Beep

Rating 3.5/5

5

a K Vijay Anandh review

ஒரு புகைப்படத்தை பார்த்தாலே அதற்கு முன் பின் என்ன நடந்திருக்கும் என்று ஊகிக்கும் திறமை கொண்ட வணிக மேலாண்மை படிப்பு மாணவன், ராகவ்.

மூன்று பேராசிரியர்களின் நேர்காணலை அசால்ட்டாக கையாண்டு, அந்த கல்லூரியில் சீட் வாங்குவதிலிருந்து அவரது தனித்திறன் மேற்கோள் காட்டப்படுகிறது.

சரி இந்த Occult power என்று சொல்லக்கூடிய திறமையை எங்கே பயன்படுத்தப்போகிறார் என்று யோசிக்கும் போதே, அவரது நெருங்கிய தோழி ஒரு பாலியல் தொழிலாளி மரணிக்கிறாள்.

டென்ஷனான நேரங்களில் அவளுக்கு மொபைலில் புகைப்படங்கள் எடுத்து தள்ளுவது தான் அவளுக்கு இருக்கும் வினோத பழக்கம்.

அவற்றை வைத்தே, அவளது சாவுக்கு காரணமானவர் யார் என்பதை கண்டுபிடிப்பது தான் விறுவிறுப்பான வித்தியாசமான திரைக்கதை.

விடுதி நண்பர்களாக வருபவர்களின் நடிப்பு நையாண்டிகள் ரசிக்க வைக்கின்றன. மாய்ஞ்சு மாய்ஞ்சு படிப்பவன் 7/40 எடுப்பதும், அசால்ட்டாக ராகவ் 39/40 எடுத்துவிட்டு அந்த 1 மார்க்குக்கு சண்டை போட கிளம்புவதும் அட்டகாசம். இப்படிப்பட்ட மாணவர்கள் நிச்சயம் அனைத்து வகுப்புகளிலும் ஒருவர் இருப்பார், ரசிகர்கள் அதனை எளிதாக ரிலேட் செய்துகொள்வார்கள்.

ஒரு நல்ல மாணவனின் தோழி பாலியல் தொழிலாளி என்கிற லைன் வித்தியாசமாக இருக்கிறது. அவர்களுக்கிடையில் இழையோடும் கண்ணியமான நட்பு ரசிக்க முடிகிறது.

இன்னொரு பக்கம்,  இன்ஸ்பெக்டராக வரும் நிதிஷ் உள்ளிட்டவர்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ஆர்வக்கோளாறு என்று நினைக்க ஆரம்பித்து இவனிடம் ஏதோ விஷயம் இருக்கிறது என்று நிதிஷ் , ராகவை மதிக்க ஆரம்பிக்கும் இடம் அருமை. எனினும், நீ படிச்ச பள்ளிக்கூடத்தில் நான் ஹெட்மாஸ்டர் என்கிற விதமாக, ராகவ் ஊகிக்கும் ஒன்றை அவருக்கு முன்பே செய்து முடித்து காக்கி சட்டையின் கெத்தை நிரூபிக்கிறார்.

லேசாக சபலப்புத்தி உள்ள பேராசிரியராக நடித்தும் இந்தப்படத்தை இயக்கியும் உள்ளார்  எல் சண்முக சுந்தர். அவரது உடல்மொழிகள் அற்புதம்.

கல்லூரி கலாட்டா அத்துடன் ஒரு கிரைம் இன்வெஸ்டிகேஷன் என்று கொஞ்சம் இன்டெலெக்சுவல் ஆக திரைக்கதை அமைத்து பீப் படத்தை கொடுத்திருக்கிறார்கள்.

நிறைய இடங்களில் பின்னணி இசை இல்லாமல், யதார்த்தத்தை ரசிக்க முடிகிறது. அப்புறம் ஹாஸ்டலில் நண்பர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது யாராச்சும் வயலின் வாசித்து கொண்டிருப்பார்களா என்ன ?

பீப், இளசுகளுக்கான ஒரு பொழுதுபோக்கு! பெருசுகளுக்கு ஒரு எச்சரிக்கை !