a K Vijay Anandh review
நீ முன்னாலே போ… நான் பின்னாலே வாரேன்… என்கிற ஒரு பாடலை பட்டித் தொட்டி எங்கும் கேட்டிருப்போம். அது ஒரு வாழ்க்கை தத்துவம் என்பதை நாம் உணர்ந்திருக்க மாட்டோம். காலம் நம்மை பிரச்சினைகளுடன் முன்னோக்கி இட்டுச் சென்று கொண்டே இருக்கும். ஆனாலும், நாம் அறியாத வண்ணம் அதற்கான தீர்வுகளையும் பின்னாடியே அனுப்பி வைக்கும்.
அப்படித்தான் தொலைத்த தன்னை கண்டுபிடிக்க கிளம்பும் பூர்ணிமா ரவியின் பயணம்.
தொலைத்த அவரை கண்டுபிடித்து கொடுக்க, வைபவ் முருகேசனும் பின்னாடியே பயணிக்கிறார்.
இருவரும் இணைந்ததிலிருந்து Yellow சூடு பிடிக்க ஆரம்பித்து விடுகிறது.
அளவான அதேசமயம் மிகவும் கூர்மையான அதே சமயம் மிகவும் இதமான வசனங்களைக் கொண்டே இந்த படத்தை மிகவும் விறுவிறுப்பாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஹரி மகாதேவன்.
இன்னும், இது போன்ற இரண்டு படங்களில் நடித்து விட்டால் போதும் பூர்ணிமா ரவி அடுத்த 10 – 15 வருடங்களுக்கு, நல்ல கதைகளை வைத்திருக்கும் இயக்குனர்கள் தேடும் நடிகையர் பட்டியலில் இடம் பிடித்து விடுவார் என்றால் மிகையாகாது. சோகம் முதல் சந்தோஷம் வரை, விரக்தி முதல் வெற்றி வரை, நட்பு முதல் காதல் வரை, பாசம் முதல் பரிதவிப்பு வரை என்று எல்லா உணர்வுகளையும் மிகவும் நேர்த்தியாக வெளிப்படுத்தி, அட்டகாசப்படுத்தி இருக்கிறார் பூர்ணிமா ரவி.
வைபவ் முருகேசன், இதுபோன்ற பயணங்களை மையப்படுத்தி வரும் படங்களுக்கு என்றே நடிக்க வந்தவர் போல, ஒரு அட்டகாசமான உடல் மொழியுடன் அதே நேரம் மிகவும் இயல்பாக நடித்து வசீகரித்து இருக்கிறார்.
நமிதா கிருஷ்ணமூர்த்தி, ஒரு இண்டிபெண்டன்ட் பெண்ணாக துடிப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
லீலா சாம்சன் மற்றும் வினோதினி வைத்தியநாதன் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரங்களை நிறைவாக செய்திருக்கிறார்கள்.
படுத்துக்கொண்டே நடிப்பில் ஜெயிக்கும் ஆற்றல் ஒரு சில நடிகர்களுக்கே உண்டு, டெல்லி கணேஷ், கேட்கவும் வேண்டுமா ?
பூர்ணிமா ரவியின் சிறுவயது கதாபாத்திரமான நீலாம்பரியும் நல்ல தேர்வு, வானவில் பார்க்கும் காட்சியில் இருவரையும் ஒரே பிரேமில் காட்சிப்படுத்தி இருப்பது அட்டகாசம்.
தமிழ்நாட்டில் இருந்து ஒன்று இரண்டு காட்சிகளிலேயே கேரளாவிற்குள் நுழையும் திரைக்கதை படத்திற்கு பெரிய பலம். கேரளாவின் இயற்கை எழில் கொஞ்சும் அழகை அப்படியே படம் பிடித்து அசத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் அபி அத்விக்.
கிளிஃபி கிரிஸ் இன் இசையில் அமைந்த பாடல்களும், ஆனந்த் காசிநாத்தின் பின்னணி இசையும் கவிதைகள் போல உடன் வருகின்றன.
அட நம்ம பிரபு சாலமன், ஒரே ஒரு காட்சியில் வந்தாலும் சிறப்பாக நடித்திருக்கிறார்.
வாழ்க்கையில் எதை வேண்டுமானாலும் தொலைத்து விடலாம். ஆனால், நம்மை தொலைத்து விடக்கூடாது.
Yellow, நல்ல முயற்சி, நல்ல படம்!