a K Vijay Anandh review
வெற்றிடத்தை காற்றும் நீரும் தாமாக நிரப்புவது போல, திரைப்படத்துறையில் மாஸ் நடிகர்கள் மற்றும் மாஸ் இயக்குனர்கள் கிட்டத்தட்ட ஓய்வு நிலைக்குச் சென்று கொண்டிருக்கும் இந்த நேரத்தில், இடம் நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் அழகாக இன்னும் சொல்லப்போனால் பேரழகாக அந்த இடத்தை நிரப்புகிறார்கள், தமிழ் சினிமாவை பொறுத்தவரை நிரப்பி கொண்டு இருக்கிறார்கள்.
இந்தப் படத்திற்கு மாஸ்க் என்று வைத்ததை விட மாஸ் என்று வைத்திருக்கலாம். அந்த அளவிற்கு இளம் கதாநாயகன் கவினுக்கு மாஸான படமாக அமைந்திருக்கிறது.
பெரிய காரியங்களை நிறைவேற்றுவதற்கு பெரிய தோற்றங்களோ பிற அம்சங்களோ தேவையில்லை. ஆர்வமும் அறிவும் கொஞ்சம் நேர்மையும் இருந்துவிட்டால் போதும்.
அப்படி, ஒரு நேர்மையான டிடெக்டிவாக தனி மனிதர்கள் முதல் அரசியல்வாதிகள் வரை ஏன் தாதாக்கள் வரை அவர்களது பிரச்சனைகளில் இருந்து வெளிவர தீர்வுகளை கண்டுபிடித்து உதவுகிறார் கவின் .
ஆறு வயதில் இவருக்கு ஒரு அழகான பெண் குழந்தை இருக்கிறது ஆனால் கடைசி காட்சி வரை அவரது மனைவியை காட்டாமலேயே கதை சொல்லி இருப்பது உள்ளிட்ட பல புத்திசாலித்தனங்கள் நிறைந்த திரைக்கதை அமைத்து இந்த படத்தை இயக்கி இருக்கிறார் விகர்ணன் அசோக்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பல படங்களில் அவருடன் மோதும் வில்லன்கள் குறிப்பாக சூப்பர் டூப்பர் ஹிட்டான படங்களில் பெண்களாகவே தான் இருப்பார்கள,. வடிவுக்கரசி முதல் ரம்யா கிருஷ்ணன் வரை.
இந்த படத்தில் கவினுக்கு அப்படி ஒரு வாய்ப்பு, ஆண்ட்ரியா ஜர்மையாவுடன் மோதுகிறார், அதுவும் மிகவும் அசால்டாக அசால்ட் பண்ணுகிறார்.
ஆண்ட்ரியாவுக்கு, இந்த படத்தில் ஒரு அற்புதமான கதாபாத்திரம். தனிமனித ஒழுக்கம் இல்லாத அதிகார வர்க்கத்தினரின், கொடுமைகளை தன் கையில் வைத்துக் கொண்டு விளையாடும் ஒரு அற்புதமான மிரட்டலான கதாபாத்திரம், சிறப்பாக செய்திருக்கிறார்.
சார்லி, இவரெல்லாம் சும்மா வந்து போவாரா என்று சந்தேகப்படும் ரசிகர்களை கூட இறுதி காட்சி வரை ஆஃப் பண்ணி வைத்து மிகப்பெரிய இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் இயக்குனர்.
முதலிலேயே குறிப்பிட்டது போல, கதாநாயகியை கடைசிவரை கண்ணில் காட்டாத இயக்குனர், திருமணம் கடந்த உறவு – காதல் என்கிற – தற்காலிகமாக இந்த மண்ணை ஆக்கிரமித்து இருக்கும் – சித்தாந்தத்திற்கு வலு சேர்க்கும் விதமாக கள்ளக்காதலி – அதாவது கள்ளக்கதாநாயகி – உடன் நாயகனை டூயட் பாட வைத்து வித்தியாசமான பொழுதுபோக்கை கொடுத்திருக்கிறார். இந்த படம் முதல் கதாநாயகன், கதாநாயகி ஆகிய அடைமொழிகளுடன் கள்ளக்கதாநாயகி என்கிற அடைமொழியும் சேர்ந்து கொண்டால் வியப்பு ஏதுமில்லை. இந்தப் படத்தில் அப்படி ஒரு கள்ளக்கதாநாயகியாக ருஹானி சர்மா, சிறப்பாக நடித்திருக்கிறார்.
பவன் கிருஷ்ணா, அற்புதமான ஒரு நடிகர், வாக்காளர்களுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து, ஆட்சி செய்ய தேவையான குறைந்தபட்ச அறிவே இல்லாவிட்டாலும் பதவிகளில் அமரும் சமகால அரசியல்வாதிகளை அப்படியே பிரதிபடுத்தி இருக்கிறார்.
சுப்பிரமணிய சிவா , ஒரு எதிர்மறை கதாபாத்திரத்தில் வந்து மிரட்டி இருக்கிறார்.
கமல்ஹாசனுக்கு ஒரு இந்தியன், விக்ரமிற்கு ஒரு அந்நியன், ரஜினிகாந்த்திற்கு ஒரு சிவாஜி முத்தாய்ப்பாக விஜயகாந்திற்கு ஒரு ரமணா என்பது போல கவினுக்கு ஒரு மாஸ்க்.
ஒளிப்பதிவு இசை எல்லாமே சரியாக அமைந்திருக்கிறது. பீட்டர் ஹெயின் மாஸ்டரின் சண்டை காட்சிகள் ஆகச்சிறப்பாக அமைந்திருக்கிறது. சண்டைக் காட்சிகள் அமைவது என்பது கதாநாயகனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல உதவும் முக்கியமான அம்சம். இந்த படத்தில், ஒரு சிறுவனை துரத்திச் சென்று சண்டை செய்து கொண்டிருக்கும் பொழுது திரும்பி வரும் கவினை பார்த்து ஊர் மக்களே ஒரு ஐந்து அடி பின்னால் நடப்பது, எம்ஜிஆர் முதல் தனுஷ் வரை எந்த நடிகர்கருக்கும் கிடைக்காத ஒரு காட்சி அமைப்பு.
மாஸ்க், தனியாக என்று இல்லாவிட்டாலும் ஒவ்வொரு மனிதனும் தனது சுய அடையாளத்தை மறைக்கும் விதமாக ஏதோ ஒரு மாஸ்க் அணிந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
அப்படி தன்னை சுற்றி இருக்கும் அபாயகரமான மனிதர்களை அடையாளப்படுத்துகிறது இந்த மாஸ்க்.