a K. Vijay Anandh review
அக்யூஸ்ட், அஜ்மல் போலவே, இதிலும் டிரெயினிங் இன்ஸ்பெக்டராக அறிமுகமாகிறார் தர்ஷன். உயரதிகாரியின் ஈகோ பிரச்சினையால், தேவையில்லாத ஒரு குழப்பம் ஏற்பட, லால் பொறுப்பில் இருக்கும், தேர்தல் நேரத்தில் மன்சூரலிகான் ஒப்படைத்த துப்பாக்கி காணாமல் போகிறது. இன்னொரு பக்கம் , சுஜித் மூலமாக வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்யப்படவிருந்த 10 கோடி காணாமல் போகிறது.
காவல்துறை உயரதிகாரி ஆரோல் டி சங்கருக்கு மன்சூரலிகான் துப்பாக்கி காணாமல் போவது தெரியவர, அரசியல்வாதிக்கு 10 கோடி காணாமல் போனது தெரியவர, இரண்டு பிரச்சினைகளும் ஒரு புள்ளியில் இணைகிறது.
நான்கு நாட்களில் தேர்தல், அதற்குள் ஆறு மாதத்தில் ரிடையர்ட் ஆகப்போகும் லாலின் மீது ஏற்பட்டுள்ள களங்கத்தை துடைக்கவேண்டும்.
தர்ஷனின், துடிப்பான புலனாய்வு, வெல்கிறதா என்பதே விறுவிறுப்பான திரைக்கதை.
தர்ஷனின் ஹைட் வெயிட்டுக்கு சரியான கதாபாத்திரம். ஒரு மிடுக்கான இளம் காவல்துறை அதிகாரியாக பட்டையை கிளப்பியிருக்கிறார். ரெளடி கும்பல்களிடம் காவல்துறை கைகட்டி நிற்பதை பார்க்கும் போது அவர் மனதிற்குள் குமுறுகிறார். அதுவே எரிமலையாக வெடித்து, அ நீதிகளை அழித்து ஒழிக்கின்றது. அவருக்கு படத்தில் காதலும் இல்லை, கல்யாணம் பண்ணிக்க பெண் பார்க்கும் படலம் கூட கிரிமினலை வேட்டையாடும் இடத்தில் அரங்கேறுவது சுவராஸ்யம்.
லால், கேட்கவா வேண்டும்..? ஒரு மூத்த காவல்துறை அதிகாரியாக நிறைவாக நடித்திருக்கிறார்.
ஆரோல் டி சங்கர், வழக்கம் போல ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார். நேர்மையைக் கைவிடாமல், கடமையிலிருந்து தவறாமல் குழப்பான சூழ்நிலைகளை கையாளும் திறமை, அழகு. காவல்துறை உயரதிகாரிகளுக்கு ஒரு பாடமாக இவரது கதாபாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது.
முனீஷ்காந்த், கதாபாத்திரம் நிச்சயம் கதையில் ஒரு சஸ்பென்ஸ் ஏற்படுத்த உதவியிருக்கிறது. கேங்ஸ்டர் பேசுறேன் என்று அவர் கெத்து காட்டும் சீன்கள் சிரிப்பை வரவழைக்கும் ரகம்.
சுஜித், மலையாள வாடையுடன் தமிழ் பேசும் இவருக்கு இந்தப்படத்தில் கச்சிதமாக சென்னைத்தமிழ் குரல் கொடுத்திருக்கிறார்கள். அது, மிகவும் சிறப்பாக அமைந்து வசீகரித்திருக்கிறது. அவரை விட அவரது தம்பியாக நடித்திருக்கும் கெளசிக்கும் மிரட்டியிருக்கிறார். நம்மூரில் இவ்வளவு இளம் வயதில் கிரிமினல்கள் உருவாவதை நினைத்தால் வேதனையாக உள்ளது. யதார்த்தத்தை காண்பித்து விழிப்புணர்ச்சி ஏற்படுத்தியிருக்கும் இயக்குநர் கெளதம் கணபதிக்கு நன்றி!
சரண்டர், ரசிகர்களுக்கு சர்பரைஸ் விருந்து !