Gentlewoman

mysixer rating 4/5

258

a K Vijay Anandh review

இந்தப் படத்திற்கு ஜென்டில் உமன் என்று ஒருமையில் பெயர் வைத்திருக்கக் கூடாது. ஜென்டில்விமன் Gentlewomen என்று பன்மையில் பெயர் வைத்திருக்க வேண்டும். ஆம் பூரணியாக வரும் லிஜோ மோல் ஜோஸ் ஆகட்டும், வில்லியாக இருப்பாரோ என்று ரசிகர்களை சந்தேகப்பட வைத்து கடைசியில் மொத்த அன்பையும் அள்ளிச் செல்லும் அனாவாக வரும் லாஸ்லியா ஆகட்டும், கடைசி வரை தன் முகத்தை காட்டாமலேயே வரும் மிஷ்கின் பட கதாபாத்திரம் போல தனது குரலின் மூலமாகவே ரசிகர்களின் மனதில் பதிந்துவிடும் நியாயத்தின் பக்கம் நிற்கும் அம்மாவாகட்டும் இப்படி பல ஜென்டில்வுமன்கள் இந்த படத்தில்.

இந்தப் படத்தைப் பார்க்கும் எல்லா ஆண்களும் என்று சொல்லிவிட முடியாது ஆனால் கொஞ்சம் அப்படி இப்படி என்று நடந்து கொள்ளும் ஆண்கள் ஒன்று ஆளுயர பிரிட்ஜ் வாங்க மாட்டார்கள் அல்லது ஏற்கனவே வாங்கி வைத்து இருந்தால் பிரிட்ஜ் சமையல் எல்லாம் உடம்புக்கு ஆகாது என்று பழைய விலைக்கு விற்று விடக்கூடும்.

ஏன் என்பதை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்…

லிஜோமோல் ஜோஸ், பூரணி என்று பெயர் வைத்ததற்கு  பதிலாக இவரது கதாபாத்திரத்திற்கு அன்னபூரணி என்று பெயர் வைத்திருக்கலாம். தன்மீது அன்பை துளிகூட காட்டாவிட்டாலும் தன் கணவனுக்கு மாய்ந்து மாய்ந்து சமைப்பது ஆகட்டும் வீட்டிற்கு யாரேனும் வந்தாலும் அவர்களுக்கு முதலில் சாப்பிட வேண்டும் என்று கேட்பதாகட்டும் இப்படி ஒரு மனைவி கிடைக்க மாட்டாரா  என்று ஏங்க வைத்து விடுகிறார். ஒரு சராசரி குடும்பத் தலைவியாக சில ஏமாற்றங்களை எதிர்கொள்ளும் நேரங்களில் இன்னொரு சராசரி குடும்ப தலைவியாக முற்றிலும் உடைந்து போய் விடாமல், இவர் எழுந்து நிற்கும் இடங்கள் அருமை.

லாஸ்லியா, 90களில் இந்த படம் வெளியாகி இருந்தால் இவரது அறிமுக காட்சிகளில் திரையரங்குகளில் விளக்கமாற்றை பறக்க விட்டிருப்பார்கள் பெண் ரசிகைகள். அந்த அளவிற்கு வில்லி போன்று அறிமுகமாகி கடைசியில் ரசிகர்களின் அன்பை மட்டுமல்ல அரவிந்தன்  மனைவி மற்றும்  அம்மாவின் அன்பையும் அள்ளிச் சென்று விடுகிறார்.

ஹரி கிருஷ்ணனுக்கு, அரவிந்த் கதாபாத்திரம் ஒரு நல்ல புரமோஷன் என்றே சொல்ல வேண்டும். இரண்டு நாயகிகளை வைத்துக்கொண்டிருந்தாலும், இன்னும் வாய்ப்பு கிடைக்காதா என்று ஏங்கும் சபல புத்தி கொண்ட ஆணாக சிறப்பாக நடித்திருக்கிறார்.

லாஸ்லியா கொடுக்கும், புகாரின் அடிப்படையில் அரவிந்தை தேடும் காவல்துறை அதிகாரி பூவேந்தனாக ராஜீவ் காந்தி, துளிகூட மெனக்கெடாமல் மிகவும் இயல்பாக அவர் பேசும் வசனங்கள்,  நடை உடை பாவனைகள் அனைத்தும் ரசிக்க வைத்திருக்கின்றன. சினிமா முகம் இல்லாமல் என்னதான் விசுவாச தொண்டனாக  இருந்தாலும் அப்படியே இருந்து விட வேண்டியது தான்,  நடிகனாக களம் இறங்கினால் தான் முதல்வர் பதவி அல்லது ராஜ்யசபா எம்பி  என்று முடிவு செய்துவிட்டார் போலும், அட அவர்களை விட சிறப்பாகவே நடித்திருக்கிறார்.

கோவலன் இல்லையென்றால் கண்ணகியும் மாதவியும் தோழிகளாய் இருந்திருக்க கூடும் என்கிற இயக்குனர் ஜோஸ்வா சேதுராமனின் சிந்தனையில் உதித்த அற்புதமான கதைக்களமாக ஜென்டில்உமன் வெளிவந்திருக்கிறது.

நாம் அன்றாடம் பார்த்து அன்பைப் பெற்று, பரிமாறி மகிழும் அம்மா மனைவி தங்கை பாட்டி மகள் மருமகள் தோழி என்று நம்மை சுற்றி இருக்கும் அத்தனை ஜென்டில்விமனுக்கும் மரியாதை கொடுக்கும் படமாக வெளிவந்திருக்கிறது ஜென்டில்வுமன், படத்தையும் கொண்டாடி மகிழ்வோம்!