Jinn – The Pet

mysixer rating 3/5

226

a K Vijay Anandh review

பொதுவாக பேய் படங்கள் என்றாலே மனிதர்கள் தெரிந்தோ தெரியாமலோ பேய்கள் நடமாடும் இடங்களுக்கு தாமாகச் சென்று மாட்டிக்கொள்வார்கள் பின்பு அதிலிருந்து எப்படி வெளியே வருகிறார்கள் என்பதாகத்தான் இருக்கும்.

அதற்கு முற்றிலும் நேர்மாறாக பேயை வளர்ப்பு பிராணியாக வீட்டிற்குள் கொண்டு வந்து வளர்த்தால் எப்படி இருக்கும் என்று அற்புதமாக யோசித்து ஜின் த பெட் என்கிற படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் டி ஆர் பாலா.

அந்த சிந்தனைக்கு ஒரு பாராட்டு, அதனை எடுத்து அதை பல நூற்றாண்டு கதைக்குள் புகுத்தி சமகாலத்தில் ஜின் என்கிற அந்த பேய், காத்திருந்த ஒரு கடமையை செய்வதாக முடித்திருப்பதும் சுவாரசியம்.

எம்ஜிஆர் முதல் ரஜினி வரை ஏன் விஜய் அஜித் என்று எத்தனையோ மாஸ் நடிகர்களுக்கு கூட அவர்கள் வீட்டிற்கு வரும் பொழுது இப்படி ஒரு பிஜிஎம் இசை இசைக்கப்பட்டிருக்கவில்லை. மலேசியாவில் வேலையை இழந்து சென்னையில் உள்ள வீட்டிற்கு வரும் முகேன் ராவுக்கு, வருக வருக மயிலோன் வருக … என்கிற கந்தர் சஷ்டி கவசம் பாடலை பின்னணியில் இசைக்க வைத்து வரவேற்பது அற்புதமான காட்சி அமைப்பு. முகேன், ஒரு குடும்பத்து இளையவனாக வழக்கம்போல காதல் செண்டிமெண்ட் ஆக்சன் என்று வணிக நாயகனாக இந்த படத்தில் பரிணாமம் எடுத்திருக்கிறார்.

இமான் அண்ணாச்சி குடும்பத் தலைவராக இருக்கும், வடிவுக்கரசி பாட்டியாக இருக்கும், ஜார்ஜ் விஜய் – வினோதினி கணவன் மனைவியாக இருக்கும் அந்த குடும்பம் ரசிக்க வைத்திருக்கிறது. அவர்களுடன் முகேனின் நண்பராக, பால சரவணன். ஜின் மற்றும் இந்த குடும்பத்தினருக்கு இடையிலான காட்சிகள் ரசிக்கும்படி இருக்கிறது.

நாயகி பவ்யா, எளிமையாக அறிமுகமாகி கிளைமாக்ஸ் இல் சர்ப்ரைஸ் கதாபாத்திரமாக அமைந்திருக்கிறார்.

நிழல்கள் ரவி, ராதாரவி ஆகிய மூத்த நடிகர்கள் படத்திற்கு தங்களது கதாபாத்திரங்களின் மூலம் வலு சேர்த்திருக்கிறார்கள்.

ஜின் கதாபாத்திர உருவாக்கம் மற்றும் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் மெனக்கட்டி இருந்தால் இந்த படம் மைடியர் குட்டிச்சாத்தான் போன்று ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவிற்கு வெற்றியை பெற்றிருக்கலாம் !