சூது கவ்வும் 2 – நாடும் நாட்டு மக்களும்

Rating 3.5/5

144

a K Vijay Anandh review

இலவசங்களுக்கு ஆசைப்பட்டு ஓட்டு போடுவது எவ்வளவு இழிவான செயல் மற்றும் அது அந்த ஓட்டினை வாங்கி அதிகாரம் மட்டத்தில் அமரும் அரசியல்வாதிகள் ? எப்படி ஊழலில் திளைக்கிறார்கள் ? என்பதை யார் சொன்னாலும் எப்படிப்பட்ட படமாக எடுத்துச் சொன்னாலும் அதனை வரவேற்க வேண்டியது ரசிகர்கள் கடமை.

ஊழலைத் தவிர வேறு ஒன்றும் தெரியாத அரசியல் வாரிசு அருமை நாயகமாய் கருணாகரன் சமகால பல அரசியலின்  வியாதிகளை நினைவுபடுத்துகிறார். ஒரு அப்பாவி மூஞ்சி,  அடப்பாவி என நினைக்கும் அளவிற்கு மக்கள் துரோகம் என்று பயமுறுத்துகிறார். நிதி அமைச்சராக இருப்பது , மக்களுக்கான திட்டங்களை தீட்டுவதற்கு அல்ல கட்சிக்கு நிதி திரட்டுவதும் அதனை வைத்து அடுத்த தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுப்பதற்கும் என்பதை சிறப்பாக செய்து காட்டியிருக்கிறார்.

மூத்த அரசியல்வாதிகளாக வாகை சந்திரசேகர், எம் எஸ் பாஸ்கர் மற்றும் ராதா ரவி ஆகியோர் கடந்த 60 ஆண்டுகால தமிழக அரசியல்வாதிகளை நினைவுபடுத்துகிறார்கள்.

நேர்மையும் மக்கள் நலனும் இங்கே எதற்கும் உதவாது என்பதை அந்த மூத்த அரசியல்வாதிகள் மௌனமாக ஒத்துக் கொண்டு, இளைய ஊழல் அரசியல்வாதிகளுக்கு வழிவிட்டு ஒதுங்கிக் கொள்ளும் யதார்த்தம் சூது கவ்வும் 2 படத்தினை கொண்டாட வைத்திருக்கிறது.

இதில் மிர்ச்சி சிவாவின் பங்கு என்ன ? அதாவது அந்த இளம் அரசியல்வாதி அடிக்கும் ஊழலில் பங்கு என்ன என்று கேட்கவில்லை ? படத்தில் அவர் பங்கு என்ன என்று கேட்கத் தோன்றுகிறது. கொஞ்ச நாள் அருமை நாயகத்தை கடத்தி பத்திரமாக வைத்திருந்து மறுபடியும் ஆட்சி கட்டிலில் அமர வைக்கும் வரை அவருக்கு தெரிந்தோ தெரியாமலோ உதவும், அன்றாடச் செலவுக்கு மட்டுமே திருடிப் பிழைக்கும் கும்பலின் தலைவராக மிர்ச்சி சிவா வருகிறார்.

அவருக்கு துணையாக வரும் அசால்ட் ரகு மற்றும் காலி கல்கி கலகலப்பு ஊட்டுகிறார்கள். படத்தில் இந்த மூவரும் சேர்ந்து அடிக்கும் சரக்குக்கு தனி பட்ஜெட் போட்டு இருக்கிறார்கள் போலும்.

கண்ணுக்குத் தெரியாத அதாவது பிறர் கண்ணுக்கு தெரியாத மிர்ச்சி சிவா கண்ணுக்கு மட்டுமே தெரிந்த காதலி அம்முவாக ஹரிஷா ஜஸ்டின்,  பரவாயில்லை ரகம்.

வழக்கம்போல யோக் ஜே பி காவல்துறை அதிகாரியாக அசத்துகிறார். இந்தப் படத்தில் ஒரு சிறப்பம்சமாக இன்னொரு காவல்துறை அதிகாரியாக வரும் கராத்தே கார்த்தியை குறிப்பிட்டு சொல்ல வேண்டும்.  மைக்கேல் மதன காமராஜன் படத்தில் வரும் பீம் பாய் மற்றும் பொன்னம்பலம் ஆகியோர் சேர்ந்த கலவையாக கராத்தே கார்த்தி சிறப்பாக நடித்திருக்கிறார்.

முதலிலேயே குறிப்பிட்டது போல, இலவசங்களை கொடுத்து ஓட்டு வாங்கும் அரசியல்வாதிகளை தோல் உரிப்பது யாராக இருந்தாலும் அவர்களை வரவேற்று கொண்டாட வேண்டியது ஓட்டு போடும் தொண்டர்களின் கடமை மட்டுமல்ல படம் பார்க்கும் ரசிகர்களின் கடமையும் ஆகும்.

அரசியல் சூது கவ்வாமல் இருக்க, சி வி குமார் தயாரித்து எஸ் ஜே அர்ஜுன் இயக்கியிருக்கும் சூது கவ்வும் 2 நாடும் நாட்டு மக்களும் படத்தை பார்த்து அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்.