a K Vijay Anandh review
கழுத வயசு ஆகுது இன்னும் கல்யாணம் ஆகலயா. ? என்கிற சுற்றத்தாரின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் பயந்து சொந்த ஜாதியில பொண்ணு கிடைக்காட்டாலும், வேறு ஒரு ஜாதி பெண்ணாக இருந்தாலும் பரவாயில்லை என்று முடிவு செய்து உசிலம்பட்டியில் இருந்து குடும்பத்தோடு கோபிசெட்டிபாளையம் பயணிக்கும் விக்ரம் பிரபு குடும்பம்.
பச்சை பசேல் என அழகான கோபிசெட்டிபாளையத்தில் நாயகி என்று சொல்ல முடியாது நாயகிகள் வீட்டில் ஒட்டுமொத்த படமும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.
ஒரு வழியாக நமக்கும் பெண் கிடைத்து விட்டால் என்று விக்ரம் பிரபு சந்தோஷப்பட்டு கொண்டிருக்கும் பொழுது ஒரு மோசமான பொழுது விடிகிறது.
அதன் பிறகு என்ன ஆகிறது என்பதே மிகவும் எதார்த்தமான திரைக்கதை.
விக்ரம் பிரபு, இவர் குடும்பத்தோடு பெண் பார்க்க செல்லும் வேன் வேண்டுமானால் பிரேக் டவுன் ஆகியிருக்கலாம். ஆனால் அவர் தேர்ந்தெடுத்திருக்கும் லவ் மேரேஜ் என்கிற இந்த திரைக்கதை இந்த படம் அவர் சினிமாவில் சரியான வண்டியில் ஏறி இருக்கிறார் என்பதை காட்டுகிறது. அப்பா வழியில் தாத்தா வழியில் ஒரு ஜனரஞ்சக குடும்பப்பாங்கான கதை களத்தில் மிகவும் எதார்த்தமாக, நடித்து அசத்தி இருக்கிறார். தனது ஆற்றாமையை வெளிப்படுத்த அப்பொழுது சிகரெட் புகைக்கும் காட்சிகள் ஆகட்டும் சாராயம் குடித்தால் எனக்கு கோபம் வரும் என்று சொல்லி சொல்லி ஒரு பாட்டில் காலி செய்துவிட்டு மாமனையும் காலி செய்யும் அந்த காட்சியாகட்டும், தன்னைவிட மிகவும் சிறிய வயது பெண் சொல்லும் அறிவுரையை ஏற்று, ஒட்டுமொத்த குடும்பத்தாரின் பேச்சைக் கேட்காமல் அவள் வழியில் செல்வதாகட்டும் அத்தனையும் அழகு.
சுஷ்மிதா பட், பட்டென்று விக்ரம் பிரபுவின் கன்னத்தில் ஒரு அறை விடுகிறார், வேண்டா வெறுப்பாக சம்மதித்து பின் அனைவரும் வெறுக்கும் அளவிற்கு மாறும் ஒரு கதாபாத்திரம் கச்சிதமாக செய்திருக்கிறார்.
அட அவரது கிரஷ் ரியோ ராஜா…? அப்படியானால் அவருக்குத்தான் முதலில் திருமணம் நடக்கும் அது இயக்குனர்களால் எழுதப்படும் திரைக்கதை அல்ல, ரியோ ராஜின் ராசி அப்படி.
மீனாட்சி தினேஷ், அக்காவிற்கு பிறகு விக்ரம் பிரபு நாள் குட்டி போட்ட பூனை போல சுற்றி சுற்றி வரும் அந்த குழந்தைத்தனமான அழகு பேரழகு! அந்த குழந்தை தனத்திற்குள் அவ்வளவு பெரிய அறிவுமுதிர்ச்சியா என்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தி விடுகிறார்.
அவர்கள் பெண் பார்க்கச் சென்ற நேரத்தில் கொரோனா லாக் டவுன், வேறு வழி இல்லாமல் 20 நாட்களுக்கும் மேலாக பெண் வீட்டிலேயே மாட்டிக் கொள்வது, அங்கே விக்ரம் பிரபுவின் நிறைமாத கர்ப்பிணி தங்கைக்கு பெண் குழந்தை பிறப்பது போன்ற காட்சிகளை மிகவும் ரசிக்கும்படி எடுத்திருக்கிறார்கள். குறிப்பாக தங்கைக்கு பெண் குழந்தை பிறந்ததை நினைத்து மற்றவர்கள் வருத்தப்படும் பொழுது தாய்மாமனாக விக்ரம் பிரபு சீறும் இடம் அருமை. “பெண் குழந்தை வேண்டும் பெண் குழந்தை வேண்டாம் என்று நினைத்து தானே நம்ம சாதியில பொண்ணு இல்லாம இன்னொரு சாதியில பொண்ணு பார்க்க வந்திருக்கோம்…” இன்று குடும்பத்தினரிடம் பொங்கும் இடத்திலும், நான் 11 பெண் குழந்தைகளை பெற்றுக் கொள்வேன் என்று மீனாட்சி தினேஷிடம் கூறும் இடத்திலும் விக்ரம் பிரபு பெண் ரசிகைகள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து விடுகிறார்.
பெண் வீட்டில் தாய் மாமனாக நடித்திருக்கும் முருகானந்தம் அவரது முந்தைய படங்களை விட இந்த படத்தில் இன்னும் ஒரு படி மேல் என்று சொல்லத்தக்க அளவில் சிறப்பாக நடித்து இருக்கிறார்.
விக்ரம் பிரபுவின் தந்தையாக வரும் கஜராஜா , மாமனாக வரும் அருள்தாஸ், நண்பராக வரும் ரமேஷ் திலக் என்று அனைவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
ஷான் ரோல்டன் , கோபிசெட்டிபாளையத்தில் வீசும் தென்றலாக இவ்வளவு இசை.
விக்ரம் பிரபுவின் பெயர் ராமச்சந்திரன், அவர் பெண் பார்க்க செல்லும் பெண்ணின் பெயர் அம்பிகா, லவ் செட் ஆகும் பெண்ணின் பெயர் ராதா என்ன ஒரு கிளாசிக்கான பெயர் சூட்டல்!
அரேஞ்ச் மேரேஜ்க்காக சென்று, லவ் மேரேஜ் என்று படம் முடிகிறது!
ஒரு நல்ல படம் கொடுத்தால் அதுவே சமூகத்தின் ஆரோக்கியத்திற்கு உதவி செய்வதாக இருக்கும் என்கிற எண்ணத்தோடு இந்த படத்தை கொடுத்திருக்கிறாரோ என்னவோ டாக்டர் சண்முகப்பிரியன், ஒரு இயக்குனராக!