ஒண்டிமுனியும் நல்லபாடனும்

mysixer rating 5/5

68

a K Vijay Anandh review

கொடுக்கப்பட்டிருக்கும் ரேட்டிங் 5/5 தலைப்பிற்கு சரியாக போய்விட்டது, ஒண்டிமுனியும் நல்ல பாடனும் நமது மண் சார்ந்த அற்புதமான படத்தலைப்பு.

நல்லபாடன், என்று எந்த முகூர்த்தத்தில் இப்படத்தின் பெயரை வைத்தார்களோ என்னவோ, நல்ல பாடத்தை இந்த படம் எடுத்திருக்கிறது என்று சொன்னால் மிகை அல்ல.

இது, மதத்தை தூக்கி பிடிக்கும் படம் என்று சொல்லவில்லை. ஆனாலும், நமது வாழ்வியலோடு இணைந்த ஒரு கிராமிய பக்தி நெறியை வலியுறுத்தி இருக்கிறது. அந்த கிராமிய பக்தி நெறி, பணக்காரர்களை விட எளிய மனிதர்களிடம் அதிகமாக இருக்கிறது அவர்களாலேயே அது தலைமுறை தலைமுறையாக செழித்து வளர்ந்து ஓங்கிக் கொண்டிருக்கிறது.

இரண்டு,  பண்ணாடி என்று சொல்லப்படும் பெரிய மனிதர்களின் தனிப்பட்ட ஈகோ பிரச்சினைக்குள் சிக்கி, ஒரு சாதாரண மனிதனின் ஒண்டிமுனிக்காக வைத்த நேர்த்திக்கடன் நிறைவேறாமல் போய்க்கொண்டிருப்பதை  அருமையான திரைக்கதை ஆக்கி அந்த நேர்த்திக்கடன் நிறைவேறியதா ?  இல்லையா ?  என்பதாக படத்தை முடித்திருக்கும் விதம் அருமை.

நல்லபாடனாக நடித்திருக்கும் பரோட்டா முருகேசனுக்கு,  இந்த படத்திற்காக சிறந்த குணச்சித்திர நடிகருக்கான தேசிய விருதை பெறுவாரா என்கிற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

பொறுப்பில்லாத மகனிடமும், குடிகார மருமகனிடமும் வீட்டில் மாட்டிக்கொண்டது பத்தாது என்று, இரண்டு பண்ணாடிகளிடமும் மாட்டிக்கொண்டு அவர் படும் அவஸ்தை நமக்கே கண்ணீரை வரவழைத்து விடுகிறது.

வாழாவெட்டியாய் வீட்டிற்கு வரும் தன் மகள் வயிற்றுப் பேரன் மூலமாக தெரிந்தோ தெரியாமலோ … ஏற்றுக்கொள்கிறோமோ இல்லையோ ஆனாலும்…இந்த சமூகத்திற்கு நல்ல ஒரு விதையை விதைத்து விடுகிறார்கள்.

ஆடுகளை பலி கொடுக்கக் கூடாது என்பது அல்ல, சமூகம் சந்தோஷமாக வாழ பலி கொடுக்க வேண்டியது யாரை என்பதில் தான் இருக்கின்றது என்கிற ஒரு பாடத்தை போதித்திருக்கிறார் இயக்குனர் சுகவனம்.

மகனாக நடித்திருக்கும் விஜயன், அவரது காதலியாக வரும் வித்யா, மருமகனாக நடித்திருப்பவர் , மகளாக நடித்திருப்பவர் ஊர் காரர்களாக நடித்திருப்பவர்கள் என்று அனைவருமே மிகச் சிறப்பான பங்களிப்பை வழங்கி இருக்கிறார்கள்.

வயலும் , சிறு குன்றுகளும் சிறு காடுகளுமாக அற்புதமான ஒரு கொங்கு பகுதியை கதைக்களம் ஆக்கி ரசிகர்களுக்கு புதிய விருந்து படைத்திருக்கிறார்கள் படக்குழுவினர்,  குறிப்பாக விமலின் ஒளிப்பதிவு அருமை.

நடராஜன் சங்கரனின் பின்னணி இசையும் கவிதையாக ரசிகர்களை வருடுகிறது.

எளிய மக்களோடு மக்களாக அவர்களுக்கானவர்களாக வாழாமல் அழுக்கானவர்களாக வாழும் பெரிய மனிதர்கள், அவர்களை நாடிவரும் அப்பாவி மக்களை எப்படி ஏமாற்றி பயன்படுத்திக் கொள்ளும் சந்தர்ப்பவாதிகளாக இருக்கிறார்கள் என்பதையும், எல்லா அழுத்தங்களையும் மீறி அந்த அப்பாவி மக்கள் தங்களது வாழ்வியல் நெறிகளை கைவிடாதவர்களாக வாழ்கிறார்கள் என்பதையும், படிப்பறிவு இல்லாமல் அவர்கள் இழந்த வாழ்வாதாரங்களையும் அற்புதமாக காட்சிகள் ஆக்கி யோசிக்க வைத்திருக்கிறார்கள்.

ஆட்டுக்கார அலமேலு, சமீபத்தில்  ஒரு கிடாயின் கருணை மனு ஆகிய படங்களில் வரிசையில் ஒரு கிடாவை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் ஒண்டிமுனியும் நல்லபாடனும் திரைப்படம், நிச்சயமாக சர்வதேச அரங்கில் தமிழ் சினிமாவிற்கு நல்ல மரியாதைகளை பெற்றுத்தரும் என்றால் மிகை அல்ல.