a K.Vijay Anandh review
பொதுவாக மலையாள படங்கள் அல்லது மலையாள சாயல் இருக்கும் படங்கள், ஒரு சிறு சம்பவத்தை எடுத்துக்கொண்டு அதிலிருந்து ஒரு அற்புதமான சஸ்பென்ஸ் திரில்லராக திரைக்கதை அமைத்து ரசிகர்களை சீட்டு நுனியில் உட்கார வைத்துவிடும்.
அதைப் போலத்தான் இந்த படத்திலும், ஜேடி நிறுவனத்தின் அதிபர் முகேஷ் ஒரு வாகன விபத்தில் இறக்கிறார். அவரது உடல் ஐந்து நாட்களுக்குப் பிறகு கிடைக்கின்றது. அவர் கொல்லப்பட்டாரா ? அல்லது நிறுவனத்தில் ஏற்பட்டுக் கொண்டிருந்த தொடர் பிரச்சினைகளால் தற்கொலை செய்து கொண்டாரா ? என்கிற கோணத்தில் காவல்துறை விசாரணையை ஆரம்பிக்கின்றது.
அதே நேரத்தில் வணிக ஆலோசகர் வேத நாராயணன் ஆக வரும் அர்ஜுன் இந்து சம்பவத்திற்குள் தன்னை இணைத்துக் கொள்கிறார். அது தொழிலதிபர் முகேஷின் மகளாக வரும் நிக்கி கல்ராணிக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அவரது சந்தேகம் நியாயமானது தானா அர்ஜுன் என்ன செய்கிறார் என்பதை விறுவிறுப்பாக சொல்லி ரசிகர்களுக்கு சிறப்பான விருந்து படுத்திருக்கிறார் இயக்குனர் தாமர கண்ணன்.
இதில் கதாநாயகன் என்று தனியாக யாரும் இல்லை என்றாலும் புற்றுநோயால் இறந்து போன தனது தந்தை நினைவாக அவர் இறந்த நாளான புதன் கிழமை தோறும் புற்றுநோய் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை இலவசமாக தனது ஆட்டோவில் மருத்துவமனையில் சேர்க்கும் கிரிஷ் நெய்யார் , தனித்து தெரிகிறார். நிஜ வாழ்க்கையில் இப்படி ஒரு சிலர் ஆத்மார்த்தமான சேவைகளை செய்து வந்தாலும், திரைப்படங்களில் ஒரு கதாபாத்திரம் இப்படி செய்வதாக காட்டுவது மேலும் பல பேரை இந்த சேவைக்கு இழுக்கும் அது மானிட சமுதாயத்திற்கு நன்மை பயக்கும் என்றால் மிகை அல்ல. அந்த விதத்தில் அவரது கதாபாத்திரத்தை பாராட்டுவோம்.
நான் லீனியர் முறையில் சொல்லப்படும் கதையில் அர்ஜுனனின் அறிமுக காட்சியே அட்டகாசமான ஆக்சன் விருந்து படைக்கிறது. அவர் யாரை நையப்படைத்தார் என்கிற விவரத்தை இரண்டாவது பாதியில் நிக்கி கல்ராணி இடம் இதுவரைக்கும் பொழுது உண்மைகள் அவருக்கும் புரிகிறது. ஆக்சன் கிங் உடன் நடித்திருப்பதாலோ என்னவோ நிக்கி கல்ராணியும் இந்த படத்தில் சண்டை காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். தந்தையையும் தாயையும் அடுத்தடுத்து பறிகொடுத்து விட்டு கலங்கி நிற்கும் இடத்தில் நம்மையும் கலங்க வைத்திருக்கிறார் நிக்கி கல்ராணி.
ஆக்ஷன் கிங் அர்ஜுன் பற்றி தனியாக சொல்வதற்கு என்ன இருக்கிறது ? மனிதர் வழக்கம்போல ஆக்ஷன் காட்சிகளில் மற்றும் எமோஷனல் காட்சிகளிலும் சிறப்பாக தடுத்திருக்கிறார். அவரது கட்டுக்கோப்பான உடல் தகுதி இன்றைய நடிகர்களுக்கு மட்டுமல்லாது அத்தனை ரசிகர்களுக்கும் ஒரு முன்னுதாரணம் என்று சொன்னால் அது மிகையல்ல.
தொழிலதிபர் முகேஷின் தந்தையாக சுவரில் போட்டோவில் மட்டும் தான் ஹரிஷ் பேரிடி இருப்பாரா என்று முதல் பாதியில் எண்ணிக் கொண்டிருக்கும் பொழுதே, அவரை வைத்து கிளைமாக்ஸ்சில் அற்புதமான விருந்து படைத்திருக்கிறார் இயக்குனர் தாமர கண்ணன்.
மனித சமூகம் எவ்வளவோ முன்னேறி விட்ட இந்த காலகட்டத்திலும் நாடு முழுவதும் ஏன் உலகம் முழுவதும் நரபலி என்கிற சக மனிதன் சக மனிதன் க்கு கிடைக்கும் கொடூரம் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இதனை பத்திரிக்கை செய்திகளிலும் நாம் படிக்கிறோம் தான், அதையே மையமாக வைத்து விருந்து படத்தினை ஒரு விறுவிறுப்பான விருந்தாக படைத்திருக்கிறார் இயக்குனர் தாமர கண்ணன்.