a K Vijay Anandh review
டிஆர்பி உச்சத்தில் இருக்கும் சேனல், நேர்மையான ஒரு ஸ்டார் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஸ்ரத்தா ஸ்ரீநாத், அடுத்த ஒரு மணி நேரத்தில் ஊழலின் ஊற்றுக்கண்ணாக விளங்கும் அமைச்சர் வேலராமூர்த்தி அழைத்து அவரது வண்டவாளங்களை அவர் வாயாலேயே வரவழைத்து நேரலையாக ஒளிபரப்பி, மக்கள் மத்தியில் ஒரு பெரிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவது என்பது அவர்கள் திட்டம். தொலைக்காட்சியின் நோக்கம் தெரிந்து, நிகழ்ச்சிக்கு வராமல் டிமிக்கி கொடுத்து விட, இன்னொரு பிரபல நடிகரை, இன்ஸ்டன்ட் மேகி மாதிரி வரவழைத்து நிகழ்ச்சி ஆரம்பம் ஆகிறது.
ஸ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் நிகழ்ச்சி இயக்குனர் ஆகியோரிடையே நடைபெறும் உரையாடல்கள், இந்த படம் மீடியா Vs சமூக விரோதிகள் என்கிற டிராக்கில் பயணிக்குமோ என்கிற ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் பொழுதே, மாய்ந்து மறைந்து நல்ல கதைகளை எழுதியும் உரிய அங்கீகாரம் கிடைக்காத எழுத்தாளர் அழகர் என்கிற நாராயணனாக அவதாரம் எடுக்கிறார் செல்வராகவன்.
அந்தப் புள்ளியில் இருந்து, ஆர்யன் திறக்கதை, வேறு ஒரு தளத்தில் பயணிக்க ஆரம்பிக்கின்றது.
அதனைத் தொடர்ந்து நடைபெறவிருக்கும் குற்றச்செயல்களுக்கும் காவல்துறைக்குமான ரேஸ் Race ஆக படம் விறுவிறுப்பாக நகர்கிறது.
விஜயகாந்தின் புலனாய்வு படங்களை போலவே இதிலும் குற்றங்களை தடுக்க மேல் அதிகாரிகளால் நியமிக்கப்படும் காவல்துறை அதிகாரியாக விஷ்ணு விஷால் கொஞ்சம் லேட்டாகவே அறிமுகமாகிறார்.
ஒரு படத்தின் திரைக்கதை மற்றும் ஒளிப்பதிவு இசை எடிட்டிங் உள்ளிட்ட எல்லா விஷயங்களுக்கும் நிகராக விஷ்ணு விஷாலின் , கம்பீரமான மிடுக்கான காவல்துறைக்கு உரிய உடல் மொழி கவனம் ஈர்க்கிறது.
விஷ்ணு விஷாலுக்கும் மானசா சௌத்திரிக்குமான காதல் திருமணம் விவாகரத்து என்று, புலனாய்வு விறுவிறுப்புக்கு இடையில் ரசிகர்களை chill பண்ணும் விதமாக, காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தாலும், அந்த கதாபாத்திரங்களுக்கிடையே Hot ஆக சம்பவங்கள் நடைபெறுவது ரசிக்கத்தக்க முரண்.
செத்தும் கொடுத்தான் சீதாக்காதி என்று சொல்வார்கள், சிலரை செத்தும் கெடுத்தான் என்று சொல்வார்கள் , அந்த வரிசையில் அறிமுகக் காட்சியிலேயே தற்கொலை செய்து செத்துப் போகும் செல்வராகவன் எப்படி, அடுத்த ஐந்து நாட்களுக்கு தொடர் கொலைகளை செய்கிறார் அதுவும் சொல்லி சொல்லி செய்கிறார் என்பது வித்தியாசமான திரைக்கதை.
இதில், குற்றவாளி முதலிலேயே செத்து விடுகிறார் என்றாலும், அவர் செய்யப் போகும் கொலைகளைத் தடுப்பதாக என்று அமைக்கப்பட்ட திரைக்கதை கொஞ்சம் புதிதாக தான் இருக்கிறது, எப்படி அவர் கொலைகளை செய்யப் போகிறார் எப்படி காவல்துறை அதனை தடுக்க போகிறது என்கிற எதிர்பார்ப்பையும், ஏன் கொலை செய்வதற்கு குறிப்பிட்ட நபர்களை தேர்ந்தெடுக்கிறார் என்கிற ஆச்சரியத்தையும் விதைக்கிறது,
உண்மைதான், வாழும் போது நிஜமான சாதனையாளர்களுக்கும் சமூகத்திற்கு பிரயோஜனமான மனிதர்களுக்கும் இங்கே உரிய அங்கீகாரங்கள் கிடைப்பதும் இல்லை, கிடைக்கப் போவதும் இல்லை என்கிற சமூகத்தின் வலியை திரையில் பிரதிபடுத்தி இருக்கிறார் இயக்குனர் பிரவீன் கே .
நல்ல விஷயங்களை செய்து கொண்டிருப்பவர்களை ஏன் கொல்ல வேண்டும் என்கிற கேள்விக்கு ? என்னதான் அவர்கள் சமூகத்திற்கு நல்லவர்களாகவும் போராளிகளாகவும் இருந்தாலும், ஏன் நாம் உயிரோடு வாழ வேண்டும் என்கிற ஒரு கேள்வி அந்த ஒவ்வொருவருக்கும் ஏற்பட்டு விடுவது தான் இந்த கதையை நியாயப்படுத்துகிறது.
அந்த அளவுக்கு அவர்கள் சமூகத்தால் புறக்கணிக்கப்படுகிறார்களோ இல்லையோ குடும்பத்தினராலேயே புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பது, அதற்கு அவர்கள் செத்தே போகலாம் என்கிற சமரசத்திற்கு ரசிகர்களை கொண்டு வந்து விடுகிறது.
ஆனாலும் குற்றவாளிக்கும் காவல்துறைக்குமான ரேசில், கடைசி சுற்றில் காவல்துறை ஜெயித்து அதன் கம்பீரத்தை நிலைநாட்டுவதாக காட்டி இருப்பது ஒரு நேர்மறை கிளைமாக்ஸ்.
நீ என்ன சிவாஜி நாகேஷ் கமல்ஹாசன் போல சிறந்த நடிகனா…? என்று கேட்கும் இடத்தில் ரஜினிகாந்தை செல்வதாகவும் குறிப்பிடாமல் விட்டு விடுவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ரஜினிகாந்த் சிறந்த நடிகர் இல்லை என்று சொன்னால் கமல்ஹாசன் கூட அதனை நம்ப மாட்டார்.
இன்னொரு கட்டத்தில், “200 ரூபாய் தான்… அதற்கு மேல் கொடுத்தால் சிந்திக்க ஆரம்பித்து விடுவார்கள்…” என்று குற்றவாளிக்கு துணை போன ஒருவனை பிடித்து விசாரிக்கும் இடத்தில் விஷ்ணு விஷால் சொல்லும் பொழுது, கரெக்ட் தானே என்று யோசிக்க வைத்தது!
நடிகர்களின் நேர்த்தியான நடிப்பு, ஸ்டண்ட்ஸ் சில்வா, PC ஸ்டண்ட ஸ் பிரபு ஆகியோரது அற்புதமான சண்டைக் காட்சி அமைப்புகள், பின்னணி இசைகள், ஹரிஷ் கண்ணனின் ஒளிப்பதிவு ஜிப்ரானின் இசை, ஷான் லோகேஷின் எடிட்டிங் என்று ஆங்கிலப்பட அனுபவத்தை கொடுக்கிறான் இந்த ஆர்யன் .