என் காதலே

mysixer rating 4/5

179

a K Vijay Anandh review

நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு அழகான முக்கோண காதல் கதையாக இந்த வாரம்  வெளியாகிறது என் காதல்.

படத்தில் லிங்கேஷ், லியா மற்றும் திவ்யா ஆகிய மூவருக்கு இடையிலான முக்கோண காதல் கதையாக படம் இருந்தாலும், 2004 இல் தமிழக கடற்கரையோர கிராமங்களை புரட்டிப்போட்ட சுனாமியை படத்தின் மைய புள்ளியாக வைத்து இந்த படத்தை அற்புதமாக தயாரித்து இயக்கி இருக்கிறார் ஜெயலக்ஷ்மி.

சுனாமி நடந்த தினத்தில் ஒரு நினைவு அஞ்சலி நடப்பதாக படத்தில் காண்பிக்கப்படும் காட்சியும், அதில் இடம்பெற்ற உண்மையாகவே சுனாமியில் இறந்து போனவர்களின் புகைப்படங்களும், தனது மூன்று மகன்களை பறிகொடுத்த தாயின் ஒப்பாரியும் படம் பார்க்கும் ரசிகர்களை நிஜமாகவே கண்கலங்க வைக்கும் என்றால் மிகை அல்ல.

கதையின் நாயகனை சுனாமியால் பெற்றோர்களை பறிகொடுத்த கதாபாத்திரமாக உருவாக்கியதும் அவருக்கு ஆறுதலாக அவரது தாய் மாமன் குடும்பத்தார் இருப்பதாக காட்டி இருப்பதும் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாங்கள் இருக்கிறோம் என்று மற்றவர்கள் சொல்வது போல் அமைக்கப்பட்ட கதாபாத்திர அமைப்புகள்.

லிங்கேஷிற்கு ஒரு அருமையான கதாபாத்திரம். மீனவ இளைஞனாக துறுதுறுப்பாகவும், தாய்மாமன் பேச்சை மீறாத மருமகனாகவும், சிறுவயதில் இருந்து தன் மீது பாசத்தை பொழிந்த மாமன் மகளே ஆயினும் தன் முறைப்பெண்ணை இன்னொரு அம்மாவாகவும் பார்க்கும் இடங்கள் அருமை.

லண்டன் லியாவும் நம்மூர் திவ்யாவும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்பது போல போட்டி போட்டுக் கொண்டு சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

மதுசூதனன், கஞ்சா கருப்பு, மாறன் , காட்பாடி ராஜன் என்று மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே படத்தில் இருக்கிறது ஒவ்வொருவரும் தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

அவருக்கும் இந்திய கலாச்சாரத்தை கற்றுக்கொள்ள வரும் லண்டன் லியாவுக்கும் ஏற்படும் காதல் மிகவும் எதார்த்தம்.

இறுதியில் அவர்களது காதல் ஜெயிக்கிறதா அல்லது தன் முறை மாமனையே திருமணம் செய்ய வேண்டும் என்று காத்திருக்கும் திவ்யாவின் காதல் ஜெயிக்கிறதா என்பதை உணர்வுபூர்வமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர்.

குலதெய்வம் கோயில்கள் பற்றிய விளக்கம் மற்றும் கடலுக்கு கணவன் மீன்பிடிக்க செல்லும் நிலையில் வீட்டில் அகல் விளக்கை ஏற்றி வைத்து அடையாமல் பார்த்துக் கொள்ளும் மனைவி என்பன லண்டன் பெண்ணிற்கு மட்டுமல்ல தமிழர்களுக்கு தெரியாத மீனவ கலாச்சாரம்.

டோனி ஜானின் ஒளிப்பதிவு, காரைக்கால் பகுதிகளை சிறப்பாக படமாகி இருக்கிறது என்றால், சாண்டி சாண்டெல்லோ வின் பாடல்களுக்கான இசையும் பின்னணி இசையும் படத்திற்கு அதிக வலு சேர்த்து இருக்கிறது.

என் காதலே, தவற விட்டு விடக்கூடாதஇந்த வார வெளியீடு..