a K Vijay Anandh review
ஆயக்கலைகள் 64 என்று கேள்விப்பட்டிருக்கிறோம், உறுதியாக சொல்ல முடியும் இணைய தொடருக்கு திரைக்கதை அமைப்பது 65 ஆவது கலை என்று . இந்த கூற்றை காக்கி சர்க்கஸ் பார்ப்பவர்கள் ஏற்றுக்கொள்வார்கள்.
ஒரு வரியில் சொல்லிவிடத்தக்க எளிமையான கதை கரு, சுவாரசியமான திரைக்கதை இதுதான் இணைய தொடர்களுக்கான வெற்றி சூத்திரம்.
ராஜேஷ் மாதவனும் அவரது காதலியும் பிழைப்புக்காக அல்ல கெத்துக்காக திருடுகிறார்கள். அந்த திருட்டு அந்த ஊரில் அமைந்துள்ள ஜெயில் வரை நீள்கிறது. ஜெயிலுக்குள்ளேயே அவ்வளவு கண்காணிப்புகளையும் மீறி யார் திருடினார்? அதனை எப்படி காவல்துறை கண்டுபிடிக்கிறார்கள் என்பது தான் விறுவிறுப்பான அதேசமயம் மிகவும் சுவாரசியமான காக்கி சர்க்கஸ் தொடரின் திரைக்கதை.
ஜெயில் வளாகத்தில் இருந்து எதை வேண்டுமானாலும் திருடி இருக்கலாம் ஆனால் ஒரு சிறிய கண்ணகி கோயில், அந்த கோயிலில் வைக்கப்பட்டுள்ள உண்டியல், அதில் சிறை கைதிகள் போடும் காணிக்கைகள் ஆண்டுதோறும் கண்ணகி கோயில் திருவிழாவிற்கு அந்த கோயிலின் நிர்வாகிகளால் எடுத்துச் செல்லப்படுவது, திருவிழாவிற்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் திருடு போன பணத்திற்கு சமமாக கடன் வாங்கி உண்டியலை நிரப்பும் இளம் காவல்துறை அதிகாரி என்று மிகவும் அட்டகாசமான ஒரு கதைக்களமாக காக்கி சர்க்கஸ் ரசிகர்களை கவரும் என்றால் அது மிகை அல்ல.
சமீபத்தில் பார்த்த படங்கள் இணைய தொடர்கள் இன்று எதுவாக இருந்தாலும் மிகச்சிறந்த ஓப்பனிங் காட்சி என்று சொல்லத்தக்க வகையில் காக்கி சர்க்கஸ் தொடரின் ஓப்பனிங் அமைந்துள்ளது.
கதாநாயகன் பாத்ரூமுக்குள் அமர்ந்திருக்கும் காட்சியை விடுங்கள், அதனைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட காட்சியை இங்கே பார்க்கலாம்.
சிறைக்குள் வரும் கைதிகளுக்கு புத்தகங்கள் கொடுக்கும் ஜெயிலர் முனிஷ்காந்த், வெறுமனே புத்தகத்தை கொடுத்து விடாமல் திரும்பிப் போகும்போது அதனை முழுமையாக படித்து புரிந்து நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும் என்கிற நிபந்தனையுடன் கொடுக்கும் காட்சி அற்புதம்.
புத்தகத்தின் தலைப்புகள் வேறு ஒரு எழுத்தாளர்களின் தலைப்பாக இருந்து சர்ச்சைக்குள்ளாமல் பார்த்துக் கொண்டது திரைக்கதை அமைப்பாளர்களின் புத்திசாலித்தனம்.
அப்படி ஒரு ஜாலியான பொறுப்பான ஜெயிலர் அவருடன் பணியாற்றும் இளம் காவலர்கள் என்று காக்கி சர்க்கஸ் அருமையாக பயணிக்கின்றது.
ஜெயிலில் பணிபுரியும் நாயகனாக சுபாஷ் செல்வன், நடிகர் ரகுமானை அவரது அறிமுக காலகட்டத்தில் பார்த்தது போலவே ஒரு முக சாயல் . நேர்மையும் அப்பாவித்தனமும் கலந்த கலவையாக மிகவும் அற்புதமாக நடித்திருக்கிறார்.
அவரது ஜோடியாக நடித்திருக்கும் வின்சு ரேச்சல் உம் மிகவும் இயல்பாக நடித்திருக்கிறார்.
கண்டக்டராக வரும் ராஜேஷ் மாதவனுக்கு அவர் பணியாற்றும் பேருந்தில் காதல் மலரும் காட்சி அழகு, ஒரு சிறு கவிதை என்று சொன்னாலும் மிகையல்ல.
கிட்டத்தட்ட, மைக்கேல் மதன காமராஜன் காமேஸ்வரன் திரிபுரசுந்தரியை நினைவுபடுத்தியதை மறுப்பதற்கு இல்லை. ஆனால் இது வேறு ஒரு ரகம்!
சவப்பெட்டிகள் செய்யும் அப்துல் வழக்கம் போல அந்த கதாபாத்திரமாகவே மாறி ஸ்கோர் செய்து விடுகிறார்.
மிகவும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய கதாபாத்திரமாக சிறைக்கு வரும் கைதிகளுக்கு புத்தகங்கள் கொடுக்கும் ஜெயிலராக நடித்திருக்கும் முனிஷ்காந்த் , சந்தேகமே இல்லாமல் அவரது கேரியரில் இது ஒரு முக்கியமான கதாபாத்திரம்.
தவிர, உலகம் முழுவதும் உள்ள சிறைச்சாலைகள் இந்த வழக்கை ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு கதாபாத்திர அமைப்பு.
தொழில் நுட்ப ரீதியாக, இசையமைப்பாளர் விபின் பாஸ்கர், எடிட்டர் அர்ஜுன் பாபு, ஒளிப்பதிவாளர் நீரஜ் ரவி என்று அனைவரின் பங்களிப்பும் பிரமாதமாக இருக்கின்றது.
எழுதி இயக்கி இருக்கும் அமீன் பேரிஃப் , நல்ல இயக்குனர் மட்டுமல்ல, ஆழமான சிந்தனையாளர் என்பதையும் நிரூபித்திருக்கிறார்!
சர்க்கஸ்கள் அரிதாகிவிட்ட இந்த காலத்தில் வீட்டுக்குள்ளிருந்தே, அவ்வளவு ஏன் உள்ளங்கையில் வைத்துக் கொண்டே Z5 இல் பார்த்து மகிழக்கூடிய சர்க்கஸ் ஆக வெளிவந்திருக்கிறது காக்கி சர்க்கஸ்!