- a K. Vijay Anandh review
இரண்டாவது படத்தில் சரியான ஒரு சம்பவம் செய்திருக்கிறார் பாலாஜி வேணுகோபால். கண்சிமிட்டினால் ஒரு காமெடி மிஸ் ஆகிடும் என்கிற அளவிற்கு பிரேமுக்கு பிரேம் நகைச்சுவை அருவியாக கொட்டுகிறது.
ஆனால் படம் என்னவோ காமெடி படம் அல்ல. ரொம்பவே சீரியசான ஒரு கதைக்களம் , அந்த சீரியசான கிரவுண்டில் காமெடி டி20 நடத்தியிருக்கிறார்.
அந்த வீட்டுக்குமரனுக்கு அறவே பிடிக்காத குமரவேல் திடீரென செத்துப்போகிறார், எப்படி செத்தார் .? என்கிற புலன் விசாரணையில் ஆரம்பிக்கும் படம் , குமரனின் டைரக்ஷன் கனவு , காதல் என்று பயணித்து சுபமாய் நிறைவு பெறுகிறது.
சுதந்திர போராட்ட தியாகி குடும்பம், தாத்தா , அம்மா , தங்கை என்று அழகான குடும்பம், பழமையான வீடு என்று கதாபாத்திரங்களும் கதைக்களமும் ஆகச்சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.
காதலிக்க நேரமில்லை படத்தில் , என்னதான்டா கதை வைச்சிருக்க ..? என்று அப்பா கேட்ட அடுத்த நொடி கதை சொல்ல ஆரம்பித்து வைத்த நாகேஷ் , அப்படி ஒரு காட்சி இடம் பெறும் அத்தனை படங்களுமே ஹிட்டுதான் . அந்த வரிசையில் , இந்தப்படத்திலும் இயக்குனர் கனவில் பயணிக்கும் குமரன் தயாரிப்பாளர் முதல் தாத்தா வரை அனைவரிடமும் கதை சொல்கிறார்.
குமரன் , அவருடைய வசன உச்சரிப்புகள் முதல் உடல்மொழிகள் வரை அத்தனையும் அற்புதம். ஒரு நல்ல நாயகன் கிடைத்துவிட்டார்.
ஜி என் குமார் , நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு அழகான கதாபாத்திரம் , அவருக்கும் குமரவேலுக்குமான உறவு அற்புதமாக காட்சிப்படுத்த பட்டுள்ளது.
ஆமா, இந்த சீன்ல நன் எதுக்கு என்று பாலசரவணன் கேட்கும் இடத்தில் தியேட்டரில் வெடிச்சிரிப்பு.
பாயல் ராதாகிருஷ்ணா , ஒரு போராளித்தனமான நாயகி கதாபாத்திரம் , சிறப்பாக நடித்திருக்கிறார்.
தங்கை, அம்மா உள்ளிட்ட பெண் கதாபாத்திரங்கள் மிக மிக கண்ணியத்தோடு நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.
காவல்துறை அதிகாரியாக வருபவர் முதல் , அமர், அக்பர் , ஆண்டனி கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
முத்தாய்ப்பாக குமரவேல் , எப்படிப்பட்ட நான் இப்படி ஆகிட்டேன் என்கிறமாதிரியான கதாபாத்திரம் , படத்தின் ஆன்மாவாக ஜொலிக்கிறார்.
ஜெகதீஷின் ஒளிப்பதிவு , அச்சு ராஜாமணியின் இசை அருமையாக அமைந்து கதையோட்டத்திற்கு வலுசேர்த்திருக்கின்றன.
குமாரசம்பவம் , தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற ஜாம்பவான்களின் கதை சொல்லலை , இன்றைய தலைமுறைக்கு ஏற்ப கொடுத்திருக்கிறார் பாலாஜி வேணுகோபால்.
சம்பவத்தை மிஸ் பண்ணிடாதீங்க !