Thug Life

Not Our Film

382

a K Vijay Anandh review   ? சத்தியமா இல்ல  …

இந்தப்படத்திற்கு லட்சக்கணக்கானோர் மாய்ஞ்சு மாய்ஞ்சு விமர்சனம் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அதைவிட அதிகமாக யுடியூபில் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், யாராச்சும் சரியாக எழுதியிருக்கின்றார்களா என்பது கேள்விக்குறிதான். சரி, இங்கே நான் மட்டும் என்ன, சரியாக எழுதப்போகிறேனா என்றால், நிச்சயமாக இல்லை. ஏனென்றால், இந்தப்படத்திற்கான விமர்சனத்தை மணிரத்னமே எழுதிவிட்டார், அதுவும் ஒரே வரியில். அதுவும் அதனை படத்தில் ஒரு வசனமாகவும் எழுதி அதனை, நாசரை வைத்து பேசவும் வைத்துவிட்டார்.

“ உனக்கு அவனைப்பத்தி தெரியாது… தலைவாழைல விதவிதமா விருந்து வைப்பான்… ஆனால் ஓரமா கொஞ்சம் டேஷைத் தடவிட்டுப்போய்டுவான்..” என்று நாசர் , சிம்புவிடம் சொல்லுவார். இது படத்தில் மணிரத்னம் எழுதிய வசனம். அந்த டேஷ் என்னவென்பது படத்தை கவனமாக பார்த்தவர்களுக்குத் தெரியும்.

அது தான் இந்தப்படத்திற்கான மிகச்சரியான விமர்சனமும் கூட…

கமல்ஹாசன், அரசியலுக்குள் அடியெடுத்து வைத்த பிறகு எதற்கு கேங்ஸ்டர் படம், அட  அவர் சாய்ஞ்சுருக்கும் அரசியலே கேங்ஸ்டர் அரசியல் தான்னு முடிவு செஞ்சுருக்கலாம், சரி அதை விடுங்க!

காயல்பட்டணத்திலிருந்து தெற்காக திருச்செந்தூரை, இதுவரை யாருமே காட்டியிராத கோணத்தில் காட்டிய அழகு முதல் பழைய டெல்லி – புது டெல்லி , ராஜஸ்தான் பாலைவனம், பனிபோர்த்திய இமயமலை – கைலாசம் வரை ரவி கே சந்திரனின் அட்டகாசமான ஒளிப்பதிவு.முதல் ஷாட்டிலேயே முகம் தொங்கிப்போன கமல்ஹாசனை காண்பித்துவிட்டு, அடுத்த காட்சியில் நாயகன் கமலையொத்த வசீகர கமல்ஹாசனைக்காட்டிய AI தொழில் நுட்பம் மற்றும் எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்தின் மதி நுட்பம், ஏ ஆர் ரஹ்மானின் அட்டகாசமான இசை –  குறிப்பாக விண்வெளி நாயகா பாடலில் நடு நடுவே அப்படியே பிரபஞ்சத்திலிருக்கும் ஒட்டுமொத்த இசையும் கொட்டுவது போன்ற ஒரு பிரமிப்பு, அனைத்து நடிகர்களின் அற்புதமான நடிப்பு – குறிப்பாக எஸ் டி ஆர்….  இப்படி தலைவாழை இலை போட்டு விருந்து, அதுவும் ஐந்தடி டேபிளில்  நான்கு பேருக்கு நான்கு தலைவாழை இலைபோடாமல்,  ஒருவருக்கு மட்டுமே ஐந்தடியில் தலைவாழை இலைபோட்டு, இந்த உலகின் சிறந்த அனைத்து உணவுகளையும் பரிமாறிவிட்டு,  மணிரத்னம் எழுதி நாசர் சொன்னது போல “ஓரமா கொஞ்சம் தடவிட்டு கூட போகல..”,  இலையின் நடுவே கமல்ஹாசனமும் மணிரத்னமும் ஏறி அமர்ந்து ஆறமர  ”போய் இருக்கிறார்களோ..” என்று எண்ணத்தோன்றுகிறது…

எவன் சாப்பிடுவான் / ரசிப்பான்..?