்னை பாஷை பேசாத விமல், பிணவூர்தி குமாராக சென்னை பாஷை பேசி வித்தியாசப்படுத்தியிருக்கிறார்.

கருணாஸ் , அரசியல் என்கிற சாக்கடைக்குள் அல்லது சாக்கடையாகிப்போன தமிழக அரசியலுக்குள் விழாமல் இருந்து நடிப்பை மட்டுமே பிரதானமாக கொண்டிருந்தால் இந்நேரம் பான் இந்திய நடிகராக சக்கை போடு போட்டுக்கொண்டிருப்பார். சமீப காலமாக சிறப்பான வேடங்களில் நடித்து வரும் அவருக்கு இந்த கூத்து கலைஞர் நாஞ்சில் நளின மூர்த்தி வேடம் ஒரு மைல்கல் எனலாம். உயிரோடு இருக்கும் வரை கிடைக்காதது , ஒரு நாள் அவருக்கு கிடைக்கிறது. கருணாஸுக்காக ரசிகர்கள் கண்கலங்குவார்கள்.

விமலுக்கும் இப்படம் அடுத்த கட்டம் எனலாம், படத்தின் முதல் பிரேமிலிருந்து கடைசி பிரேம் வரை அவருக்கு கையறு நிலைதான். மனிதர் அட்டாகாசமாக பொருந்திப்போகிறார்.

நெல்லையில் அப்பாவின் உடலுக்காக காத்திருக்கும் முறையாக பிறந்த மகன் நரேன், முறையில்லாமல் பிறந்த பவன் மற்றும் தீபா. அப்பாவின் இறுதி சடங்கை நடத்தி காட்டி நாம கூத்தியாளுக்கு பொறந்தவங்க இல்லை என்று நிரூபிக்க கொந்தளிக்கும் தீபா, அமைதியாக பயமுறுத்தும் ஆழ்கடலாக பவன்.

கடைசி காலத்துல நம்ம கூட இல்லாவிட்டாலும் , அவருக்கு மூத்த மகன் என்கிற வகையில் இறுதி சடங்கை நடத்திவிட வேண்டும் என்கிற பரிதவிப்பில் நரேன்.

இறுதியில் இருவருமே இறுதி சடங்கை நடத்துகிறார்கள் , அது தான் உருக்கமான கிளைமாக்ஸ்.

விமலின் மனைவியாக வரும் மெரி ரிக்கெட்ஸ் மற்றும் தாத்தா சோலை மற்றும் விமலின் உயரதிகாரி சண்முகமாக வரும் சார்லஸ் வினோத் , ஜமீன்தார் வேல ராமூர்த்தி , நரேனின் மாமாவாக வரும் மனோஜ் குமார் என்று அனைவரும் நிறைவாக நடித்திருக்கிறார்கள்.

மெல்லிய அலைகள் வருடும் கடற்கரையில் நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தவர்களை திடீரென பேரலை ஒன்று ஆழ்கடலுக்குள் இழுத்து சென்றது போன்ற உணர்வு இந்தப்படம் பார்க்கும் பொழுது ஏற்படும் என்றால் அது மிகையாகாது.

என் ஆர் ரகுநந்தனின் இசை, டெமில் சேவியர் எட்வர்ட்ஸ் இன் ஒளிப்பதிவு, எம் தியாகராஜனின் எடிட்டிங் அற்புதமாக கைகொடுத்துள்ளன .

மைக்கேல் கே ராஜாவின் சிந்தனைக்கு நிசசயம் ஜே போட வேண்டும். அருமையான கதைக்களம் நேர்த்தியான திரைக்கதை என்று போகுமிடம் வெகுதூரமில்லை ரசிகர்களை கட்டிப்போடப்போவது நிசசயம்.

போகுமிடம் வெகுதூரமில்லை , பயணங்கள் நம் கையில் இல்லை.