Middle Class

mysixer rating 4.5/5

188

a K Vijay Anandh review

மக்கள் தொகையின் பெரும்பகுதியை அல்லது குறிப்பிடத்தக்க எண்ணிக்கையை ஆக்கிரமித்து இருக்கும் நடுத்தர வர்க்க மக்களுக்கு, நம்பிக்கை அளிக்கும் விதமாக வந்திருக்கும் ஒரு நேர்மையான படம் மிடில் கிளாஸ்.

முனிஷ்காந்தை வைத்து, காமெடி தான் செய்ய முடியும் என்பது அல்ல ரசிகர்களின் கண்ணீரையும் வர வைக்க முடியும் என்பதை, குறிப்பாக ஆனந்த கண்ணீரையும் வரவழைக்க முடியும் என்பதை அழகாக காட்டி இருக்கிறார் இயக்குனர் கிஷோர் முத்துலிங்கம்.

அட… ஒரு செக்கை கூட பத்திரமாக வைத்திருக்க முடியாதா என்று ரசிகர்களை சிந்திக்க விட அனுமதித்து விடாமல், பிரைவேட் டிடெக்டிவ், உளவியல் மருத்துவம் என்று டிராக்கை மாற்றினாலும், முனிஷ்காந்தின் கள்ளம் கபடம் அற்ற நடிப்பு, இயக்குனரின் இவ்வளவு மெனக்கடல்கள் தேவையில்லை அவரே போதும் என்கிற அளவிற்கு ரசிகர்களை மகிழ்வித்து இருக்கிறது.

நடுத்தர வர்க்க கணவனுக்கு அல்லது குடும்பத் தலைவனுக்கு வரக்கூடாத ஒரே ஒரு விஷயம் கோபம், என்கிற அதிக அற்புதமான எதார்த்தத்தை மிகச் சரியாக கையாண்டு இருக்கிறார்கள் இயக்குனர் கிஷோர் முத்துலிங்கமும், அவரது கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்த முனிஷ்காந்தும்.

எல்லா  இடத்திலும் தன்னை வெறுப்பேற்றும் மனைவியிடம் மட்டுமல்ல தன்னுடைய இயலாமையின் மீது கூட கோபம் காட்டாத முனிஷ்காந்த் ஆச்சரியப்பட வைத்திருக்கிறார்.

விஜயலட்சுமி, மிகச் சரியாக குடும்பப் படங்களின் இயக்குனர் வி சேகர் மறைந்த இந்த வாரத்தில் இந்த படம் வெளியாகியிருக்கிறது, ஒருவேளை அன்று விஜயலட்சுமி நடிக்க ஆரம்பித்து இருந்தால் வி சேகரின் எல்லா படங்களிலும் விஜயலஷ்மி தான் ஹீரோயினாக இருந்திருப்பார் என்கிற அளவிற்கு, நடுத்தர வர்க்க ஒரு இளம் மனைவியாக,  இரண்டு குழந்தைகளுக்கு தாயாக எப்பாடுபட்டாவது தங்களது குடும்ப பொருளாதாரத்தை உயர்த்தி விட வேண்டும் என்று துடிக்கும் சராசரி குடும்பத் தலைவியை மிகவும் கச்சிதமாக பொருந்திப் போயிருக்கிறார்.

அந்த அற்புதமான குடும்ப பட இயக்குனர் வி சேகருக்கு, மிடில் கிளாஸ் படத்தை விட மிகப் பெரிய ஒரு இறுதி அஞ்சலி இருந்து விட முடியாது எனும் அளவிற்கு, இந்த படத்தை ஆகச் சிறப்பாக இயக்கி இருக்கும் கிஷோர் முத்துராமலிங்கத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

இரண்டு குழந்தைகளும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்,

இந்த படத்தில், 1970 களில் ராஜஸ்தானில் இருந்து வரும் மார்வாடி ஒருவருக்கு பிழைக்க வாய்ப்பு அளித்து ஒட்டுமொத்த அந்த சமூகத்திற்கும் கதவை திறந்து விடும் கதாபாத்திரமாக, வேலராமூர்த்தி சிறப்பாக நடித்திருக்கிறார்.

நண்பர்களாக வரும் கோடாங்கி மற்றும் குரேஷி ஆகியோர் சிறப்பாக தங்களுக்கு கதாபாத்திரங்களில் பொருந்தி போகிறார்கள்.

மாற்றுத்திறனாளி ஆக இருந்தாலும் மனதளவில் எங்களுக்கு மிக உயர்ந்த குணம் இருக்கின்றது என்பதை காட்டுவதாக அமைந்த அந்த மாற்றுத்திறனாளிக்காக பாத்திரம் அழகு அந்த பாத்திரப்படைப்பிற்காகவே கிஷோர் முத்துராமலிங்கத்தை மேலும் பாராட்டலாம்.

திருட்டு நகைகளை வாங்கும் மார்வாடிகளை மட்டுமே சித்தரித்துக் கொண்டிருந்த தமிழ் சினிமாவில், பல வருடங்கள் காத்திருந்து பட்டக்கடனை அடைத்துவிட்டு நிறைவாக கண்ணை மூடும் மார்வாடி ஒருவரை காட்டி இருப்பது நல்ல ஆரோக்கியமான முன்னெடுப்பு.

அது மட்டுமல்லாமல், கிராமங்களில் பிழைக்க வாய்ப்பு இருக்கும் நிலையில் நகரங்களில் வாழ்ந்து உங்கள் வாழ்க்கையை  நரகம் ஆக்கி விடாதீர்கள் என்கிற கருத்தையும் அழகாக பதிய வைத்து விடுகிறார் இயக்குனர் கிஷோர் முத்துராமலிங்கம்.

விதை நெல் இருக்கும் அறையின் சாவியை கொடுத்துவிட்டு, இரண்டு மூட்டைய வச்சுட்டு மீதி எடுத்துக்கோங்க என்று அசால்டாக சொல்லி செல்லும் முனிஷ்காந்த் கதாபாத்திரம் போல நாம் அனைவரும் கள்ளம் கபடமில்லாமல் வாழ்ந்து விட்டால் அந்த சமூகத்தில்  அமைதியும் வளர்ச்சியும் நிரந்தரமாக இருக்கும் என்று தோன்றுகிறது.

சுதர்சனின் ஒளிப்பதிவும் பிரனவின் இசையும் மிடில் கிளாசுக்கு பக்கபலமாக அமைந்திருக்கின்றன.

விசு, வி சேகர் உள்ளிட்ட ஜாம்பவான்களின் ஆன்மா  மேலிருந்தும் ஆசிர்வதிக்கும்.

மிடில் கிளாஸ், சூப்பர் கிளாஸ் திரைப்படம்!