a K Vijay Anandh review
பொதுவாக குடும்ப படங்கள் அல்லது குடும்பஸ்தன் பற்றிய படங்கள் என்றாலே 40 வயதிற்கு மேற்பட்ட நடிகர்கள் அல்லது பேரன் பேத்தி எடுத்தவர்கள் ஆகியோர்தான் மைய கதாபாத்திரங்களாக இருப்பார்கள். குடும்ப படங்கள் என்றாலே நினைவுக்கு வருவது வி சேகர் இயக்கிய பெரும்பாலான படங்கள் அவரது படங்களில் மேற்குறிப்பிட்டபடி, பெரியவர்கள் தான் முக்கிய வேடம் ஏற்று நடித்திருப்பார்கள்.
இந்த குடும்பஸ்தன் அதாவது குடும்பஸ்தனாக நடித்த மணிகண்டன் இன்னும் திருமணமே ஆகாதவர். ஐஏஎஸ் படிக்க ஆசைப்படும் ஒரு எஸ்சி பெண்ணை காதலிக்க வைத்து திருட்டு கல்யாணமும் செய்ய வைத்து குடும்பஸ்தன் ஆக்கி, அழகு பார்த்திருக்கிறார் அறிமுக இயக்குனர் ராஜேஸ்வர் காளி சாமி. அழகு பார்த்திருக்கிறார் என்று சொல்வதை விட அழ வைத்துப் பார்த்திருக்கிறார் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும், இன்னும் ஒரு படி மேலே போய் திருவிளையாடல் தருமி போல தனியாக புலம்ப வைத்திருக்கிறார் என்று சொன்னால் மேலும் பொருத்தமாக இருக்கும். அட நாகேஷிற்கு பிறகு ஏன் தனியாக புலம்புவது என்கிற காட்சி அமைக்கப்படவில்லை அல்லது அமைக்கப்பட்டிருந்தாலும் ஏன் நினைவில் இல்லை என்பது ஒரு கேள்விக்குறி தான். அந்த அளவிற்கு இந்த படத்தில் தான் பிரச்சினைகளை சந்திக்கும் ஒவ்வொரு முறையும் தனியாக புலம்பும் இடத்தில் மணிகண்டன் ரசிகர்களை, கொன்று (இந்த கொன்றுவிற்கு பறித்து விடுதல் என்று அர்த்தமாகும் ) விடுகிறார். குறிஞ்சி மலர் போல அவ்வப்பொழுது நல்ல நடிகர்கள் தமிழ் சினிமாவில் மலர்ந்து அடுத்த 10 12 வருடங்களுக்கு அவர்களது தலையில் தூக்கி சுமக்கிறார்கள் ஒட்டுமொத்த திரையுலகையும். அப்படிப்பட்ட ஒரு நல்ல இளம் நடிகராக, மணிகண்டன்.
ஷான்வி மேக்னா , அரசு அங்கீகரிக்கப்பட்ட ஜாதி பட்டியலின் படி, அரசின் சாதீய படிநிலைகளின் படி, தன்னைவிட உயர்ந்த சாதியில் ஒருத்தனுக்கு வாக்கப்பட்டு ஒவ்வொரு நாளும் உறவினர்களால் புண்படுத்தப்படும் கதாபாத்திரம். இனி மீண்டு வருவோமா என்கிற ஒரு கட்டத்தில் அதாவது பிரசவ வலியில் , மருத்துவமனைக்கு போகும் வழியில் அத்தனை காலமும் அடக்கி வைத்த ஆற்றாமைகளை வெடித்து சிதறடிக்கிறார்.சமாளிப்பதாக நினைத்துக் கொண்டு நீ சமைத்தத தானம்மா நாங்க சாப்பிட்டோம், என்று என்று ஆர் சுந்தரராஜன் கூற நான் சோறு தானே சமைச்சேன் என்கிற ஒற்றை பதிலில் ஓராயிரம் அதிர்வுகளை விதைத்து விடுகிறார்.
குடும்பஸ்தன்கள் என்று பெயர் வைத்திருக்கலாம் எனும் அளவிற்கு இன்னொரு குடும்பஸ்தனாக வீட்டில் புலி அலுவலகத்தில் எலி என்பது போல சக அலுவலர்களால் கோமாளியாக சித்தரிக்கப்படும் அளவிற்கு ஒரு வித்தியாசமான குடும்பஸ்தனாக குரு சோமசுந்தரம். வாய்ப்பு கிடைக்கும்போது எல்லாம் தனது மைத்துனனான மணிகண்டனை காலை வாரி விட்டுக் கொண்டே இருந்தாலும், ஒரு கட்டத்தில் அவருக்கு தோளோடு தோள் நிற்கும் இடங்கள் அருமை. அவருக்கு மனைவியாக நடித்திருக்கும் நிவேதிதா ராஜப்பனும் சிறப்பாக நடித்திருக்கிறார்.
இந்த குடும்பஸ்தன்களின், வீட்டு பெரிய குடும்பஸ்தனாக வரும் ஆர் சுந்தர்ராஜன் அவரது மனைவியாக வரும் கொடசநாடு கனகம் ஆகியோரும் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்கள். நீண்ட நாட்களுக்குப் பிறகு ஆர் சுந்தரராஜன் க்கு , பெரிய திரையில் ஒரு சிறப்பான கதாபாத்திரம்.
உறவினராக வரும் பிரசன்னா மற்றும் நண்பர்களாக வரும் ஜென்சன் திவாகர் உள்ளிட்ட அத்தனை கதாபாத்திரங்களும் தங்கள் பங்குக்கு புகுந்து விளையாடி இருக்கிறார்கள்.
தொழில்நுட்ப ரீதியாக குறிப்பிட்டு சொல்ல வேண்டியவர் ஒளிப்பதிவாளர் சுஜித் என் சுப்பிரமணியன் மற்றும் இசையமைப்பாளர் வைசாக். தங்களது துறைகளில் நேர்த்தியாக தங்களது கலைவண்ணத்தையும் இசை ஜாலத்தையும் காட்டி இருக்கிறார்கள்.
முதல் பாராவிலேயே குறிப்பிட்டது போல, நமது நாட்டிற்கு இளைய தலைமுறை குடும்பஸ்தன்களின் தேவை அவசியம். அவர்களால்தான் மக்கள் தொகையில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகம் என்கிற சாதனையை இந்தியா தொடர்ந்து படைத்துக் கொண்டிருக்க முடியும். அதுவே தேசத்தின் வளர்ச்சிக்கும் தொடர்ந்து உறுதுணையாக இருக்கும்.
அந்த வகையில் குடும்பஸ்தன் படத்தை கொடுத்திருக்கும் ஒவ்வொருவரும் பாராட்டுக்குரியவர்களே!