Kingston

mysixer rating 4/5

213

a K Vijay Anandh review

தமிழக கடலோரப் பகுதியில் எடுக்கப்பட்ட ஒரு ஹாலிவுட் படம் போன்ற பிரமையை கிங்ஸ்டன் கொடுத்திருக்கிறது. அவர்கள் லுங்கி கட்டிக் கொண்டு மட்டும் வராமல் இருந்திருந்தால் இந்த படம் நிஜமாகவே ஆங்கில படம் தான். கதாபாத்திரங்களின் பெயர்களை கவனியுங்கள், கிங்ஸ்டன், ரோஸ், சாலமன்,  லிபின்,  மார்ட்டின்,  தாமஸ்,  காட்சன் மற்றும் பிலிப்ஸ்.

நங்கூரத்தை எடுத்து ஆழ்கடலில் தூக்கி போட்டு, அதைப் பிடித்துக் கொண்டே ஆழ்கடலுக்குள் வேகமாக போகும் நாயகன். இயக்குனர் கமல் பிரகாஷ் மற்றும் குழுவினரின் கற்பனையின் உச்சமாக இதை பார்க்க வேண்டியதாய் இருக்கிறது. அந்தக் காட்சி வருவதற்கு நீங்கள் படத்தின் கிளைமாக்ஸ் வரை காத்திருக்க வேண்டும்.

அதுவரையிலும் குறிப்பாக கடலுக்குள் செல்ல முடிவெடுத்த பிறகு ஆரம்பிக்கும் கிங்ஸ்டன் மற்றும் நண்பர்களின் பயணம் ஆக்கிரமிக்கும் இரண்டாவது பாதி விறுவிறு ரகம். ஆழ் கடல் பிரமாண்ட அலைகள் கடலுக்குள் அவர்கள் சந்திக்கும் அமானுஷ்ய பிரச்சினைகள் தத்தளிக்கும் படகு என்று மிகச்சிறந்த விஷுவல் ட்ரீட்டாக கிங்ஸ்டன் அமைந்திருக்கின்றது.

படத்தின் மைய கதாபாத்திரமான கிங்ஸ்டனாக,  ஜிவி பிரகாஷ் குமார் சிறப்பாக நடித்திருக்கிறார் குறிப்பாக இரண்டாவது பாதியில் இக்கட்டான சூழ்நிலைகளை கையாளும் விதத்தில் முதிர்ச்சியான ஒரு நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

ரோஸ் ஆக நடித்திருக்கும் திவ்யபாரதி, பேச்சுலர் படத்தில் இவருக்கும் ஜிவி பிரகாஷ்குமார் கெமிஸ்ட்ரி காட்டுதீயாய் பற்றி எரிந்தது என்றால்,  இந்தப் படத்தில் கடல் அலைகளோடு வரும் மெல்லிய தென்றலாக நம்மை வருடி செல்கிறது.

நண்பர்களாக நடித்திருப்பவர்கள் மற்றும் வில்லன் சுபுமோன் சமத் ஆகியோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

ஃப்ளாஷ் பேக் காட்சிகளில் வரும் அழகம்பெருமாள் மற்றும் சேத்தன் ஆகியோரது கதாபாத்திரங்கள் மிகவும் முக்கியத்துவம் கொடுத்து அமைக்கப்பட்டு இருப்பது ரசிக்கத்தக்கதாய் அமைந்திருக்கிறது.

படத்தின் ஒரு திருப்புமுனை காட்சியில் வரும் புனிதராக மூத்த பத்திரிகையாளர் தேவராஜ் சிறப்பாக வந்து போகிறார்.

படத்தின் தொழில்நுட்பக் குழுவினருக்கு எவ்வளவு பாராட்டுகளை கொடுத்தாலும் தகும்.

குறிப்பாக இசையமைப்பாளராக ஜிவி பிரகாஷ் குமார் படத்தின் முதல் பாதியை விறுவிறுப்பாக எடுத்துச் சென்றிருக்கிறார்.

விஎஃப் எக்ஸ் குழுவினர் படத்தின் இரண்டாவது பாதியை முதல் பாதியை விட விறுவிறுப்பாக எடுத்துச் சென்றிருக்கிறார்கள்.

அபாண்டமாக செத்துப் போகும் கன்னிப் பெண்களின் ஆத்மாக்கள் பேயாக வந்து மிரட்டுவது மற்றும் கடல் முழுவதும் மனித எலும்பு கூடுதலாக மிதப்பது உள்ளிட்ட காட்சிகள் பிரமிக்க வைக்கின்றன.

கிங்ஸ்டன்,  இளைஞர்களின்  அசாத்தியமான கூட்டு முயற்சி!