a K Vijay Anandh review
சாதாரணமாக பாதிக்கப்பட்டவனின் பழிவாங்கல் தங்களை அப்படிப்பட்ட நிலைக்கு தள்ளியவனின் மீது தான் இருக்கும். ஆனால், தணல் படத்தில், அந்த பழிவாங்கல் வேடிக்கை பார்த்தவன் பக்கம் திரும்புவதும், தங்கள் பக்கம் இருப்பதை விடுத்து தங்களை துன்புறுத்துபவனின் பக்கம் இருந்ததால் கோபப்பட்டு ஒட்டுமொத்தமாக அந்த துறையின் மீது கோபம் கொள்வதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான் என்பதை நியாயப்படுத்தி விடுகிறார் இயக்குனர் ரவீந்திர மாதவா.
அதர்வா, சாரா, ஸ்ரீ மற்றும் பரணி உள்ளிட்ட 6 பயிற்சி காவலர்கள் தங்களின் காவலர் வேலைக்கான அரசு உத்தரவை வாங்கிக் கொள்ள காவல் நிலையம் வருவதும், அங்கே வேண்டுமென்றே காவல்துறை ஆய்வாளர்களால் காக்க வைக்கப்படுவதும் என்னடா பண்ணப் போறாய்ங்க என்கிற எதிர்பார்ப்பை ஏற்படுத்த தான் செய்திருக்கிறது.
காத்திருக்கும் நேரம், அதர்வாவின் காதல் கதை விரிகிறது. என்னதான் இங்கிலீஷ் படம் போல இருந்தாலும் இந்திய கலாச்சாரத்தில் எடுக்கப்படும் பொழுது, காதல் பாடல் ஆடல் என்று இருக்கத்தான் செய்யும், என்று அதர்வா கூறிய கருத்தை ஏற்றுக் கொண்டாலும், அந்த காதல் எபிசோட் கொஞ்சம் புதுமையாக இருக்க வேண்டியது அவசியம் என்று ரசிகர்கள் முணுமுணுக்க தொடங்குவார்கள்.
ஒரு வழியாக அந்த காதல் எபிசோடு முடிந்து, ஆறு பேரையும் சட்டத்திற்கு புறம்பாக அப்பாயின்மென்ட் ஆர்டர் கொடுக்காமலேயே ரவுண்டுக்கு அனுப்புவதில் இருந்து கொஞ்சம் விறுவிறுப்பு தொற்றிக் கொள்ள ஆரம்பித்து இரண்டாவது பாதி முற்றிலும் திகிலாக பயணித்து சென்டிமென்டலாக நிறைவு பெறுகிறது.
ஆள் அரவமற்ற, மிகவும் மர்மமான குடிசை பகுதிக்குள் மாட்டிக் கொண்ட ஆறு பேரில், பரணியின் தலை மின்னல் வேகத்தில் வெட்டிச் சாய்க்கப்படும் பொழுது அந்த பயம் நமக்கும் ஒட்டிக்கொள்கிறது.
அஸ்வின்,ஏன் அப்படி நடந்து கொள்கிறார்…? மீதமுள்ள ஐந்து பேரும் உயிருடன் திரும்புவார்களா ? என்பது விறுவிறுப்பான இரண்டாவது பாதி.
பாதாள சாக்கடைகள் சம்பந்தப்பட்ட காட்சிகள் மற்றும் அஸ்வின் அவரது கூட்டாளிகளின் சுரங்கப் பணியாளர்கள் போன்ற ஒப்பனை உடை தலையில் டார்ச்லைட் உடன் கூடிய ஹெல்மெட் என்கிற மெனக்கடல்களில், இயக்குனர் ஒளிப்பதிவாளர் கலை இயக்குனர் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஆகியோர்களின் உழைப்பு தெரிகின்றது.
என்னதான் இக்கட்டான சூழலில் மாட்டிக் கொண்டாலும், இன்னும் காவலராக அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் கூட கையில் வாங்காத நிலையிலும், அந்த ஆறு பேரும் காக்கி சட்டைக்கு கொடுக்கும் மரியாதை மற்றும் புத்திசாலித்தனமான அணுகுமுறைகள் சபாஷ் போட வைத்திருக்கின்றன.
தணல், ஒரு இரவில் நடக்கும் விறுவிறுப்பான ஆக்சன் அதிரடி!