a K. Vijay Anandh review
இயக்குநர் லியோ ஜான் பால் நிஜமாகவே கொஞ்சம் மாத்தி யோசித்திருக்கிறார், அதனால் மார்கன் படத்தின் இறுதிவரை காத்திருப்பவர்களுக்கு உத்திரவாதமான ஒரு ஆச்சரியம் பரிசளிக்கப்பட்டிருக்கிறது .
துப்புக்கிடைக்காத, தொடர் அல்லது ஒரேமாதிரியான கொலைகளில் துப்பு துலக்க , கஞ்சமலை சித்தரின் உதவிகள் என்று படத்தில் மிகவும் புதிதாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் அஜய் தீசன் சம்பந்தப்படட காட்சிகள் தமிழ் ரசிகர்களுக்கு புது விருந்து.
வித்தியாசமான அதேநேரம் மிகவும் கொடூர கெமிக்கல் , ஊசி மூலம் செலுத்தப்பட்டுவிட்டால், உடுத்தியிருக்கும் ஆடைகளைத் தவிர உடல்முழுவதையும் கரிக்கட்டை ஆக்கி சாகடித்துவிடும், உடலுக்குள் செலுத்தப்பட்ட சில நொடிகளுக்குள் முதலுதவி செய்தாலும், உயிரை மட்டும் காப்பாற்றிக்கொள்ளலாம் .
அந்த கெமிக்கல் கருக்கிய பாகங்கள் கருகியது தான். அப்படி இடது முகம் , இடது தோள்பட்டை மற்றும் இடது கை முழுவதும் கருகிப்போன நிலையில் படம் முழுவதும் வரும் விஜய் ஆண்டனி, ஏதாச்சும் வித்தியாசமாக கொடுக்கவேண்டும் என்று மெனக்கெட்டிருக்கிறார், நிச்சயம் அது அவர் நினைத்ததை விட அதிகமாகவே கைகொடுத்திருக்கிறது .
விஜய் ஆண்டனி உடன் துப்புதுலக்க எல்லா வகையிலும் உதவும் பெண் காவல் அதிகாரியாக பிரிகடா, மிகவும் இயல்பாக அதே நேரம் அந்த சீருடைக்கான கெத்துடன் நடித்திருக்கிறார். மகாநதி சங்கருக்கு இந்தப்படத்தில், ஒரு நல்ல கதாபாத்திரம் கொடுத்து அவரது நீண்ட அனுபவத்திற்கு சரியான மரியாதையை கொடுத்திருக்கிறார் லியோ ஜான் பால்.
அஜய் தீசன், கிட்டத்தட்ட இன்னொரு ஹீரோ எனும் அளவிற்கு இவரது தமிழறிவு கதாபாத்திரம் மிகவும் வலிமையானதாக இளைஞர்களுக்கு ஒரு உந்துதல் கொடுக்கும் அளவிற்கு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஏமாற்றிவிடாமல் நடித்து அசத்தியிருக்கிறார். அவரது தங்கை அகிலாவாக வரும் அர்ச்சனா, நிறைவாக நடித்திருக்கிறார்.
சேஷ்விதா , இவர் நம்மூரு தீபிகா படுகோன் என்று சொன்னால் மிகையாகாது, படத்திற்கு படம் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் வந்தாலும் தன்னைச்சுற்றியே கதை பயணிக்கும் அளவிற்கு செய்துவிடுகிறார்., அப்படியென்ன செய்துவிடுகிறார் என்பதை படம் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
விஜய் ஆண்டனியின் இசை, எஸ் யுவா வின் ஒளிப்பதிவு என்று மார்கன் படத்திற்கு வலுசேர்த்திருக்கிறது. விஷ்ணுவுடன் சேர்ந்து தான் எழுதிய திரைக்கதையை தன்னை விட யார் சிறப்பாக எடிட்டிங் செய்து விட முடியும் ? லியோ ஜான் பாலே சிறப்பாக எடிட்டிங்கும் செய்திருக்கிறார்.
தீண்டாமை அல்லது நிறவெறி அல்லது சக மனிதன் மீதான வெறுப்பு அல்லது அருவருப்பு இருக்கும் வரை அமானுஷ்ய பழிவாங்குதல்கள் இருந்து கொண்டுதான் இருக்கும் என்று மார்கன் மூலம் பயமுறுத்தியிருக்கிறார் லியோ ஜான் பால் , அவற்றை களைவது எளிதுதானே, நேசிக்க ஆரம்பிப்போம் அனைவரையும் !