Miss You

mysixer rating 3.5/5

95

a K Vijay Anandh review

7 miles per second, இன்று பிரபஞ்சத்திலேயே இதுதான் அதிக வேகம், அதாவது இந்த தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் தான் அதிக வேகம் ஒளிந்து இருக்கிறது, வித்தியாசமான பெயர். நிறுவனத்தின் பெயரில் இருக்கும் வேகத்துடன் ஒப்பிட்டு இந்த திரை கதையை சொல்வதானால், சித்தார்த், பெங்களூரில் நாயகி ஆஷிகாவை சந்திக்கும் வரை மிக மெதுவாக செல்லும் திரைக்கதை அதன் பிறகு அவர் யார் என்று தெரிய வரும்  தருணத்தில் இருந்து 7 மைல்ஸ் பர் செகண்ட் ஐ  ஓவர் டேக் செய்யும் அளவிற்கு விரைவாக பயணிக்கின்றது.

நிஜமாகவே கொஞ்சம் வித்தியாசமான திரைக்கதை தான்.  ” உனக்கு எல்லாம் மறந்து போச்சு… எனக்கு எல்லாமே ஞாபகத்துல இருக்கு…” இதுதான் இந்த திரை கதையின் மைய வசனம். வசனகர்த்தா அசோக்கிற்கு பாராட்டுகள் படம் முழுவதுமே அளவான நேர்த்தியான வசனங்கள் இந்த படத்திற்கு அதிக வலு சேர்த்து இருக்கிறது.

சித்தா படத்தில் கிராமப்புற சித்தப்பாவாக அருமையாக நடித்திருந்த சித்தார்த் இந்த படத்தில், காதலுக்கு உருகும் நகர்ப்புற இளைஞனாக ஒரு அழகான கதாபாத்திர மாற்றத்திற்குள் தன்னை கச்சிதமாக பொருத்தி வசீகரிக்கிறார். மனைவியுடன் திரையரங்கில் மொபைலை சைலன்டில் போட்டுவிட்டு படம் பார்க்க அமரும் சித்தார்த் நல்ல அறிவுரை வழங்கி இருக்கிறார். இதுபோன்ற சின்ன சின்ன காட்சிகளில் அவரது இன்டலெக்சுவல் பளிச்சிடுகிறது.

ஆஷிகா, தமிழ் சினிமாவிற்கு கிடைத்த இன்னொரு அழகான கதாநாயகி ரசிகர்களை கவர்வார் என்பது நிச்சயம். அவர் இந்தப் படத்திலேயே அப்பாவியான தோற்றத்திலும் துணிச்சலான தோற்றத்திலும் ஆக சிறப்பாக நடித்திருக்கிறார்.

வழக்கம்போல நட்பு கூட்டணியில் கருணாகரன்,  பாலா,  மாறன் மற்றும் சஷ்டிகா என்று கலகலப்பு ஊட்டுவதுடன் கதை நகர்விற்கும் உதவி இருக்கிறார்கள்.

பட ஆக்கத்திற்கு வருவோம் …

திரைக்கதையின் ஊடாக ஆங்காங்கே அள்ளித்தெளித்திருக்கும் பாடல் வரிகள் அருமை இசையமைப்பாளர் ஜிப்ரான் மற்றும் பாடல் ஆசிரியர்களை சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார் இயக்குநர், என் ராஜசேகர். தமிழ் திரையுலகம் நிச்சயம் இவரை மிஸ் செய்து விடக்கூடாது என்கிற அளவிற்கு இந்த படத்தில் தன்னுடைய முழு திறமையையும் வெளிப்படுத்தி இருக்கிறார்.

நடன அமைப்பாளர்கள் மற்றும் சண்டை பயிற்சியாளர்களின் பங்கும் இந்த படத்தில் அசாத்தியமாக இருக்கிறது.

இந்த படத்திற்கு ஐ நெவர் மிஸ் யூ அல்லது பெல்லா காபி என்று பெயர் வைத்திருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும், சரிதானா என்று படம் பார்த்து சொல்லுங்கள் ரசிகர்களே!

மிஸ் யூ படத்தை மிஸ் செய்து விடாதீர்கள் ரசிகர்களே !

பின் குறிப்பு:

சமீபத்தில் வெளியாகும் தமிழ் திரைப்படங்களை பார்க்கும் பொழுது ஒரு சந்தேகம் எழுகிறது,

தமிழக திரைப்படைப்பாளிகளுக்கும் கதாசிரியர்களுக்கும் ஒரு விஷயம் மிகவும் சவாலாக இருக்கிறதோ என்று தோன்றுகிறது. கதை எழுத ஆரம்பிக்கும் பொழுது வில்லனாக ஆளுங்கட்சி மினிஸ்டர் மகன் என்று  எழுதினால் படம் வெளிவரும் நேரத்தில், இன்னொரு ஆட்சி அமைந்து, அது நமது படைப்பாளிகளுக்கு ஒரு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி விடுகிறதா ? அந்த ஆட்சி மாறிவிட்டது என்பது போன்ற வசனங்களை திணிக்க வேண்டியதாக இருக்கிறதா ? ஏனென்றால் சமீபத்தில் வெளியான சொர்க்கவாசல் படத்திலும் இப்படிப்பட்ட வசனங்கள் இடம் பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.அரசியல்வாதிகளை வேண்டுமானால் ஏமாற்றி விடலாம்,  ஆனால் ரசிகர்களை ஏமாற்ற முடியுமா ? அவர்கள் புரிந்து கொள்வார்கள், இரண்டுமே ஒரே மாடல்கள் தான் என்று. ஒன்று, சிறுபான்மை ஓட்டு வங்கிக்கு பயந்து பொட்டு வைக்க பயப்படும் மாடல் இன்னொன்று பொட்டு வைத்துக் கொண்டு பெரும்பான்மையை ஏமாற்றும் மாடல். மற்றபடி இரண்டு மடல்களுக்குமே குணம் ஒன்று தான் என்பதை, ரசிகர்கள் அறிவார்கள். படைப்பாளிகளுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த தர்ம சங்கடம், தமிழகத்தை பொறுத்தவரை 2026 க்கு பிறகு நிரந்தரமாக நீங்கிவிட, இயற்கை அருள் புரியும் என்று நம்புவோம். அதன் பிறகு அரசியல்வாதிகளோ அவர்களது வாரிசுகளோ வில்லன்களாக சித்தரிக்கப்பட நேர்ந்தால், கதை நடக்கும் காலம் 2026க்கு முன் என்று போட்டுவிட்டால் போதுமானதாக இருக்கும்.