ஜாலியோ ஜிம்கானா

mysixer rating 3.5/5

122

a K Vijay Anandh review

ரேவதி ஊர்வசி ரோகினி ஆகியோருடன் மாட்டிக் கொண்ட மகளிர் மட்டும் நாகேஷ் கதாபாத்திரம் போன்று, அபிராமி, மடோனா செபஸ்டின், இன்னும் இரண்டு தங்கைகள் ஆகியோருடன் மாட்டிக் கொண்டு படம் முழுவதும் வரும் பிரபுதேவா. நிச்சயம் இந்த கதாபாத்திரம் பிரபுதேவாவின் நடிப்பு பட்டியலில் பிரதான இடத்தை பிடிக்கும் என்றால் அது மிகையல்ல. படம் ஆரம்பித்த மூன்றாவது காட்சியிலேயே உயிரை விட்டுவிடும் நாயகன் படம் முழுவதும் பயணித்து திரைக்கதையை உயிர்ப்புடன் வைத்திருப்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம். சக்தி சிதம்பரத்திற்கே இந்த படம் ஒரு சவாலான ஒரு கதைக்களம் தான் என்றால் மிகையாகாது.

என்னதான் சவமாக நடித்தாலும், நாயகிகளின் கற்பனையில் வந்து சிறப்பான ஆட்டத்தையும் போட்டு விடுகிறார் பிரபுதேவா. பொதுநலன் கருதி செயல்படும் ஒரு நேர்மையான வக்கீல் கதாபாத்திரமும் பாராட்டத்தக்கதாய் அமைந்திருக்கிறது. அதிலும் போலி மருத்துவ முகாம்களில் மாட்டிக் கொண்டு ஏமாற்றப்படும் அப்பாவி மக்களுக்கு தீர்வு காணும் பொருட்டு அவர் எடுக்கும் முயற்சிகள் குறிப்பாக இறுதிக்காட்சியில் கண்கலங்க வைத்திருக்கின்றது.

பொம்மலாட்டம் காட்டும்  நடிகையின் பொம்மலாட்ட யுக்தியை பயன்படுத்தி, பிணமாக நடித்திருக்கும் பிரபுதேவாவை கிளைமாக்ஸ் காட்சியில் சண்டை போட வைத்திருப்பது நிச்சயம் ரசிகர்களுக்கு புதிய அனுபவம்.

அபிராமி இந்த படத்தில் ஒரு நீண்ட நகைச்சுவை அவதாரம் எடுத்து இருக்கிறார். வெள்ளந்தி தனமான அவரது நகைச்சுவைகள ரசிக்க முடிகிறது. நாயகன் பிரபுதேவா உயிரற்ற உடலாக நடித்துக் கொண்டிருக்கும் நிலையில், கிட்டத்தட்ட நாயகன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார் என்று சொல்லும் அளவிற்கு மடோனா செபஸ்டியனுக்கு, கனமான கதாபாத்திரம். அவர் உடை மாற்றும் பொழுது பிரபுதேவா அவரை பார்ப்பது போல இருக்கிறது என்று சொல்ல அவரது தங்கை பாடி மாற்றுவதை பாடி பார்க்கவா போகிறது என்று போகிற போக்கில்  பேசிச் செல்வது கிரேசி மோகனின் காமெடி கிளாசிக்குகளை நினைவுபடுத்துகிறது.

ஜான் விஜய், எம் எஸ் பாஸ்கர், ரெடின் கிங்ஸ்லி, சாம்ஸ், கதிர் மற்றும் யோகி பாபு என்று நகைச்சுவைக்கு உத்தரவாதம் தரும் நீண்ட நடிகர்கள் பட்டியல் ரசிகர்களுக்கு விருந்தாய் அமைந்திருக்கிறது.

நாம் தமிழர் சீமானை நினைவுபடுத்தும் விதமாக மேடையில் பேசி, ஜாதி அரசியல் நடத்தும் ஜெகன் கவிராஜ் ஒரு குணசத்திர நடிகர் முத்திரை பதித்திருக்கிறார்.

மதுசூதனன் வில்லத்தனமான அரசியல்வாதியாக வந்து விறுவிறுப்பு கூட்டி இருக்கிறார். நாஞ்சில் சம்பத் காமெடி முதல்வராக கலக்கி இருக்கிறார்.

லாஜிக் எதுவும் எதிர்பார்க்காமல் இந்த படத்தை பார்த்து ரசியுங்கள் என்று படம் ஆரம்பிக்கும் முன்னரே இயக்குனர் சக்தி சிதம்பரம் கேட்டுக் கொண்டு விடுவதால், படத்தை ஒரு பொழுதுபோக்கு அம்சமாக மட்டுமே பார்த்து மகிழலாம்.

ஜாலியோ ஜிம்கானா, படம் முழுவதும் சிரிக்கவும், இறுதிக் காட்சியில் அழவும் வைத்திருக்கிறது!