a K Vijay Anandh review
தமிழ் சினிமாவின் மிகவும் ஆரம்பகால சினிமாக்களிலேயே யானைகள் வந்துவிட்டன, பெரும்பாலும் போர்க்காட்சிகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட அன்றைய காலகட்ட படங்களில் யானைகள் சம்பந்தப்பட்ட காட்சிகளில் தேவைகள் அவசியமானதாக இருந்தன.
அதன் பிறகு எம்ஜிஆர் நடித்த நல்ல நேரம், தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் வந்த அந்த படம் நீண்ட நாட்களுக்கு யானைகளை யானைகளை மையப்படுத்திய படமாக ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தது.
ராம் லக்ஷமணன், என்று யானையுடன் கமல்ஹாசன் நடித்த படம் வெளியாகி இருந்தாலும், ரஜினிகாந்த் நடித்த அன்னை ஓர் ஆலயம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
அதன் பிறகு ஒரு நீண்ட இடைவேளைக்கு அப்புறம் வெளிவந்த பிரபு சாலமன் இயக்கிய கும்கி, யானைகள் சம்பந்தப்பட்ட படம் என்றாலே, கும்கி தான் என்கிற அளவிற்கு ரசிகர்கள் மனதில் பெரிய வரவேற்பை பெற்றது.
இதோ கும்கி 2, கும்கி முதல் பாகத்தை விட இன்னும் அதிகமாக மெனக்கெட்டு யானைக்கும் மனிதனுக்குமான உறவை இன்னும் ஆழமாக காண்பித்து அற்புதமான படமாக வெளியாகி இருக்கிறது.
முதல் கும்கி படத்தில் விக்ரம் பிரபுவை அறிமுகப்படுத்திய பிரபு சாலமன், கும்கி 2 வில் இன்னொரு அஜித்குமாரை அறிமுகப்படுத்தி இருக்கிறார் என்றால் அது மிகையல்ல.
ஆம், அமராவதி போன்ற படங்களில் பார்த்த அஜித் குமாருடன் , இன்னும் அழுத்தமான அஜித்குமார் ஆக இந்த படத்தில் அறிமுகமாகி இருக்கும் மதி தோன்றுகிறார். அவருடைய உடல் மொழி மற்றும் நடிப்பு ஆகியவை, நடிகராக ஒரு நீண்ட பயணத்திற்கு இவர் தயாராகிவிட்டார் என்பதை உணர்த்துகிறது.
கடைசி வரை இவருக்கு கதாநாயகி என்று யாரும் இல்லை, படம் முழுவதும் இவர் காதலிப்பது நிலாவைத்தான். ஒரு யானைக்கு நிலா என்று பெயர் வைத்திருப்பதே பெரிய சுவாரசியம்.
பூமி என்கிற கதாநாயகப் பெயருடன் வரும் மதிக்கும் நிலா என்பதுதான் பொருள். ஆக, ஒரே வானத்தில் என்று சொல்ல முடியாவிட்டாலும் ஒரே திரையில் இரண்டு நிலாக்களாக, படம் முழுவதும் வந்து ரசிகர்களை மகிழ்விக்கிறார்கள்.
யானை குட்டியை விட பல மடங்கு சிறியவனாக இருப்பான் எப்படி அந்த குட்டியை பள்ளத்திலிருந்து மேலே தள்ளுவான் என்கிற அபத்தமான கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. ஆற்றல் என்பது உருவத்தில் அல்ல மனதில் என்பதை அந்த காட்சியில் அற்புதமாக உருவகப்படுத்தி விடுகிறார் இயக்குனர் பிரபு சாலமன்.
ஒரு பக்கம் யானை இன்னொரு பக்கம் ஞானம் அதாவது கல்வி என்று, மதியை நல்வழிப்படுத்தும் ஆசிரியராக திருச்செல்வம் சிறப்பாக நடத்தி இருக்கிறார்.
யானையை பலி கொடுப்பது போல கும்கி 2க்கு முன் இரண்டு படங்கள் வெளியாகி விட்டன, என்றாலும் இதில் யானையை பலி கொடுப்பதற்கான காரணமாக சொல்லப்படும் அரசியல் ஆச்சரியப்பட வைக்கிறது. அது நாம் நிஜமாக கடந்து வந்த அரசியல், ஆனால் நிஜமாக யானையை பலி கொடுத்தார்களா என்பது கேள்விக்குறிதான்….? ஒருவேளை அப்படி நிஜமாக நடந்திருந்தால் சம்பந்தப்பட்டவர்கள், தங்களது வாழ்க்கையில் இறுதி நாட்களை மிகவும் கடுமையான நாட்களாக கழிக்க வேண்டியது இருக்கும்.
அர்ஜுன் தாஸ், மிகக் குறுகிய காலத்தில் விஜய் மற்றும் அஜித் ஆகியவருடன் மோதியவர் என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில், அட இவர் முதல் படத்திலேயே யானையுடன் மோதி இருக்கிறார் என்பதை அறியும் பொழுது அவரது திறமை பளிச்சிடுகிறது. அவரை ஒரு கொடூர வில்லனாக சித்தரித்து விடாமல், நல்ல முடிவு கொடுத்து அனுப்பி விடுகிறார் பிரபு சாலமன்.
ஷ்ரிதா ராவ், ஒரு ஒலிப்பதிவாளராக, அழகாக ஒரு கதாபாத்திரத்தில், படத்திற்கு மிகவும் அத்தியாவசியமான காட்சிகளுடன் அருமையாக நடித்திருக்கிறார்.
காளிஸ் ஆக வரும், ஆண்ட்ரூஸ் சிறந்த துணை நடிகராக வலம் வருவார் என்பதில் சந்தேகம் இல்லை.
ஸ்டண்ட் சிவா அமைத்திருக்கும், யானைகளுடன் காவல்துறை சண்டை போடும் காட்சிகள் அற்புதம் குழந்தைகளை நிச்சயம் குஷிப்படுத்தும் ரகம்.
வழக்கம்போல எம் சுகுமார், காடுகளில் பயணித்து அற்புதமான ஒரு காட்சி விருந்தை வழங்கியிருக்கிறார்.
ஒரு சிறந்த படத்தை எவ்வளவு மெனக்கெட்டு கொடுக்க வேண்டியது இருக்கிறது என்பதை பிரபு சாலமனின் இந்த காத்திருப்பும் கடும் உழைப்பும் காட்டி இருக்கிறது, அவை ஒவ்வொரு படைப்பாளிகளுக்கும் பாடமாக அமைந்திருக்கிறது.
கும்கி 2, குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் பிடித்தமான அற்புதமான திரைப்படமாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!