a K Vijay Anandh review
நீண்ட நாட்களுக்கு பிறகு தங்கம் என்கிற அற்புதமான ஒரு அம்மா கதாபாத்திரம். தன் குஞ்சுகளை இக்கட்டுகளில் இருந்து தனது இறகுகளால் மறைத்து காக்கும் கோழி போன்ற அம்மாவாகவும், தேவைப்படும் பொழுது வீறு கொண்டு எழுந்து எதிரிகளை வேட்டையாடும் பொழுது புலி போன்ற அம்மாவாகவும் ஆக பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தி மிகவும் அற்புதமாக நடித்திருக்கிறார் தங்கம் அம்மாவாக வரும் ஸ்ரீரேகா.
குணாநிதி, இரண்டாவது படம் ஆனால் 200 படங்களில் நடித்த ஒரு அனுபவ நடிகரைப் போன்று மிகவும் சவாலான தர்மன் கதாபாத்திரத்தில் மிகவும் இயல்பாக நேர்த்தியாக நடித்திருக்கிறார்.
கருப்பு மற்றும் சிலுவை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இதயகுமார் மற்றும் மாஸ்டர் அஜய் உம் படம் முழுவதும் நாயகனோடு பயணித்து தங்களது பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
தாய் மாமனாக வரும் காளி வெங்கட் வழக்கம் போல கொடுத்த கதாபாத்திரத்தில் வாழ்ந்து இருக்கிறார். தமிழ் சினிமாவின் சமகால குணச்சித்திர நடிகர்களுள் மிகவும் குறிப்பிடத்தக்க நடிகர் காளி வெங்கட்.
படத்தில் தனியாக ஒரு கதாநாயகி தேவை இல்லை என்கிற அளவிற்கு நாயகனின் மனம் கவர்ந்த நாயகியாக அவரது செல்ல நாய் படம் முழுவதும் பயணிக்கிறது.அந்த நாயை காப்பாற்றும் படலமே அழகு என்கிற முழு படமும்.
வில்லன் செம்பன் வினோத் அவரது மனைவியாக வரும் கொற்றவை மற்றும் அடியாட்களாக வரும் சரத் அப்பானி உள்ளிட்ட அனைவரும் நேர்த்தியாக நடித்திருக்கிறார்கள்.
இன்னும் ஒரு வீச்சு தான் வில்லன் தலை தனியாக உருளும் என்கிற நிலையில், எனக்கு எல்லா உயிரும் ஒன்னு தாண்டா இன்று தர்மனாக நாயகன் பேசும் இடத்தில் இயக்குனர் எஸ் பி சக்திவேல் ஒரு சிறந்த படைப்பாளியாக நிமிர்ந்து நிற்கிறார்.
அஜிஷின் இசையில், நாட்டுப்புறப் பாடல்கள் போன்று ஒலிக்கும் அத்தனை பாடல்களும் மற்றும் பின்னணி இசையும் அருமை.
பசுமை போர்த்திய மலைகளையும் பிரம்மாண்ட அருவிகளையும் ஆறுகளையும் காட்சிப்படுத்தியிருக்கும் பாண்டிக்குமாரின் ஒளிப்பதிவு அட்டகாசம்.
தயாரிப்பாளர், சங்கமித்ரா சௌமியா அன்புமணி இடமிருந்து அலங்கு ஒரு தரமான படைப்பாக வெளிவந்திருக்கிறது.
எல்லா உயிர்களும் ஒன்று தான், என்கிற வாசகம் மிகவும் சாதாரணமாக தெரிந்தாலும் அது இன்றைய காலத்தின் கட்டாய தேவையான விஷயமாக இருப்பது நிதர்சனம்.
அலங்கு, தமிழ் சினிமாவிற்கு இன்னொரு மணிமகுடம்.