வேம்பு

mysixer rating 4/5

162

a K Vijay Anandh review

துயரங்களின் எல்லைவரை சென்று,  ஒரு நல் வாழ்க்கைக்கு மீண்டு வருவது என்பது இருக்கும் சுகங்களிலேயே சிறப்பானது. அப்படி ஒரு சிறப்பான சுகத்தை அடையும் தம்பதியாக ஹரிகிருஷ்ணனும் ஷீலாவும் இந்தப்படத்தில் வாழ்ந்திருக்கிறார்கள்.

தேசிய அளவில் சிலம்பம் போட்டியில் வென்று எப்படியாவது ஒரு அரசுவேலைக்கு சென்றுவிடவேண்டும் என்கிற ஆசைதான், இந்த யதார்த்தமான கிராமத்து ஏழைக்குடும்பத்து வேம்புவுக்கு, ஷீலா சிறப்பாக இந்த கதாபாத்திரத்திற்குள் வந்து அமர்ந்திருக்கிறார்.  நம்பிக்கையோடு மேலே மேலே பயணிக்கும் இவரது வாழ்க்கை திருமணத்திற்கு பிறகு கீழே கீழே என்று அதள பாதாளத்திற்கு பயணித்தாலும் முகத்தில் மாறாத புன்னகை, கண்களில் தீராத நம்பிக்கை. அவருக்கு அப்படி ஒரு மன தைரியத்தை கொடுத்தது வேறு எதுவாக இருக்கமுடியும்..? அவர் கற்றுக்கொண்ட சிலம்பம் விளையாட்டைத்தவிர..!

ஒரு விளையாட்டுப்பயிற்சி உடல் நலத்துடன் மன நலத்தையும் மன தைரியத்தையும் கொடுக்கிறது என்பதை சொல்லாமல் சொல்லி அசத்தியிருக்கிறார் இயக்குநர் வி ஜஸ்டின் பிரபு.

ஆட்டைவித்தாச்சும் ஒரு ஆளா நிக்கனும் என்கிற இன்னொரு இளைஞனாக ஹரி கிருஷ்ணன். வேற யாரும் இல்ல, ஷீலோவோட சொந்த அத்தை பையன். சொந்த மாமன் பெண்ணைக்கூட தயங்கி தயங்கி திருமணம் செய்துகொண்டு, அவளது கனவுகளுக்கு தடையாக இருக்கக்கூடாது என்று நினைப்பவர், தன்னையறியாமல் பெருந்தடையாகிப்போகிறார். அந்த நிலையிலும் தன்னம்பிக்கையுடன் மீண்டு வருவது எல்லாம் அருமை, ஆகச்சிறந்த கதபாத்திரங்களாக இந்த இருவரையும் மட்டுமல்ல, இவர்களது பெற்றோர் மற்றும் தொகுதி எம் எல் ஏ, செங்கள் சூலை முதலாளி உட்பட அனைவரது கதாபாத்திரங்களையும் மிகவும் அற்புதமாக படத்திருக்கிறார் இயக்குனர் வி ஜஸ்டின் பிரபு.

ஒரு கிராமத்து சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்க முயற்சிக்கும் இரண்டு பேரை சக கிராமத்து சிறுமியர் தாங்கள் கற்றுக்கொண்ட சிலம்பம் கலையாலேயே அடித்து ரவுண்டு கட்டுவது போன்ற காட்சி,  தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த காட்சிகளுள் முதன்மையானது என்றால் மிகையாகாது.

வேம்பு, குழந்தைகளுடன் குடும்பமாக கொண்டாட வேண்டிய சினிமா !