நிறம் மாறும் உலகில்

180

a K Vijay Anandh review

நிறம் மாறும் உலகில், குறிப்பாக நாளுக்கு நாள் நிமிடத்திற்கு நிமிடம் ஏன் நொடிக்கு நொடி நிறம் மாறும் உலகில் என்றென்றும் பல பல யுகங்களாக நிரந்தரமாக மாறாமல் இருப்பது தாயின் அன்பு மட்டுமே என்பதை அழகாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஜே பி பிரிட்டோ.

தனது பிறந்தநாள் விழாவில் பலர் முன்னிலையில், பாய் பிரண்டை கட்டிப்பிடித்து அன்பை பரிமாறிக் கொள்ளும் இன்றைய தலைமுறை, மகள் லவ்லின். அதற்காக கடிந்து கொள்ளும் முந்தைய தலைமுறை அம்மா விஜி சந்திரசேகர்.

அடுத்த முறை பிறந்தநாள் அன்று அம்மாவுடன் இருக்க வேண்டாம் என்று தோழி வீட்டிற்கு ரயிலில் பயணமாகும், லவ்லின்.

இவர் டிடிஆரா ? அல்லது  மைண்ட் ரீடரா ? எனும் அளவிற்கு யோகி பாபு கதாபாத்திரம். லவ்லின் இன் பிரச்சனையை புரிந்து கொண்டு அம்மானா சும்மா இல்லடா என்கிற ரீதியாக தான் சந்தித்த பல்வேறு நபர்கள் எப்படி அவரவர் அம்மாக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள் என்பதை கதைகளாக சொல்லி, அம்மாவின் பாசத்தை லவ்லினுக்கு புரிய வைக்கிறார்.

என்ன மனுஷன்யா இந்த ஆளு ? என்று நம்மையும் அழ வைத்து விடுகிறார் நட்டி என்கிற நடராஜ் சுப்பிரமணியன். மும்பைக்கு டால் ஆனாலும், சிவப்பு விளக்கு பகுதிக்கு சென்று, ஒரு பாலியல் தொழிலாளியின் மடியை தன் அம்மாவின் மடியாக  பாவித்து, அவள் மடியில் படுத்துக்கொண்டு அம்மாவிடம் பேச வேண்டியது எல்லாம் பேசி புலம்பும் காட்சி அமைப்பு அற்புதம்.

தன்னை வாழ்நாள் எல்லாம் ஒரு குழந்தையாக பார்த்துக் கொண்ட மனைவியை சாகும் தருவாயில் அம்மா என்று அழைத்துக் கொள்ளும் பாரதிராஜா, அவரது மனைவியாக வடிவுக்கரசி வாழ்ந்து காட்டி இருக்கிறார்கள். பாரதிராஜாவையும் வடிவுக்கரசியையும் பிரதிபலிப்பது என்பது சவாலான விஷயம் அதனை சிறுவயது ராயப்பனாக ஏகனும் சிறு வயது அன்னக்கிளி ஆக முல்லை அரசியும் சிறப்பாக பிரதிபலித்திருக்கிறார்கள்.

கலெக்டர் கனவுகளோடு பயணிக்கும் மீனவ மகன் ரியோ ராஜ் தனது தாயை கேன்சரில் இருந்து மீட்பதற்காக சிறிது தடுமாறி பின் தன் லட்சியத்தை அடைகிறார். முறைகேடாக சம்பாதித்து கொண்டுவரும் பணத்தால் என்னை காப்பாற்ற முடியாது என்கிற நல்ல பாடத்தை கற்றுக் கொடுத்து உயிரை விடுகிறார் தாய் ஆதிரா. இந்தப் படத்தில், ரியோ ராஜின் நண்பனாக ஒரு  அழுத்தமான கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார் விக்னேஷ் காந்த். இந்த எபிசோடில் சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் மைம் கோபி என்று பலரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

தனது எதிர்காலத்திற்காக, தன்னைப் பெற்ற அம்மாவையே தியாகம் செய்ய துணியும் மகன் ஒரு பக்கம், தான் பெறாத அம்மாவிற்காக தன் எதிர்காலத்தையே அதாவது தனது காதலியை தியாகம் செய்யத் துணியும் இன்னொரு மகன் இன்று சாண்டி மாஸ்டர் மற்றும் துளசி சம்பந்தப்பட்ட எபிசோடும் அழகாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.

ஏனைய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ஆடுகளம் நரேன், காவியா அறிவுமணி,  அயிரா  கிருஷ்ணன், கனிகா ஆகியோரும் தங்கள் கதாபாத்திரங்களில் முத்திரை பதித்திருக்கிறார்கள்.

சமூகத்தில் இருக்கும் பல்வேறு குடும்பங்களில், அரவணைக்கப்படும் அல்லது உதாசீனப்படுத்தப்படும் அம்மாக்களைப் பற்றி சொல்லி படம் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் தனது அம்மாக்களை பத்திரமாக பார்த்துக் கொள்ளும் பொருட்டு அன்பான அறிவுரையாக நிறம் மாறும் உலகில் படத்தை வழங்கி இருக்கும் இயக்குனர் ஜே பி பிரிட்டோ உள்ளிட்ட குழுவினர் அத்தனை பேருக்கும் பாராட்டுக்கள்.