a K Vijay Anandh review
எங்கோ தூரத்தில் இருப்பவர்களைப் பற்றி கதை எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர் ஜோதி ராமையாவை, பக்கத்தில் இருக்கும் நம்மவர்களைப் பற்றி கதை எழுதப்பணிக்கின்றார், அந்த மூத்தோர் காப்பாக பெண் முதலாளி.
அந்த எழுத்தாளருக்கு ஒருவன் கிடைக்கிறான், குப்பையிலிருந்து கோபுரத்திற்கு என்று சொல்வது போல ஒரு அழகான குருவிக்கூடு போன்ற அவனது வாழ்க்கையை எழுத ஆரம்பிக்கிறார். ஒரு நாவல் எழுதும் வரை எதற்கு காத்திருக்கவேண்டும்..? எழுத எழுத படமாக்கிவிடலாம் என்று நினைத்தாரோ என்னவோ, சுடசுட நமக்கு ஒரு படமாக்கி தருகிறார், கார்த்திகேயன் மணி.
எழுத்தாளர்களுக்கு இருக்கும் தூரமான பார்வை போலவே நமது குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் இருக்கிறது போலும். கூடப்படித்த மாணவிக்கு ஒரு மெசேஜ் அனுப்பிவிட்டு, பல நாட்களாய் அவளது பதிலுக்கு காத்திருக்கும் விஷ்வாவிற்கு, கூடப்பிறந்த அக்காவுக்கு அவ்வப்பொழுது ஒரு போன் கூட செய்யமுடிவதில்லை. “ என் கூட பேசுடா..” என்று அக்கா ரோஷினி சொல்லும் அந்தக்காட்சி, அடடா. அக்காவாச்சும் பெங்களூர்ல வேலை செய்றாங்க, அப்பா… அவர் காலைல எழுந்து எங்கே போறார், எப்போ வர்றார்… என்பது கூட தெரியாமல் மொபைலைல் மூழ்கிப்போகும் சராசரி இன்றைய தலைமுறையாக விஷ்வா, அற்புதமாக நடித்திருக்கிறார்.
இவர், தொலைக்காட்சியிலிருந்து வந்து திரையுலகிலும் ஜொலிக்கமுடியும் என்பதற்கு பெரிய முன்னுதாரண நடிகையாக இருக்கப்போகிறார், ரோஷினி ஹரிப்பிரியன். குடும்ப வறுமையை சிறுவயதிலேயே கண்முன் நிறுத்தி கஷ்டப்பட்டு படித்து முன்னேறி, அமெரிக்கா செல்லும் அளவிற்கு உயரும் , படத்தில் கூட ஒரு முன்னுதராணமான கதாபாத்திரம். எல்லாம் சரிதான் .. அப்பா சாதி…. சரி நாங்க அப்புறம் சொல்லுகிறோம் என்று பெண் பார்க்கும் படலங்கள் முடியும்போதெல்லாம், பாவம் நொறுங்கிப்போகிறார்.
காலை எழுந்து வீடு சுத்தம் செய்து, காபி போட்டுக்கொடுத்து, காலை, மதியம், இரவு என்று சமைத்துப்போட்டுவிட்டு, நடு நடுவே துணிதுவைத்தல் போன்ற அன்றாட வேலைகள், அத்துடன் கணவனுடன் ஒத்துழைத்து ஒன்றோ இரண்டோ பிள்ளைகளும் பெற்றுப்போடவேண்டும். இப்படி குறைந்தது ஒரு 30 வருடங்கள் எந்த ஒரு தனிப்பட்ட எதிர்பார்ப்புகளுமின்றி, எலன் மாஸ்க்கால் கூட இப்படி ஒரு ரோபோவை உருவாக்கிவிடமுடியாது, நம் இந்தியப்பெண்கள் – இல்லை இல்லை இந்தியத்தாய்மார்கள் ! அப்படி ஒரு தாயாராக ஷெல்லி கிஷோர், அற்புதம்.
காளிவெங்கட், என்ன மனுஷன்யா இவரு… ரெண்டு முட்டை ஆப்பத்தை உள்ளே தள்ளிவிட்டு ஆட்டோ ஓட்டக்கிளம்பும் அழகே அழகு! பையனை அடுத்து எந்த காலேஜ்ல சேர்க்கலாம், எதுவுமே சேர்த்துவைக்கலயே பொண்ண எப்படி கரைசேர்க்கப்போறோம், என்கிற சராசரி கவலைகளுடன், மனைவியை பழித்து விட்டால் வரும் கோபம் என்று அப்படியே நம் எதிர்த்தவீட்டு மனிதர் போல வாழ்ந்திருக்கிறார்.
சுனில் சுகடா , ஜாங்கிரி மதுமிதா என்று அங்கிள் ஆண்டியாக நிறைவாக பொழுதுபோக்கியிருக்கிறார்கள்., ஊறுகாய் போடும் சாம்ஸும். ராமரும் அவரது தலைவி கீதாகைலாசமும், வேற லெவல். ராமரை இப்படி ஒரு மீட்டரில் பார்க்கமுடிவதில்லை என்றால், இன்னொரு பக்கம் அட இவரா? இப்படியா..? என்று ஆச்சிரியப்பட வைத்திருக்கிறார் நிரந்தர ஆளுங்கட்சியாகவே இருக்கும் கீதா கைலாசம். கண்ட நாய்க்கும் சிலை வைக்கும், அரசியல் அவலங்களை திரையில் கொண்டு வந்திருக்கிறார்.
சிறைக்குச்சென்று வரும், பக்கத்துவீட்டு பையனின் ஆதங்கம், அவன் மீது பரிதாப்பட வைக்கிறது.
கஷ்டம் என்பது, அன்றாடம் காய்ச்சி குடும்பத் தலைவிகளுக்கு மட்டுமல்ல, ஐடியில் மேனேஜராக பணிபுரிபவருக்கும் தான் என்பதை அர்ச்சனா கதாபாத்திரம் அழுத்தமாக பதிவு செய்து இருக்கிறது.
இன்னமும் எழுந்து, நடந்து, ஓடி, ஆக்ஷன் செய்துகொண்டு இருப்பவரை அசால்ட்டாக எழுத்தாளராக, அட நம்ம சத்யராஜை தாங்க… உட்கார வைத்து அவரது பார்வையில் மெட்ராஸ் மேட்னி படத்தை சொல்லியிருக்கும் விதம், புதுமை.
ரோஷினி தான் நாளைக்கு அமெரிக்காவில் அடியெடுத்து வைக்கப்போகிறாரே, ஹாலிவுட் ஈவினிங் என்று பார்ட் 2 எடுங்கள் கார்த்திகேயன் மணி! அவர் அங்கே ஒரு அமெரிக்கனை கல்யாணம் பண்ணிக்கட்டும், அமெரிக்காவின் இரண்டாவது குடிமகள் ஆகட்டும், உஷா வான்ஸ் போல!