a K Vijay Anandh review
கெட்ட போலீஸ் நல்ல அப்பா, நல்ல வாத்தியார் கெட்ட அப்பா, கெட்ட அப்பாவாக தெரிந்தாலும் நல்ல அப்பா இந்த மூன்று அப்பாக்களின் மகன்கள் மற்றும் ஒரு மகள் ஆகியோரை மையமாக வைத்து நிறங்கள் மூன்று என்கிற இந்த படத்தை இயக்கியிருக்கிறார் கார்த்திக் நரேன் .
ஒரு சிறிய பட்ஜெட் கௌதம் வாசுதேவன் படம் போல மிகவும் ஸ்டைலிஷ் ஆக இயக்கப்பட்டு இருக்கிறது இந்த படம். துருவங்கள் பதினாறு படத்திலிருந்து கார்த்திக் நரேன் இதனை நிரூபித்து விட்டார்.
அதர்வா ஒரு துடிப்பான, இயக்குனர் ஆக முயற்சித்துக் கொண்டிருக்கும் ஒரு இளைஞராக இந்தப் படத்தில் இயக்குனராக நடித்திருக்கும் ஜான் விஜய் சொல்வது போல பேசாம நடிக்க போயிருடா என்று சொல்லத்தக்க உடல் மொழி கொண்ட உதவி இயக்குனராக வசீகரித்து இருக்கிறார். சினிமாக்களில் மட்டும் இயக்குனர்களாக நடிப்பவர்கள் கதாநாயகர்களை விட அழகாக இருப்பது வழக்கமான ஒன்று தானே.
இந்த படத்தில் ஒரு இயக்குனர் கனவை எட்டி பிடிக்கும் நிலையில் உள்ள அதர்வா அளவுக்கு அதிகமாக போதை பொருட்களை உபயோகப்படுத்தும் காட்சிகள் கொஞ்சம் விரும்பத்தகாதவைகளாக அமைந்திருக்கின்றன என்றால் மிகை ஆகாது.
கதையைத் திருடிவிட்ட ஒரு பெரிய இயக்குனரிடம் இந்த படத்தில் காட்டப்படுவது போல ஒரு உதவி இயக்குனர் அவரது சூட்டிங் ஸ்பாட்டுக்கே சென்று சண்டை போட இயலுமா என்பது மில்லியன் டாலர் கேள்வி.
சரத்குமாரும், ரகுமானும் தங்களது நீண்ட அனுபவ நடிப்பில் ஒரு துளியாக, மிகவும் அசால்டாக இயல்பாக நடித்து அசத்தி இருக்கிறார்கள்.
தனது வாடிக்கையாளர்களுக்கு , ஆறுதலாக இருக்கும் ஒரு நல்ல டீக்கடைக்காரராக சின்னி ஜெயந்த் உம் சிறப்பாக நடித்திருக்கிறார்.
அம்மு அபிராமி, கவனிக்கத்தக்க ஒரு கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். அவரது தோழனாக வருபவரும் அவரது நண்பர்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
படத்திற்கான தலைப்பு வைப்பதிலும் கதை சொல்லும் விதத்திலும் கார்த்திக் நாரே ஒரு நம்பிக்கை தரும் இயக்குனராக முத்திரை பதித்து கொண்டிருக்கிறார்.
நிறங்கள் மூன்று, ரசிகர்களுக்கு புது அனுபவம்!