2K லவ் ஸ்டோரி

3.5/5

91

a K Vijay Anandh review

தனது தோழியை பைக்கில் அழைத்துக் கொண்டு வரும் நாயகன், ஏய் இன்னைக்கு உன்னுடைய பீரியட்ஸ்ல என்று கேட்கும் பொழுது 2 K Kids  கொஞ்சம் ஓவரா போறாங்களோ என்று தோன்றியது, ஆனால் படத்தின் இறுதி காட்சியை பார்க்கும் பொழுது 2k கிட்ஸ் மீது, நாம் இன்னும் அதிகம் நம்பிக்கை வைக்க வேண்டும் என்று தோன்றியது. அப்படி ஒரு ஆரோக்கியமான திரைக்கதையுடன் 2k கிட்ஸ் லவ் ஸ்டோரியை கையாண்டு இருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன்.

நாயகன் ஜெகவீர், இந்த வயதில் இப்படி ஒரு அறிவு முதிர்ச்சியா என்று ஏங்கும் அளவிற்கு,தனது நண்பர்கள் மூலமும் தன் வீட்டு பெரியவர்களின் மூலமும் சம்பந்தமே இல்லாத மற்றவர்கள் மூலமும் வரும் பல்வேறு சிக்கல்களை எளிதாக கையாளுகிறார்.  அவர் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்திற்கு முழுமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

மீனாட்சி கோவிந்தராஜ், தமன்னாவின் ஒரு மினியேச்சராக இந்த படத்தின் கதை அவளை சுற்றியே நடப்பது போன்ற ஒரு பிரமையை ரசிகர்களிடம் ஏற்படுத்தி விடுகிறார்.

ஒரு வெள்ளந்தியான காதலியாக லத்திகா பாலமுருகன், சிறப்பாக வந்து போகிறார்.

ஒரு பக்கம் பால சரவணன் மற்றும் நண்பர்கள் இன்னொரு பக்கம் சிங்கம்புலி மற்றும் அவரது நண்பர்கள் என்று படத்தை கலகலப்பாக கொண்டு போக துணை புரிந்திருக்கிறார்கள்.

பொதுவாகவே சுசீந்திரன் இருக்கும் படங்களில் பாடல்களும் பாடல் காட்சிகளும் அருமையாக இடம் பெற்று இருக்கும். படத்தில் ஆரம்ப கட்டத்தில் வரும் விட்டுக் கொடுத்து …  என்கிற பாடலுக்கான நடனம் மிகவும் சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கிறது. அதில் அந்த காட்சியை படம் பிடிக்கும் இயக்குனராக பால சரவணன் அவரது உதவியாளர்களும் குடையை பிடித்துக் கொண்டு குதித்து ஆடும் காட்சிகள் ரசிகர்களையும் துள்ள வைக்கும் ரகம், நடன இயக்குனர் , ஷோபி பால்ராஜ்க்கு வாழ்த்துக்கள்.

2 K கிட்ஸ்க்கு மட்டுமல்ல, எந்த காலகட்டத்திலும் வாழ்ந்தவர்களுக்கும் வாழப் போகிறவர்களுக்கும் காதலும் காதலும் காமமும் பொதுவானதே. அதை அவர்கள் எப்படி கையாளுகிறார்கள் என்பதே முக்கியமான விஷபம்.

இந்தப் படத்தைப் பொறுத்தவரை 2Kகிட்ஸ்களின் மீது,  நம்பிக்கை வையுங்கள், வேலை வேலை என்று ஓடிக்கொண்டிருக்காமல் அவர்களுடனும் நேரம் செலவிடுங்கள் என்கிற செய்தியை அழகாக பதிய வைத்திருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன்.