a K Vijay Anandh review
ஆக்சிலேட்டரை மிதித்தால் O – 10 Sec இல் 100 கிலோமீட்டர் பெர் அவர் என்கிற வேகத்தை எட்டிப் பிடிக்கும் கார்களை பார்த்திருப்போம்.
ஆக்சிலேட்டரில் கால் வைத்த அடுத்த நொடியே அரங்கம் அதிரும் ஆச்சரியத்திற்கு சொந்தக்காரர் ஆகிவிட்டார் அஜித் குமார்.
12 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துவிடுமோ என்கிற நிலையில் கடைசியாக ஒரு ஆறு மணி நேர பயணத்திற்கு அஜித் தனது மனைவி த்ரிஷாவுடன் கிளம்புகிறார். அந்த பயணம் முழுவதும் 12 ஆண்டுகால பசுமையான திருமண வாழ்க்கை டைரியாக விரிகிறது. அந்த பயணத்தில் சந்திக்கும் விபரீதங்கள் அதனைத் தொடர்ந்து நடக்கும், அஜித் குமாரின் விறுவிறுப்பான தேடல்கள், அதிர்ச்சியில் உறைய வைக்கும் புதிர்களுக்கான விடைகள் என்று இரண்டாவது பாதி ரசிகர்களை சாய்ந்து உட்கார விடாமல் செய்து விடுகிறது.
நான் இப்படித்தான், இதுதான் நான் என்று தனக்கு தன் வயதிற்கு ஒத்த கதாபாத்திரங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து எந்த விதமான செயற்கை ஒப்பனையிலும் இல்லாமல் இயல்பாக வந்து போகிறார் அஜித் குமார். ஆச்சரியமாக இந்தப் படத்தில் அவருக்கு நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் அமைந்திருக்கின்றன. கண்டிப்பாக பிரியத்தான் வேண்டுமா என்று தனது மனைவியிடம் உருகுவதில் ஆரம்பித்து …. காணாமல் போன அவரை தேடுவதில் காட்டும் தவிப்பு ஆகட்டும் … அவர் இருக்கும் இடம் தெரிவது வரை அமைதியாக இருந்து அத்தனை பேரிடமும் அடி வாங்கும் துயரம் ஆகட்டும் … கொடூரமான வில்லன் கும்பலிடம் இருந்து தன் மனைவியை மீட்பது மட்டுமே குறிக்கோள் என்று போராடும் பொழுது சாகும் வில்லன்களுக்காக வருத்தப்படுவது ஆகட்டும் …. கடைசியில், ஐ லவ் யூ என்கிற ஒற்றை வரியில் ஒட்டுமொத்த காதலையும் சொல்லி மனைவியை அரவணைத்துக் கொள்வதாகட்டும் … இந்தப் படத்தில் அவர் நடிப்பதற்கு நடிப்பு திறமையை வெளிக்காட்டுவதற்கு நிறையவே வாய்ப்புகள் அமைந்திருக்கின்றன அத்தனையையும் அவர் நிறைவாகவே செய்திருக்கிறார்.
திரிஷா, அர்ஜுன், ஆரல் , ரெஜினா, ரம்யா என்று பல பேர் இருந்தாலும் படம் முழுவதும் அஜித் குமார் மட்டுமே ஆக்கிரமிக்கிறார்.
அதனால், தொழில் நுட்ப கலைஞர்களை முதலில் பாராட்டி விட்டு வருவோம்.
அட அனிருத் தான் இசையமைத்தாரா… ? என்று கேட்கத் தோன்றும் அளவிற்கு முதல் பாதியில் சர்வதேச திரைப்பட விழாக்களில் கேட்டு மகிழும் ஒரு அற்புதமான பின்னணி இசையை வழங்கி இருக்கிறார். சமீபத்திய அவரது அதிரடி இசையில் இருந்து விலகி பாடல்களும் மிகவும் அருமையாக இருக்கின்றன.
ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு அஜர்பைஜானை அற்புதமாக படம் பிடித்திருக்கின்றது.
சண்டை பயிற்சியாளர் சுப்ரீம் சுந்தர், சர்வதேச படங்களுக்கு இணையாக ஆக்சன் காட்சிகளை அமைத்திருக்கிறார்.
இன்றைய தேதியில் இந்தியர்களே இல்லாத நாடுகள் இல்லை எனும் அளவிற்கு குறிப்பாக தமிழர்களே இல்லாத நாடுகள் எனும் அளவிற்கு நமது மக்கள் உலகம் முழுவதும் வியாபபித்திருக்கிறார்கள். அப்படியே வியாபித்து இருந்தாலும், 90 விழுக்காடு மக்களுக்கு மேல் தாங்கள் வசிக்கும் நாடுகளில் கடுமையாக உழைத்து தங்களுக்கும் தங்களது சொந்த நாட்டிற்கும் தங்களுக்கு இடம் கொடுத்த நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் அளவிற்கு பெயரெடுத்து வருகிறார்கள். இந்த படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ்கரனே அதற்கு மிகப்பெரிய உதாரணம் . அப்படி இருக்கும் பொழுது, ஒரு பக்கம் கதாநாயகன் கதாநாயகி தமிழர்களாகவும், இன்னொரு பக்கம் வில்லன் மற்றும் குழுவினர் தமிழர்கள் அல்லாதவர்களாகவும் குறிப்பாக அந்த நாட்டைச் சேர்ந்தவர்களாகவும் அல்லது சர்வதேச அளவிலான மாபியாக்கள் என்பதாகவும் வடிவமைத்திருக்கலாம். அப்படி இருந்திருந்தால் இந்த படம் ஒரு சர்வதேச படமாகவே கொண்டாடப்பட்டிருக்கும். அர்ஜுன் மற்றும் ஆரவ் மற்றும் அவரது கூட்டாளிகளான சக தமிழர்கள் வில்லன்களாக இருப்பதற்கு இந்த படத்தின் கதைக்களம் அஜர்பைஜனாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
இதுபோன்ற சில சில குறைகள் இருந்தாலும், விளையாட்டிலோ போரிலோ தொழிலிலோ சாதிப்பதற்கு மட்டுமே விடாமுயற்சி தேவை என்பது அல்ல, அன்பான உறவுகளை தக்க வைப்பதற்கும் இங்கே அதைவிட அதிகமான முயற்சிகள் தேவைப்படுகிறது என்பதாக அமைக்கப்பட்ட இந்த விடாமுயற்சி நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு மட்டுமல்லாது ஒட்டு மொத்த திரை ரசிகர்களுக்கும் ஒரு உந்துதலே!