படவா

mysixer rating 3.5/5

169

a K Vijay Anandh review

காமராஜருக்கு பிறகு அறுபது வருடமாக தமிழகத்தை ஆண்டவர்கள் சீமை கருவேல மரங்களை புடுங்குவதை தவிர, அவற்றை வேரோடு புடுங்கி அப்புறப்படுத்தி மண்ணை பதப்படுத்துவதை விட்டு விட்டு,  வடிவேலு சொன்னது போல, தேவையில்லாத ஆணிகளை மட்டும் தான் புடுங்கி கொண்டு இருந்தார்களா ?  என்று நினைக்கத் தோன்றும் அளவிற்கு, சீமை கருவேலங்களால் இந்த மண் எப்படி மாசுபட்டு விவசாயம் செய்வதற்கு தகுதி இல்லாத நிலமாய் மாறுகிறது என்கிற மாபெரும் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக இந்தப் படத்தை தயாரித்து இருக்கிறார் ஜான் பீட்டர், இயக்கியிருக்கிறார் கேவி நந்தா.

சந்தானத்தின் கிளாசிக் காமெடியுடன் கொஞ்சம் காலதாமதமாக வெளிவந்தாலும் வெற்றி பெற்ற மத கஜராஜா போன்று, கதாநாயகன் விமலுடன் சூரி அடிக்கும் கிளாசிக் காமெடி லூட்டிகளுடன் வெளிவந்திருக்கிறது படவா.

மலேசியாவில் இருந்து திருப்பி அனுப்பப்படும் விமல் ஏன் மலேசியாவிற்கு சென்றார் ஏன் சொந்த கிராமத்திற்கு திரும்பி வர பயப்படுகிறார் என்பதில் ஆரம்பித்து, முதல் பாதி கிராமத்து காமெடி கலாட்டா, இரண்டாவது பாதி சமூக பொறுப்புடன் கூடிய கிராமத்து தலைவர் என்கிற அற்புதமான திரைக்கதையுடன் பயணித்து நிறைவடைகிறது.

இதுபோன்ற கிராமத்து  திரைக்கதைகளுக்கு ராமராஜனுக்கு பிறகு நம்பிக்கை தரும் ஒரே நாயகனாக விமல் வலம் வந்து கொண்டிருக்கிறார். வாழ்க்கையின் போக்கு தெரியாமலே உண்டு உறங்கி போதை ஏற்றி மகிழ்வது என்பதை மட்டுமே லட்சியமாக கொண்டு பயணிப்பவருக்கு காதலுடன் பொறுப்பும் கைகூடி வர அதனை அவர் எப்படி கையாளுகிறார் என்கிற சவாலான திரைக்கதையில் அற்புதமாக பொருந்தி அசத்தியிருக்கிறார் விமல். பிரசிடெண்ட் ஆகபதவியேற்ற கையோடு, அவருக்குள்ள அதிகாரம் என்ன என்பதை கையேடு மூலம் படித்து தெரிந்து கொள்ளும் காட்சி அழகு. நம்மூர் கவுன்சிலர்கள் முதல் முதலமைச்சர் வரை அவர்களது அதிகாரங்கள் என்ன அதனை எப்படி ஆக்கபூர்வமாக பயன்படுத்தி மக்களுக்கு நல்லது செய்யலாம் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் ரைட்டா ராங்கா என்கிற அளவிற்கு அங்கே ரைட்டா ராங்கா விளையாடும் மக்களை ரைட்டாக பயன்படுத்தி தனது கிராமத்தையும் அதன் சுற்றுவட்டார பகுதிகளையும் இந்திய அளவில் பாராட்ட பெரும் அளவிற்கு மாற்றிக் காட்டுகிறார் விமல். நிச்சயம் தாமதமாக வெளிவந்திருந்தாலும் எந்த காலத்திற்கும் ஏற்ற படமாக படவா இருக்கிறது.

விமல், வெள்ளந்தி தனமான வசனம் பேசுவதில் வல்லவர் என்றால், தமிழ் ஆங்கிலம் திலிருந்து சில வார்த்தைகளை சரியாக உச்சரிக்க தெரியாவிட்டாலும் அவர் ஏட கூடமாக உச்சரிக்கும் அழகிலேயே சிரிக்க வைத்து விடுகிறார் சூரி.

கால்நடை மருத்துவராக வரும் ஸ்ரித்தா ராவ் , கவனிக்க வைத்திருக்கிறார்.

KGF வில்லன் ராம் இந்த படத்திலும் மிரட்டி இருக்கிறார்.

குறிப்பாக இந்த படத்தில் வரும் வசனங்கள், பக்கத்துல இருக்குற மானாமதுரைக்கு போக தெரியாதவனா மலேசியாவுக்கு போக போற…. சாமியே கருவறையில் வச்சிட்டு விதை நெல்ல கோபுரத்தில் வைக்கிறது நம்ம கலாச்சாரம்…  என்பது போன்ற நல்ல வசனங்கள் மற்றும் இனிமையான பாடல்கள் என்று படவா இரண்டரை மணி நேர பொழுதுபோக்கிற்கு நிச்சய உத்திரவாதம் தருகிறார்.