a K Vijay Anandh review
பாண்டியராஜுக்கு நகைச்சுவை நன்றாகவே வரும். இந்த படத்தில் ஒரு விபரீத முயற்சியாக, கிரைம் திரில்லர் கதைக்குள் ஒரு நகைச்சுவை என்று முயற்சி செய்து இருக்கிறார்.
நகைச்சுவை தனியாக, க்ரைம் திரில்லர் அனுபவம் தனியாக என்று ரசிகர்களை இரண்டிற்குள்ளும் ஒட்ட விடாமல் செய்து விடுவது போன்ற ஒரு பிரமை.
ஜெயராம் , ஊர்வசி அவர்களது இரண்டு குழந்தைகள் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி அவந்திகா சனில்குமார் என்று ஒரு கலகலப்பான நடுத்தர வர்க்க குடும்பத்திற்குள் போதை பொருள் கடத்தல் ஆசாமி சாண்டி நுழைந்து செத்துப் போகிறார்.
அவரது கொலையை துப்பு துலக்க ஆரம்பித்து, ஒரு வழியாக கதையை முடித்து வைக்கிறார்கள்.
நடுவில் வீட்டு முதலாளியாக யோகி பாபு, கலகலப்பு ஊட்ட முயற்சி செய்து இருக்கிறார். விக்னேஷ் சிவன் நயன்தாரா தம்பதியின் மகன்களான உயிர் உலகு பெயரை எதற்கு யோகி பாபுவிற்கு வைத்திருக்கிறார்கள்? அந்த பெயரைச் சொன்னால் சிரிப்பு வருகிறதா? உயிர் உலகு என்கிற வார்த்தைகள் காமெடி வார்த்தைங்களா ?
அவ்வளவு கோடிகள் முதலீடு செய்து ஜிகே தமிழ் குமரன் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் போல வந்து போகிறார். மிஷ்கின் கதாபாத்திரத்தில் அவரே நடித்திருக்கலாம். அல்லது வெறும் தயாரிப்பாளராக மட்டும் இருந்திருக்கலாம்.
பகவதி , சிங்கம் புலி என்று காமெடி செய்ய எவ்வளவு முயற்சி செய்து இருக்கிறார்கள், சாண்டியை கொலை செய்வதற்கு முயற்சி செய்தது போல!
சாண்டி செத்துப் போகிறார், மகன் வயது இருக்கும் ஒருவனுடன் கள்ளக்காதலில் இருப்பதாக சந்தேகிக்கப்படும் சாண்டியின் அம்மாவாக நடித்திருக்கும் காயத்ரியும் செத்துப் போகிறார்.
நடுவே நல்ல பையனாக சந்தோஷ் ஷோபன் வந்து அக்காவை காதலிக்கிறார். கடைசியில் அவரும் கஞ்சா கடத்துகிறார்.
நகைச்சுவையும் சரியாக வரவில்லை கிரைமும் எக்கத்தப்பாக சென்று கொண்டிருக்கிறது, போதைப் பொருள் ஒழிப்பு என்று ஒரு அறிவுரை சொல்லி படத்தை முடித்து விடுவோம் என்று ஒரு வழியாக கம்பெனியை அதாவது பரிமளா & கோ வை இழுத்து மூடி விடுகிறார்கள். அனேகமாக லைக்காவையும் விரைவில் இழுத்து மூடி விடுவார்கள் என்று ரசிகர்கள் பேசிக் கொள்கிறார்கள்!
பிளாஸ்ட் அளவிற்கு பிரம்மாண்டமாய் வெடித்திருக்க வேண்டிய படம், கொஞ்சம் தடுமாறி இருக்கிறது!