DUDE

mysixer rating 4.5/5

412

a K. Vijay Anandh review

பிரதீப் ரங்கநாதன்,  நடிகராக  மூன்றாவது படத்திலேயே முழுமையான எண்டர்டெயினர் ஆக இளம் ரசிகர்கள் மத்தியில் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறார். திரைப்படத்துறை தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்க வேண்டுமானால், அடுத்தடுத்த தலைமுறைகளையும் திரையரங்கிற்கு இழுத்து வரும் ஒரு காந்த சக்தி தேவை. அந்த காந்த சக்திகளுள் முக்கியமானவராக இருக்கிறார் பிரதீப் ரங்கநாதன்.

ஒரு ஜனரஞ்சக மசாலா தான், ஆனாலும் சாமான்ய கற்பனைக்கு அப்பாற்பட்ட ஒரு பொழுதுபோக்கு திரைக்கதை, அதற்குள் , ஆணவக்கொலை கூடாது என்கிற அட்டகாசமான மெசேஜ் என்று டியூட் கதையை உருவாக்கிய விதத்தில் அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் , ஆச்சிரியப்பட வைத்திருக்கிறார்.

இன்றைய இளைஞர்கள் சமூகம் நினைக்கும் அளவிற்கு சுயநலவாதிகளும் அல்ல , வெட்டிப்பயல்களும் அல்ல, அதற்காக கிரிஞ்சாக அறிவுரை சொல்லிக்கொண்டிருப்பவர்களும் அல்ல , எந்த சவால்களையும் எதிர்கொண்டு செய்து காட்டுபவர்கள்  என்பதை பொழுதுபோக்கின் உச்சத்தில் சென்று சொல்லியிருக்கிறார் கீர்த்தீஸ்வரன்.

படம் ஆரம்பித்து இரண்டு மூன்று காட்சிகளிலேயே , பிரதீப் ரங்க நாதனுக்கு மமிதா பைஜு இல்லை என்று சொல்லிவிட்ட இயக்குநர் அடுத்த 50 காட்சிகளுக்கு என்னத்தை காட்டப்போகிறார் என்று யோசித்துக்கொண்டிருக்கும் போதே சரத்குமாரை வைத்து போயிங் 777 போல திரைக்கதையை மேலே பறக்க வைத்து விடுகிறார்.

ஆம், பால்வளத்துறை என்றாலே நம்மூரில் பயமுறுத்தும் துறையாகிப்போய்விட்டது, அத்துறைக்கு அமைச்சராகவும், இளம் வயதிலேயே  தனது தங்கையை ஆணவக்கொலை செய்த கொலையாளியாகவும், இன்னமும் தன் சாதிப்பெருமைக்காக பெற்ற மகளையே , பெற்ற மகள் பெற்ற மகனையே  கொல்லத்துணிந்தவராகவும் காட்டி அட்டகாசப்படுத்தியிருக்கிறார்கள். சரத்குமாரும் சும்மா ஃபன் பண்ணியிருக்கிறார். இந்திய மாநிலங்களில் உள்ள அத்தனை அமைச்சர்களையும் தன் மகள் திருமணத்திற்கு அழைப்பதில் இருந்து, சீரியசாக எல்லாவற்றையும் செய்துவிட்டு பிராங்க் என்று நக்கலடிப்பது வரை, சும்மா புகுந்து விளையாடிருக்கிறார். நம்மூரில், இவரது கதாபாத்திரத்தை விட பயங்கரமான குற்றப்பின்னணிகளுடன் பல அமைச்சுக்கள் இருக்கிறார்கள், அவர்களை தானாக சிறைக்கு அனுப்ப அகன் மாதிரி ஒரு மருமகன் வரமாட்டானா என்று ஏங்க வைத்துவிடுகிறார் இயக்குநர் கீர்த்தீஸ்வரன்.

மமீதா பைஜு, சிரித்தாலும் அழகாக இருக்கிறார், சீரியசாக பயந்து அழும் காட்சிகளில் அதைவிட அழகாக இருக்கிறார்.

பிரதீப் ரங்கநாதனின் அம்மாவாக வரும் ரோகிணி முதல் அமைச்சர் சரத்குமாரின் உதவியாளர்கள், உறவினர்கள் என்று அனைவருமே குறிப்பிட்டுச்சொல்லும் படி நடித்திருக்கிறார்கள்.

இன்னொரு பக்கம்,  ஈவெண்ட் கம்பெனி நடத்தும் பிரதீப் ரங்க நாதனின் தோழர்கள், இளம்பெண்கள் என்று அனைவருமே துறுதுறு.

தான் காதலித்தவள் தன்னை காதலிக்காவிட்டாலும், அவள் காதல் ஜெயிப்பதற்காக அவளை திருமணம் செய்துகொண்டு, அவள் காதலன் மூலம் உருவான கருவை கடைசிவரை போராடி காப்பாற்றி, குழந்தை பிறந்த நிலையும் காதலிக்காக அத்தனை அவமானங்களையும் சுமந்து கொண்டு, இதை யார் செய்ய முடியும்..? ஒரு பெண்ணை உண்மையாக காதலிப்பவனாலேயே செய்ய முடியும். அப்படி ஒரு காதலனாக பிரதீப் ரங்கநாதன்,  லேசான இரட்டை அர்த்த அல்லது இளசுகள் விரும்பக்கூடிய அடல்ட் ஒன்லி நகைச்சுவைகள், படத்திற்கு படம் ஒரு அரை நிர்வாணக்காட்சி என்று படத்திற்கு படம் ஒரு முடிவோடு தான் களமிறங்குகிறார் பிரதீப் ரங்கநாதன். இன்னும் 5 ஆண்டுகளுக்குள் அதிக எண்ணிக்கையில் பெண் ரசிகர் மன்றங்களை கொண்டவராக இவர் தான் இருக்கப்போகிறார்.

இசையமைப்பாளர் சாய் அபயங்கர், ஒளிப்பதிவாளர்  நிகேத் பொம்மி இருவரும் சிறப்பாக உழைத்திருக்கிறார்கள்.

DUDE, இளசுகள் கொண்டாடும் வெற்றி !