ஹரிஹர வீரமல்லு

mysixer rating 5/5

179

a K. Vijay Anandh review

முகலாய கொடுங்கோலன் ஒளரங்கசீப் காலத்தில் இந்துமதமும் இந்துக்களும் எத்தகைய துன்பத்திற்கு ஆளானார்கள் ? இந்தியாவை ஆண்டுக்கொண்டிருந்த சிற்றரசர்கள் பேரரசர்கள் ஆகியோரை நேரடியாக மோதி ஜெயிக்கமுடியாத ஒளரங்கசீப் கேவலமான சூழ்ச்சிகள் மூலம் , பேடித்தனமாக எப்படி அவர்களை கொலை செய்கிறான் ? என்பதை கண்முன் கொண்டு வந்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட பாரதம் முழுக்க அவன் ஆளுகையில் அவனை எதிர்க்க துணிவில்லாமல் ஜிஸியா வரிக்கட்டி அடிமைகளாக அடங்கிப்போன நிலையில் தென்னகத்திலிருந்து ஒரு மாவீரனாக ஹரிஹர வீரமல்லு கிளம்பி ஒளரங்கசீப்பிறகு சிம்ம சொப்பனமாக ஆகிறான் என்பது வரை முதல் பாகத்தில் சொல்லியிருக்கிறார்கள்.

ஹரிஹர வீரமல்லு, கோல்கொண்டா பகுதியில் கிடைத்த , மிகவும் மதிப்பு வாய்ந்த கோஹினூர் வைரத்தை, ஒளரங்கசீப்பிடம் இருந்து கைப்பற்ற கிளம்பும் காட்சிகள் , வழியில் ஒளரங்கசீப்பின் உறவினர் ஒருவன் காவல் காக்கும் சுங்கச்சாவடி போன்ற பகுதியில் நடக்கும் கொடுமைகள் அதனை முறியடிக்கும் ஹரிஹர வீரமல்லு என்று இரண்டாம் பகுதி ஒரு சாகசப்பயணம் போல நம்மையும் விறுவிறுப்பாக அழைத்துச்செல்கிறது.

குறிப்பாக டெல்லியை நோக்கிய பயனத்தில் , அந்த சுங்கச்சாவடியில் நமது இந்துக்களும் அவர்களது புனித ஓலைச்சுவடிகள் தீக்கிரையாக்கப்படுவதும் , நித்திய பூஜைக்கு அவர்கள் எடுத்துசெல்லும் சுவாமி விக்ரஹங்கள் கொதிகலன்களில் இட்டு உருக்கி உருக்குலைவதும் படம் பார்க்கும் நமக்கே ரத்தத்தை கொதிக்கவைக்கும் ரகம்.

அந்த இடத்தில் , மேற்கொண்டு எதையும் பொறுக்க இயலாமல் ஹரிஹர வீரமல்லு, வெகுண்டு எழுந்து, தனியாளாக மொகலாய கொடுங்கோலர்களை துவம்சம் செய்யும் காட்சிகள் மயிர்க்கூச்சரிய வைக்கும் . அவர் தனியாக சண்டை போடுவதை பார்த்து, ” தர்மத்தை காப்பாற்ற தனியாளாக போராட முடியுமா ? நாம் அதை வேடிக்கை பார்ப்பதா ? தர்மப்படி வாழ்வது மட்டும் போதாது , தர்மத்தை காக்க போராடவும் வேண்டும் …” என்கிற அர்த்தத்தில் ஒரு சிறுமி ,  ஸ்லோகம் சொல்ல , அதைக்கேட்டு அங்கிருக்கும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் , சிவனடியார்களும் , சாதுக்களும் வெகுண்டெழுந்து மொகலாயர் படைகளை துவம்சம் செய்யும் காட்சி மிகவும் உணர்வுபூர்வமாக படமாக்கப்பட்டிருக்கிறது.

மொகலாயர்களையும் அதற்கு பின்னர் வந்த கிறுத்துவர்களையும் விரட்டி அடித்துவிட்டு , 1947 இல் சுதந்திர குடிமக்களாக ஆன பின்னரும்,  ஓட்டுவங்கி அரசியல் நடத்தும் போலி செக்குலர் அரசியல்வாதிகளால் 2025 லும்  நமது தர்மத்தை காப்பாற்ற போராடவேண்டிய நிலையில் இருப்பது வேதனையின் உச்சம் . இன்றைய தேதியில் ஒரு ஹரிஹர வீரமல்லு போதாது , ஒவ்வொருவரும் ஹரிஹர வீரமல்லு ஆக மாற வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.

ஹரிஹர வீரமல்லுவாக , பவன் கல்யாண் மிகவும் சிறப்பாக தோன்றுகிறார். ஹரிஹர வீரமல்லுவுக்கே உரிய ஞானம் , வீரம் , தேஜஸ் என்று வசீகரித்து இருக்கிறார். ஆளும் வர்க்கத்தின் கண்களை பார்க்க இயலாமல் கால்களை மட்டுமே பார்க்க அனுமதிக்கப்படும் எளிய மக்களை , ” தங்களை ஆள்பவர்களுக்கு தலையும் இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ளட்டுமே ..” என்று பேசும் இடம் அருமை. ஒளரங்கசீப் அடைத்து வைத்திருக்கும் எங்களது குருமார்கள் ஒவ்வொருவரும் கோஹினூர் வைரத்திற்கு சமம் என்று ஹரிஹர வீரமல்லு பேசும் இடம் , பாரதம் எல்லாவற்றையும் விட குரு வை எப்படி போற்றி வணங்குகிறது என்பதை உலகிற்கு உணர்த்தும் . மிகவும் குறைவாக பேசுகிறார் , பேசும் ஓரிரு வார்த்தைகளையும் மிகவும் தீர்க்கமாய் பேசுகிறார் , ஆனால் எடுத்துக்கொண்ட செயல்களை மிகவும் தீரத்துடன் களமாடி செய்து முடிக்கிறார்.  பிறந்த குழந்தையாக ஆற்றில் அடித்துச்செல்லப்படும்  ஹரிஹர வீரமல்லுவை கண்டறிந்து சிவன் மற்றும் விஷ்ணு ஆகியோர் ஒருங்கே ஆசி வழங்கிய அவருக்கு ஹரிஹர வீரமல்லு என்று தலைமை குருக்கள் சத்யராஜ்  பெயரிடும் காட்சி அற்புதம். மகாபாரதத்தில் கிட்டத்தட்ட கர்ணனுக்கும் அதே நிலைமைதான், ஆற்றில் விடப்பட்ட குழந்தை மீட்கப்பட்டு கர்ணன் என்று பெயர் சூட்டப்பட்டு பிற்காலத்தில், கொடை வள்ளலாகவே வாழ்ந்து மறைந்தார். அதைப்போலவே ஹரிஹர வீரமல்லுவும், மற்றவர்களுக்காகவே வாழ்கிறார்.

நெற்றி நிறைய திருநீற்றுப்பட்டையுடன் , பூணுலுடன் தெய்வ சொரூபமாக, சாந்த சொரூபியாக சத்யராஜை தலைமைக்குருக்களாக பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது.

பஞ்சமியாக வரும் நிதி அகர்வால் , அவரும் பாதிக்கப்பட்ட தேவதாசிகளுக்காக போராடுகிறார் என்பதை அறியும் பவன் கல்யாண் , அவரை முழுமையாக ஏற்றுக்கொள்கிறார். நிதி அகர்வாலும் சிறப்பாக நடித்திருக்கிறார்.

நாசர் முதல் அனைத்து நடிகர்களும் மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள் .

ஒளரங்கசீப்பாக நடித்திருக்கும் பாபி தியோலும் அருமையாக நடித்திருக்கிறார்.

தொழில் நுட்ப ரீதியாக ஒளிப்பதிவாளர்கள் ஞான சேகர் மற்றும் மனோஜ் பரமஹம்சா ஆகியோர் மிகச்சிறப்பாக பணியாற்றியிருக்கிறார்கள். கிராபிக்ஸ் மற்றும் ஸ்பெஷல் எபக்ட்ஸ் வல்லுனர்களும் சிறப்பாக பங்களித்திருக்கிறார்கள். பிரவீன் கே எல் அற்புதமாக தொகுத்திருக்கிறார்.

உச்சக்கட்டமாக கீரவாணியின் இசை அற்புதம்.

கிரிஷ் ஜெகர்ல முடி ஆரம்பித்து வைத்ததை மிகவும் நிறைவாக இயக்கி முடித்து , மிகச்சிறப்பான படமாக வெளிக்கொண்டு வந்திருக்கிறார் ஜோதி கிருஷ்ணா .

எம் ரத்னம் , ஒரு கமெர்ஷியல் மசாலாவாக எடுத்து பெட்டியை நிரப்பியிருக்கலாம். அந்த சிறுமி சொன்னது தான் , தர்மத்தை காப்பாற்ற இப்படி ஒரு அருமையான படத்தை எடுத்திருக்கிறார்.

முத்தாய்ப்பாக அந்த கோஹினூர் வைரம் , ஹரிஹர வீரமல்லுவால் திரும்ப கொண்டு வரப்பட்டிருக்கலாம் , ஆனால் இன்று அது கொடுங்கோல் மொகலாய அரசிற்கு பின் இந்திய வளங்களை திருட வந்த இலண்டன் கிறுத்துவ அரசின் விக்டோரியாவின் கிரீடத்தை அலங்கரிக்க லண்டனுக்கு திருடிச்செல்லப்பட்டுவிட்டது.

எது எப்படியோ கோஹினூர் வைரம் மீட்கப்படவேண்டும் என்கிற கோரிக்கையை ஒட்டுமொத்த இந்தியர்களின் சார்பாக, நடிகராக மட்டுமில்லாமல் ஆந்திராவின் துணை முதல்வராக பவன் கல்யாண் முன் வைத்திருக்கிறார்.

ஹரிஹர வீரமல்லு பார்ட் 2 வெளியாகும் முன்னரோ அல்லது அதே கலக்கட்டத்திலோ , இன்று வாழும் ஹரிஹர வீரமல்லுவாக பாரதப்பிரதமர் பதவியை அலங்கரித்துக்கொண்டிருக்கும் நரேந்திர மோடி, தனது அதியற்புதமான வெளியுறவுக்கொள்கைகள் மூலம் கோஹினூர் வைரத்தை மீட்டுக்கொண்டு வருவார் என்று நம்பலாம்.

ஹரிஹர வீரமல்லு , ஒவ்வொரு இந்தியர்களும் கொண்டாடப்படவேண்டிய படம் !