a K. Vijay Anandh review
இந்தியர்களை இந்துக்களாக இணைக்க , நம் இதிகாசங்களில் மீது பெருமை கொள்ளச்செய்ய இராமனின் ஆயுதம் மிராய் , வந்திருக்கிறது.
மோடி மட்டும் 2014 ல் பிரதமராக வந்திருக்கவில்லை என்றால் இந்தியாவின் நிலைமை என்னவாகியிருக்கும் என்று தெரியவில்லை . அதைப்போல , தெலுங்கு சினிமா இல்லையென்றால் , இந்திய ஆன்மிக, கலாச்சார பெருமைகள் இன்றைய தலைமுறை இந்தியர்களுக்கு தெரிய வருமா ? தெரிந்து கொள்வதில் ஆர்வம் இருக்குமா ? என்பதை நினைத்தாலே பயம் தொற்றிக்கொள்கிறது.
முதலில் தெலுங்கு சினிமாவிற்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
மிராய் படத்தின் இயக்குனர் கார்த்திக் கட்டம்னேனி , நாயகன் தேஜா சஜ்ஜா ஆகியோருக்கு ஆத்மார்த்தமான நன்றிகள்.
நாயகன் தேஜா சஜ்ஜா , ஸ்ரீ ராமனின் மறு அவதாரமா என்று நினைக்கத்தோன்றும் அளவிற்கு அவ்வளவு ஒரு தேஜஸ் , அப்படி ஒரு துடிப்பு , அப்படி ஒரு வீரம்.
அசோகனின் கலிங்க போர் வெற்றியில் இருந்து சமகாலம் வரை பயணிக்கும் அற்புதமான கதையில் , யுகம் யுகமாய் வாழ்ந்துகொண்டிருக்கும் சித்தர் அகஸ்தியர் வருகிறார். அவர் வரும் காட்சிகளில் மயிர்க்கூச்செரிகிறது.
ஷ்ரேயா அற்புதமான கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கிறார்.
விபாவாக வரும் ரித்திகா நாயக் , கொள்ளை அழகு .
நமது ஆன்மிக ரகசியங்கள் மற்றும் அற்புதங்களை பாதுகாக்க எவ்வளவு சிரத்தை எடுக்கிறார்கள் என்று நினைக்கும் போது , அது படம் பார்க்கும் ஒவ்வொரு ரசிகனுக்கும் தொற்றிக்கொள்கிறது.
ஏற்கனவே, பொருளாதார ரீதியாக அமெரிக்கா அம்பேல் ஆகிக்கொண்டிருக்கும் நிலையில் ஹாலிவுட்டின் சரக்கும் தீர்ந்து போய்விட்டது . சமீப காலங்களில் ஹாலிவுட் சினிமாவே நம் இதிகாசங்களில் இருந்துதான் கதாபாத்த்திரங்களையும் கதைகளையும் எடுத்து படம் பண்ணிக்கொண்டிருந்தார்கள் . அதைப்பார்த்துவிட்டுத்தானோ… என்னவோ … அட நாமே ஏன் அதைச் செய்யக்கூடாது என்று களமிறங்கி விட்டார்கள் நம்மவர்கள். பட ஆக்கத்தில் அவர்களை விட நாம் சிறப்பாகவே முன்னேறியிருக்கிறோம்.
மிராய் , குடும்பத்தோடு குழந்தைகளோடு பார்க்கவேண்டிய இந்திய சினிமா !