a K.Vijay Anandh review
சின்ன சின்ன திருட்டு வழக்கில் கைதாகி , நாகர்கோயில் சிறையில் இருந்து விடுதலையாகும் பகத் பாசில், அங்கே ஒரு வீட்டிற்கு திருடப்போக, ஞாபக மறதி வடிவேலுவுடன் சிக்கிக்கொள்ள அங்கிருந்து இருவரின் பயணம் ஆரம்பிக்கின்றது. அடுத்தடுத்த நாட்களில் நடக்கும் கொலைகள் ஒருபக்கம், காவல் துறை உயரதிகாரி கோவை சரளா தலைமையில் தேடுதல் வேட்டை மறுபக்கம் என்று மாரீசன் விறுவிறுப்பாக நகர்கிறான். இரெண்டு மூன்று நாட்களில் விவேக் பிரசன்னாவின் பினாமி தோட்டத்தில் இருவரின் பயணம் நிறைவு பெறுகிரது.
வடிவேலு, கோவைசரலா மற்றும் பகத்பாசில் மூவருமே லொட லொட என்று பேசிக்கொண்ட இருப்பவர்கள். அந்த மூவரையும், மிக மிக அளவாக மெதுவாக அமைதியாக பேசவைத்து மூவருக்குள்ளும் உள்ள மகா நடிகர்களை வெளியே கொண்டுவந்திருக்கிறார் இயக்குநர் சுதீஷ் சங்கர்.
சிலர் பேசும் போது , நாம் நம்மையறியாமலேயே நாமே அவர்கள் பேசுவது போல பாவித்துக்கொண்டு வாயை மென்று கண்களை விரித்து முகத்தை அசைப்போம் அல்லவா, அதை இந்தப்படத்தில் வடிவேலு பேசும் போது செய்கிறோம். அடடா என்ன ஒரு அடக்கம், என்ன ஒரு தழும்பாத குரல். என் ஆசை மச்சானில் இருந்து இதுகாறும் பார்க்காத வடிவேலுவை, வேலாயுதம் பிள்ளையாக பார்த்து ரசிக்கலாம்.
பகத் பாசிலும் வடிவேலும் சந்திக்கும் காட்சியில் நாம் பகத்பாசிலிடம் வசமாக சிக்கிக்கொண்டார்யா வடிவேலு என்று நினைப்போம், போகப்போக, வடிவேலுவிடம் தான் பகத் பாசில் சிக்கிக்கொண்டிருக்கிறார் என்பதை உணரும் போது, சிரிப்பும் வருகிறது, பகத் பாசில் மீது பரிதாபமும் வருகிறது.
ஒரு கட்டத்தில், நீ பெரிய ஆளுய்யா… என்று பகத் பாசிலைப்பார்த்து வடிவேலு கூற… நீங்கதான் பெரிய ஆளு … என்று வடிவேலுவைப்பார்த்து பகத் பாசில் திருப்பிக்கூறு… டேய் டேய்… இங்க ஒருத்தி இருக்கேன் டா என்று அமைதியாக கோவைசரளா கொடுக்கும் எண்ட்ரியும் அற்புதம்.
ஹரிதாவிடம் வாக்குமூலம் வாங்கச்செல்லும் இடத்தில், கோவைசரளவா இது என்கிற அளவிற்கு, வெறும் ரியாக்ஷனிலேயே வெளுத்துக்கட்டிவிடுகிறார். படத்திற்கு படம் கிடைத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்துவிடும் ஹரிதா, இந்தப்படத்திலும் சரியாக செய்துவிடுகிறார்.
சக காவலராக, நான்கு கொலைகளுக்கும் ஒரு ஒற்றுமை இருப்பதாக , க்ளூ கொடுக்கும் தேனப்பன், “ அந்த நாலு பேருமே ஆண்கள் ..” என்று மிகவும் யதார்த்தமாகச் சொன்னாலும், அதிலேயே, கொலையுண்ட ஆண் வர்க்கத்தின் ஒட்டுமொத்த வக்கிரமும் வெளிப்பட்டுவிடுகிறது.
சித்தாரா, ரேணுகா இருவரும் சிறப்பாக பங்களித்திருக்கின்றார்கள்.
நீதிமன்றத்திற்கு முன்னரே வடிவேலு வாக்குமூலம் கொடுத்துவிடுவதால், வெறும் தண்டனை வாசிக்கும் நீதிமன்ற காட்சியோடு படம் கச்சிதமாக நிறைவுபெறுகிறது.
ஒரு டிராவல் படத்திற்கும் , நல்ல எழுத்தாளர் வேண்டும் , அதனை செவ்வனே செய்திருக்கிறார் கிருஷ்ணமூர்த்தி.
தமிழகத்தின் பரந்துவிரிந்த சாலைகள், பசுமையான வயல்வெளிகள், அதியற்புதமான திருவண்ணாமலை என்று ஒளிப்பதிவாளர் கலைச்செல்வன் சிவாஜி, நம்மையும் அந்த இடங்களுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். குறிப்பாக திருவண்ணாமலையில் வடிவேலுவும் பகத்பாசிலும் தங்கும் மடங்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் அருமை.
மிகவும் நேர்த்தியாக எடிட்டிங் செய்திருக்கிறார் ஸ்ரீஜித் சாரங்.
பொதுவாக பயண வழித்துணைக்கு இளையராஜாவின் பாடல்கள் வேண்டும், இதில் யுவனின் இசை வருடிக்கொடுக்கிறது, என்ன இருந்தாலும் இளையராஜா பாடல் இல்லாமலா, நேத்து ஒருத்தர ஒருத்தரு பார்த்தோம்… பாடல் போடும் போது நிச்சயம் முன்வரிசை பார்வையாளர்கள் எழுந்து நடனமாடுவார்கள்.
மாரீசன், மாறுபட்ட திரைப்பயணம் !