a K Vijay Anandh review
படம் ஆரம்பித்த முதல் 30 45 நிமிடங்களுக்கு பாடல் பாடல் மயம் தான், அதுவும் எழுந்து ஆடவைக்கும் டப்பாங்குத்து பாடல். ஏதோ ஒரு முடிவோடு தான் இந்த படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் முத்து வீரா என்று நினைக்கும் பொழுது, படம் மையக்கதை நோக்கி பயணிக்கிறது. ஆனால், ஆரம்பத்தில் துள்ள வைத்த டப்பாங்குத்து பாடலும் இசையும் இறுதி காட்சிகளில் அழ வைத்து விடுகிறது.
டப்பாங்குத்து சாதாரண படம் அல்ல.
காதல் சுகுமார் என்று அடைமொழியுடன் பயணித்தாலும் கமல்ஹாசன் போன்ற பெரிய நடிகர்களுடன் நடித்தாலும் இந்த நடிகருக்கு இன்னும் பெரிய தீனி வேண்டும் என்கிற அளவில் ஒரு திறமைசாலியாக மிளிரும் சுகுமார் , இனி டப்பாங்குத்து சுகுமார் என்று அழைக்கப்படுவார் எனும் அளவிற்கு படம் முழுவதும் அவரே ஆக்கிரமிக்கிறார். நாயகனின் உற்ற நண்பனாகவும் அவரது டப்பாங்குத்து குழுவில் நகைச்சுவை வேடம் ஏற்பவராகவும் வரும் சுகுமார் இந்த படத்திற்கு ஒரு பெரிய தூணாக விளங்கி இருக்கிறார் என்றால் அது மிகை அல்ல.
டப்பாங்குத்து குழு நடத்தும் நாயகன் மரிச்சியம் பாண்டியனாக வரும் சங்கர பாண்டியன் அச்சு அசலான ஒரு டப்பாங்குத்து கலைஞராகவே வாழ்ந்திருக்கிறார். நிஜத்தில் அவர் டப்பாங்குத்து கலைஞர் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. கரகாட்டக்காரன் படத்தில் எப்படி ராமராஜன் ஒரு கரகாட்ட கலைஞராகவே வந்து மக்கள் மனதில் இடம் பிடித்தாரோ அதைப்போலவே சங்கர பாண்டியனும் ஒரு டப்பாங்குத்து கலைஞராக இந்த படத்தில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார்.
கரகாட்டக்காரன் என்றாலே கோவை சரளாவை விட்டு விட முடியாது, நளினமும் நகைச்சுவையும் சேர்ந்த கதாபாத்திரத்தில் அவர் விஸ்வரூபம் எடுத்திருப்பார். கிட்டத்தட்ட அதையொத்த ஒரு கதாபாத்திரம் என்றாலும் நகைச்சுவைக்கு பதில் ஒரு உணர்வுபூர்வமான ராசாத்தி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருக்கிறார், துர்கா.
நாயகி தனம் ஆக வரும் தீப்திராஜ், மற்றவர்களை விட தானும் சளைத்தவர் அல்ல என்பது போல குழந்தைத்தனத்துடன் நடித்திருந்தாலும் டப்பாங் குத்து ஆடலிலும் தன் வாழ்க்கையை விட்டுக் கொடுக்கும் இடத்திலும் கைதட்டல்களை அள்ளி விடுகிறார்.
அது என்னங்கடா கேவலமான கொடூரமான விலங்களுக்கு தர்மலிங்கம் என்ற பெயர் வைக்கிறீங்க என்று கேட்கின்ற அளவிற்கு ஆண்ட்ரூஸ் வில்லனாக மிரட்டி இருக்கிறார்.
கதை திரைக்கதை வசனம் எழுதி இருக்கும் எஸ்டி குணசேகரனை விட்டு விட முடியாது. ஒரு தொழில் ரீதியான படைப்பாக டப்பாங்குத்துவிற்கு சிறப்பாக எழுதியிருக்கிறார்.
படம் முழுவதும் சரவணன் இசையும் தீனாவின் நடனமும் தமிழகத்தின் நதிகள் போல பெருக்கெடுத்து ஓடி இருக்கின்றன.
ஒவ்வொரு மாதமும் மலரும் மலரையும் தமிழகத்தில் ஓடும் முக்கிய நதிகளின் பெயர்களையும் தாங்கிய பாடல் வரிகள் அருமை.
அழகான படம் கொடுத்த விதத்தில் அழுத்தமான முத்திரை பதித்திருக்கிறார் இயக்குனர் முத்துவீரா .