ஜீப்ரா

mysixer rating 4.5

26

கன்டென்ட் சிறப்பாக அமையும் பட்சத்தில் அந்த படம் எந்த அளவு வரவேற்பை பெறும் என்பதை நிரூபிக்கும் விதத்தில் வெளியாகி இருக்கிறது  ஜீப்ரா

வங்கியில் ரிலேஷன்ஷிப் மேனேஜராக நாயகன் சத்யதேவ்,  காதலி பிரியா பவானி சங்கர்  வேறு ஒரு வங்கியில் வேலை செய்து வருகிறார்.  பிரியா பவானி சங்கர், ஒருவருக்கு நான்கு லட்ச ரூபாயை அனுப்புவதற்கு பதில் வேறு ஒருவருக்கு தவறுதலாக அனுப்பி பெரிய சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்.  நாயகியை, நாயகன் சத்யதேவ் தனது மூளையை பயன்படுத்தி சில பல யுக்திகளை கையாண்டு பணத்தை மீட்டு கொடுத்து விடுகிறார். இந்த சிக்கலில் இருந்து காதலியை மீட்டாலும் வேறு ஒரு பெரிய பண சிக்கலில் மாட்டிக் கொள்கிறார் சத்யதேவ். வில்லன் தாலி தனஞ்செயாவின் கோடிக்கணக்கான பணம் ஒன்று மாறி மாறி வேறு வேறு அக்கவுண்டுகளுக்கு நாயகன் பெயரில் பணப்பரிமாற்றம் நடந்து விடுகிறது. அந்த பணத்தை நான்கு நாட்களில் மீட்டுக் கொடுக்க வேண்டும் என வில்லன் ஹீரோவுக்கு கெடு வைக்கிறார். மாத சம்பளம் வாங்கும் நாயகன் அவ்ளோ பெரிய தொகையை வில்லனுக்கு திருப்பி கொடுத்தாரா? இல்லையா? வில்லனுக்கும் நாயகனுக்குமான இந்த பண ரேஸில் யார் ஜெயித்தார்கள்? இதுவே இப்படத்தின் மீதி கதை.

இதுவரை மக்களுக்கு பரிச்சயம் இல்லாத ஒரு கதை. குறிப்பாக வங்கிகளில் பண பரிமாற்றம் குறித்த செயல்பாடுகள் எப்படி இருக்கும், அதை செய்யும் கணக்கர்களின் வேலை என்ன, மேலாளர்கள் நினைத்தால் என்னவெல்லாம் செய்ய முடியும், வங்கிகளின் அட்மினிஸ்ட்ரேஷன் விஷயங்கள் என்ன, அது எப்படி இயங்குகிறது போன்ற விஷயங்களை மிகத் துல்லியமாக ஆராய்ந்து அதை சரியான முறையில் பயன்படுத்தி கதையும் திரைகதையும் அற்புதமாக அமைத்து மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றி படமாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக். சினிமாவுக்கு வருவதற்கு முன் வங்கியில் பணி புரிந்திருக்கும் இவர் வங்கி எப்படி இயங்கும் என்று நன்றாக அறிந்து வைத்திருப்பதால் அந்த அனுபவத்தை கச்சிதமாக திரைக்கதைக்குள் புகுத்தி ஜீப்ரா வை மாஸ் ஹிட் படமாக கொடுத்திருக்கிறார்.

படம் ஆரம்பித்து ஒரு வங்கி எப்படி இயங்குகிறது அதில் என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பது போல் தொடங்கி போகப் போக வித்தியாசமாகவும் ஜெட் வேகத்திலும் திரைக்கதை பயணித்து எந்த ஒரு இடத்திலும் தொய்வில்லாமல் இறுதியில் நிறைவாக படம் முடிகிறது. அதேசமயம் எந்தெந்த இடங்களில் மாஸ் எலிமெண்ட்ஸ் தேவையோ, எந்தெந்த இடங்களில் கமர்சியல் எலிமெண்ட்ஸ் தேவையோ அதையெல்லாம் சரியான இடத்தில் கணக்கச்சிதமாக அமைத்து வளர்ந்து வரும் தெலுங்கு மற்றும் கன்னட நடிகர்களை வைத்துக்கொண்டு மிகப்பிரமாண்டமாகவும், நேர்த்தியாகவும் ரசிக்கும்படி படத்தைக் கொடுத்திருக்கிறார்.

நாயகன் சத்யதேவ் மிகப்பெரிய புத்திசாலியான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். எந்தெந்த காட்சிகளுக்கு எவ்வளவு நடிப்பு தேவையோ அதை  அழகாக வெளிப்படுத்தி ரசிக்க வைத்திருக்கிறார். படத்திற்கு வில்லன் என்று சொல்வதை விட இன்னொரு நாயகன் என்று சொல்லலாம் அந்த அளவு நாயகனுக்கு சமம் என்பதை தாண்டி கிட்டத்தட்ட நாயகனாகவே மாறி இருக்கிறார் கன்னட நடிகர் தாலி தனஞ்செயா. இவரின் வெறித்தனமான தெறிக்கவிடும் ஸ்கிரீன் பிரசன்ஸ் படத்தை வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் சென்று இருக்கிறது. இவருக்கும் சத்தியதேவுக்கும் ஆன  ஆடு புலி ஆட்டம் மிகச் சிறப்பாக அமைந்து படத்தையும் வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறது.

வழக்கமான நாயகியாக அறிமுகமாகி போக போக கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் மிக முக்கியமான திருப்புமுனையாகவும் மாறி இருக்கிறார் பிரியா பவானி சங்கர்.

காமெடிக்கு மிகச் சிறப்பாக கை கொடுத்திருக்கிறார் நடிகர் சத்யா அக்காலா. இவர் வரும் காட்சிகள் எல்லாம் தியேட்டரில் கைதட்டல்களாலும் விசில்களாலும் அதிர்கிறது. சின்ன சின்ன விஷயத்தை கூட மிக சிறப்பாக செய்து காமெடிக்கு நான் தான் கேரண்டி என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார்.

சிறிய கதாபாத்திரம் போன்று தெரிந்தாலும் கடைசியில் வந்து பட்டையை கிளப்புகிறார் நடிகர் சத்யராஜ். வழக்கம் போல் இவரது எதார்த்தமான நடிப்பு மிக கனகச்சிதமாக அமைந்து படத்தையும் தூக்கி நிறுத்த உதவி இருக்கிறது. மற்றொரு வில்லனாக நடித்திருக்கும் சுனில் தனக்கு என்ன வருமோ அதையே இந்த படத்திலும் மிகச் சிறப்பாக கொடுத்து படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறார். இவரது காமெடி கலந்த எரிச்சல் ஊட்டும் வில்லன் கதாபாத்திரம் மிகச் சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கிறது. அதற்கு முத்தாய்ப்பாக இவரின் நடிப்பும் சிறப்பாக அமைந்திருக்கிறது. அனைத்து நடிகர்களும் அவரவர் வேலையை மிக சிறப்பாக செய்து படத்தையும் தாங்கி பிடித்து இருக்கின்றனர்.

இசையமைப்பாளர் ரவி பஸ்ருர் இசையில் பாடல்களை காட்டிலும் பின்னணி இசை மிக பிரம்மாண்டமாக அமைந்திருக்கிறது. குறிப்பாக கேஜிஎப் படத்தில் நாம் எந்த அளவு ஒரு இசை கோர்வையை உணர்ந்தோமோ அதே அளவான ஒரு இசை கோர்வையை இந்த படத்திலும் கொடுத்து ப இருக்கிறார். படத்திற்கு மிகப்பெரிய பக்கபலமாக அமைந்திருக்கிறது இவரின் பின்னணி இசை.

சத்யா பொன்மார் ஒளிப்பதிவில் காட்சிகள் மிக மிக நேர்த்தியாகவும் அதே சமயம் மிக மிக பிரம்மாண்டமாகவும் அமைந்து,  இவர் இன்னொரு ஹீரோ எனும் அளவிற்கு ஒளிப்பதிவு அமைந்திருக்கிறது.

கதை, நேர்த்தியான திரைக்கதை அதற்கு ஒத்துழைத்த அற்புதமான நடிகர்கள் என்று இந்த படம் முழுக்க முழுக்க நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பை மட்டுமே நம்பி வெளிவந்திருக்கிறது.

 

கன்டன்ட்டையும் மட்டுமே நம்பி பன்மொழிகளில் வெளியாகி இருக்கும் இந்த திரைப்படம் பெரிய நடிகர்கள் பெரிய செட்டப்புகள் இருந்தால் மட்டும் போதாது கதையும் திரைக்கதையும் தான் முக்கியம் என்பதை மற்றொரு முறை நிரூபித்து மிகப்பெரிய பிளாக் பஸ்டர் வெற்றியை கொடுத்திருக்கிறது. ஒரு படம் எந்த பில்டப்புகளும் இன்றி கதையும் கண்டெண்டும் மிகவும் ஸ்ட்ராங்காக அமைந்து சிறப்பாக அமையும் பட்சத்தில் எந்தவித அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்படாத விமர்சகர்களாலும் ஒன்றும் செய்ய முடியாது என்பதை இந்த திரைப்படம் மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது.

ஜீப்ரா , இந்த வார ரேசில் ஜெயிக்கும் குதிரை!