அமரன்

5/5 Rating

201

a K.Vijay Anandh review

முன்குறிப்பு: அமரன் படத்தின் விமர்சனத்தை INS Virat  உள்ளிடட விமானம் தாங்கி கப்பல்கள் மற்றும் INS Adyar உள்ளிடட கடற்படை தளங்களில் பணியாற்றிய எனது உடன்பிறந்த இளைய சகோதரன்,  K சரவண கணேசன் மற்றும் காஷ்மீரில் இராணுவ பொறியியல் பிரிவில் பணியாற்றிய எனது பள்ளித்தோழன் குமார் ஆசாரி உள்ளிடட அனைத்து இராணுவ வீரர்களுக்கும் சமர்ப்பிக்கின்றேன்.

——————————————

அமரன், பல்வேறு மடைமாற்றங்களால் தேசியத்திலிருந்து விலகிச்சென்று விடுவார்களோ நம் தமிழக மக்கள் என்றிருந்த ஒரு கவலையை போக்கும் விதமாக வந்திருக்கும் அற்புதமான படம்.

பொதுவாக ஒரு சாதனையாளனை பற்றிய பயோபிக் எடுக்கும் பொழுது அது ஆவணப்படம் போன்ற தோற்றத்தை ஏற்படுத்திவிடக்கூடும் வாய்ப்புகளே அதிகம். ஆனால், மேஜர் முகுந்தின் வாழ்க்கை அதுவும் அவர் கல்லூரி முடிக்கும் நிலையிலிருந்து, ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்தலைவனை வேட்டையாடிவிட்டு வீரமரணம் அடையும் அந்த 2006 இல் இருந்து 2014 வரையிலான 8 ஆண்டுகளில் எந்த பெரிய படைப்பாளியின் கற்பனைக்கும் எட்டாத ஒரு அற்புதமான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார். அதற்குள் , ஒரு இந்திய இந்து பிராமண இளைஞனின் உயரிய கனவு, அழகான காதல் , சகோதரிகளுக்கு திருமணம் செய்து வைக்கும் – பெற்றோர்களுக்கு ஒரு வீடு வாங்கும் – கடமை , காதலியின் வீட்டார் சம்மதம் பெற காத்திருப்பு , எல்லையில் நாட்டிற்கான உயிர்த்தியாகம் என்று அனைத்தும் அடங்கி விடுகிறது.

சிவகார்த்திகேயன், அமரன் படம் மூலம் இந்திய அளவில் மாஸ் ஆக்ஷன் நடிகர்கள் வரிசையில் இடம் பிடித்து விட்டார். அங்கே SRK என்றால், இனி இங்கே SK தான் . சாய் பல்லவியுடனான கண்ணியமான காதல் , தீவிரவாதிகளுக்கு எதிரான சமரசமில்லா இராணுவ நடவடிக்கைகள் என்று, ஒரே நேரத்தில் ஆர்டிக் அண்டார்டிகா என்று இருவேறு துருவங்களில் அற்புதமாக பயணித்திருக்கிறார். தனது வழக்கமான நம்ம வீட்டு பிள்ளை தோற்றத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டு படம் பார்க்கும் ஒவ்வொரு ரசிகர்களும் பிரமிக்கும் வண்ணம் துணிச்சல் மிக்க இராணுவ வீரர் மேஜர் முகுந்தாகவே வாழ்ந்திருக்கிறார். இராணுவ பணியிடத்தில் கூட நமாஸ் செய்யவும் பைபிள் படிக்கவும் நேரம் ஒதுக்கும் வீரர்கள் மத்தியில் மேஜர் முகுந்த் , விக்ரம் சிங் உள்ளிட்ட இந்து வீரர்கள் 24 மணி நேரமும் கடமையே, கடமை மட்டுமே கண்ணாக பணியாற்றும் காட்சிகள் மெய் சிலிர்க்க வைக்கின்றன. உள்ளதை உள்ளபடியே காட்சிப்படுத்திய இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமிக்கு பாராட்டுகள்.

மத அடிப்படையில் தீவிரவாதிகளுக்கு துணைபோகும் மக்கள் இராணுவ வீரர்கள் மீது கல்லெறிவதும் அதையும் தாங்கிக்கொண்டு அவர்களுக்கு எந்த சேதமும் விளைவிக்காமல் தங்களது இலக்கான தீவிரவாதிகளை மட்டுமே குறி வைத்து வேட்டையாடும் இந்திய இராணுவத்தின் வீரம் ஈடு இணையில்லாதது. அப்படி பொது மக்கள் ஒருவருக்கு கூட ஆபத்தில்லாமல் இரண்டு ஆல்டாப்புகளையும் , அதிரடியாக போரிட்டு அழித்து ஒழிக்கிறார் மேஜர் முகுந்த் . அந்தக்காட்சிகளில், மேஜர் முகுந்தின் வீரமிக்க தருணங்களை அப்படியே கண் முன் கொண்டு வந்திருக்கிறார் சிவகார்த்திகேயன். எவனோ ஒருத்தனை அடிச்சு டான் ஆனவன் இல்லடா…. அவன் அடிச்ச ஒவ்வொருத்தனும் டான் தான் டா என்று சொல்லுவது போல , தனது பணிக்காலத்தில் மேஜர் முகுந்த் வேடடையாடிய இரண்டு பேருமே எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் இந்தியா வை சீரழித்து கொண்டிருந்த ஹிஸ்புல் முஜாகிதீன் என்கிற இஸ்லாமிய தீவிரவாத அமைப்பின் தலைவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது .

தனது குழந்தைக்கு சொல்லிக்கொடுத்த பாரதியார் பாடலான அச்சமென்பதில்லையே … என்கிற வரிகளை சக இராணுவ வீரர்களுடன் சிவகார்த்திகேயன் முகுந்த் வரதராஜனாக பாடிக்கொண்டே செல்லும் காட்சிகள் மெய்சிலிர்க்கும் இடங்கள்.

சாய் பல்லவி , இந்த கதாபாத்திரத்திற்கு இன்னொருவரை யோசிப்பதே கடினம் என்கிற அளவிற்கு சிறப்பாக நடித்திருக்கிறார்.

தனது ஒவ்வொரு படங்களுக்கும் அதற்கு முந்தைய படங்களை விட ஒரு படி சிறப்பாக இசையமைத்து இசை இளவரசராக வலம் வரும் ஜிவி பிரகாஷ்குமார் , அமரன் படத்தின் மூலம் இசைப்பேரரசனாக உயர்ந்து நிற்கிறார்.

படத்தின் ஒவ்வொரு காட்சிகளை பற்றியும் சிலாகித்து கொண்டே இருக்கலாம். இப்படிப்படட அற்புதமான படைப்பை கருவாக்கி உருவாக்கிய ராஜ்குமார் பெரியசாமிக்கு தமிழ்த்திரையுலகம் மட்டுமல்ல , ஒட்டுமொத்த இந்தியர்களும் கடமைப்பட்டுள்ளவர்களாகிறார்கள்.

மேஜர் முகுந்தின் வாழ்க்கை வரலாறாக வெளிவந்திருக்கும் இந்தப்படம், ஒட்டுமொத்த இராணுவ வீரர்களுக்கும் பெருமை சேர்த்திருக்கிறது என்றால் அது மிகையல்ல. இந்தப்படத்தை தயாரித்திருக்கும் கமல்ஹாசன் மற்றும் சோனி நிறுவனத்திற்கும் பாராட்டுகள் .

மேஜர் முகுந்தின் மறைவிற்கு பிறகு அவரது நிஜமான மனைவி டெல்லி சென்று குடியரசு தலைவரிடம் அசோகா விருது பெறும் காட்சிகளை இணைத்திருக்கலாம்.

அமரன், நாளைய இந்தியாவின் நம்பிக்கைகளான நமது குழந்தைகளுடன் சென்று பார்த்து ரசிக்க வேண்டிய படம்

பின்குறிப்பு:

2013 இல் சென்னைக்கு மிக அருகே 20 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் தனது பெற்றோர்களுக்கு ஒரு சிறிய பிளாட் வாங்க திட்டமிட்டு வங்கி கடனுக்கு விண்ணப்பித்து , கடன் வந்து விட்டால், மாத தவணையாக இவ்வளவு ரூபாய் கட்டவேண்டும் என்று தான் வாங்குகின்ற சில ஆயிரம் ரூபாய் சம்பாத்தியத்தில் , எல்லையில் இருந்து கொண்டு கணக்கு போடும் போது மனது கனக்கிறது. அதெல்லாம் ஒரு பிரச்சினை இல்லை, நானும் இப்பொழுது ஆசிரியர் வேலைக்கு போகப்போகிறேன் சமாளிச்சுடலாம் என்று வீட்டில் இருந்து அவரது மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸ் கணவனின் கடமையில் பங்கு போட தயாராகும் போது , இந்தியா முழுவதிலும் பல மாநிலங்களிலும் அதிகாரவர்க்கத்தின் மனைவியர் எவ்வளவு பொட்டி வசூல் என்று அன்றாடம் வழி மேல் விழி வைத்தது காத்திருக்கும் அவலங்கள் நினைவுக்கு வந்து ஆத்திரமும் வருகிறது.

இன்றைய தேதியில் 150 கோடி பேர் வாழும் , 3,287,263 சதுர கிமீ அளவு கொண்ட இந்தியாவை கண்ணின் இமை போல் காத்து நிற்கும் எல்லை சாமிகளான 14 லட்சம் இராணுவ வீரர்கள், அவர்களின் குடும்பங்கள் வசிக்க ஆளுக்கு 1000 சதுர அடியில் சொந்தமாக ஒரு Flat கூட இல்லாமால் இருப்பது ஏற்புடையது அல்ல. ஒருவர் இராணுவத்தில் சேரும் பொழுதே அந்தந்த மாநில அரசுகள் ,On Demand மற்றும் தேவையின் அடிப்படையில் – ஏனென்றால் உயிர்த்தியாகம் செய்ய மனதார விரும்பி இராணுவத்திற்கு செல்லும் ஒருவன் – ஏற்கனவே சொந்த விடு இருந்தால் இன்னொரு இலவச வீட்டிற்கு ஆசைப்படமாடடான் – அவர்களுக்கு வீடும் , அவர்களது குழந்தைகளுக்கு தரமான கல்வியும் , குடும்பத்தார்க்கு போதுமான அரவணைப்பும் கொடுக்க முன்வரவேண்டும் . அமரன் சிறப்பு திரையிடலை பார்த்த தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இப்படி ஒரு அறிவிப்பு வெளியிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.