a K Vijay Anandh review
வைகை நதி உற்பத்தியாகும் மேற்கு தொடர்ச்சி மலைகளில் இருந்து அது பாயும் தேனி மதுரை சிவகங்கை ராமநாதபுரம் மாவட்டங்களை கதைக்களமாக்கி, வந்த படங்கள் பல. அவற்றில் பெரும்பாலான படங்கள் வெற்றி படங்களாகவும் ரசிகர்கள் கொண்டாடும் படங்களாகவும் இருக்கின்றன. அந்த வகையில், கொம்புசீவிக்கு ஒரு தனிச்சிறப்பு இருக்கின்றது. ஆம், இதன் கதைக்களம் வைகை நதிக்கரையோரம் அல்ல, வைகைத்தாயின் மடியிலேயே எடுக்கப்பட்டிருக்கும் படமாக கொம்பு சீவி, வெளிவந்திருக்கிறது.
ஒரு அணை கட்டப்படும் பொழுது, பயனாளிகளாக ஆயிரம் கிராமங்கள் இருந்தாலும், பல கிராமங்கள் பலிகடா ஆக்கப்படுவதும் கசப்பான உண்மை. அப்படி பாதிக்கப்பட்ட கிராமங்கள் தங்களது விவசாய நிலங்களை இழந்த விவசாயிகள் பற்றிய கதையாக இந்த படம் வெளிவந்திருக்கிறது.
அணையில் தண்ணீர் குறையும் பொழுது தென்படும் விவசாய நிலங்களில் அந்த பகுதி மக்கள் விவசாயம் செய்வதும், செழித்து வளர்ந்த பயிரை அறுவடை செய்யும் முன்னரே பல நேரங்களில் நீர் மட்டும் உயர்ந்து அவை மூழ்கி போவதுமாக அவர்கள் பாடு திண்டாட்டமாக இருப்பதை ஒரு சில காட்சிகளிலேயே புரிய வைத்து விடுகிறார் இயக்குனர் பொன்ராம்.
அப்படிப்பட்ட சூழ்நிலையில் தடம் மாறும் அந்த கிராமத்தினருக்கு நிரந்தர தீர்வாக குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்பது வழங்கப்பட்டாலும், ஒரு தலைமுறைக்கு மட்டுமே உதவும் அரசு வேலை தீர்வா..? தலைமுறை தலைமுறையாக கை கொடுக்கும் விவசாய நிலங்கள் தீர்வா ? என்கிற கேள்வி எழாமலும் இல்லை.
உண்மையில், அப்படி பாதிக்கப்படும் மக்கள் பறிகொடுத்த விவசாய நிலங்கள் சிலநூறு ஏக்கர்களே இருக்கும், அணைக்கட்டால் பயனடையும் விவசாய நிலங்களோ பல லட்சம் ஏக்கர்கள் இருக்கும். அப்படி இருக்கும் பொழுது நிரந்தர தீர்வாக அவர்களுக்கு, அவர்கள் இழந்த நிலத்திற்கு இரு மடங்காக விவசாய நிலங்கள் வழங்கப்பட வேண்டும் , வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்பதே அறிவுப்பூர்வமான நிரந்தர தீர்வாக இருந்திருக்க முடியும். அப்படியெல்லாம் சிந்தித்து அறிவுப்பூர்வமான ஆக்கபூர்வமான நிர்வாகம் செய்வதற்கு, இன்னும் தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்பட்டு விடவில்லை என்பது துரதிஷ்டம்.
சரி. படத்திற்கு வருவோம்.
டியூட் படத்திற்கு பிறகு சரத்குமாருக்கு இன்னும் ஒரு அட்டகாசமான கதாபாத்திரம். ரொக்கப்புலியாக, பாய்ந்து பாய்ந்து நடித்திருக்கிறார். பாம்பு கடித்து விட்டால் பயப்படக்கூடாது என்று சொல்வார்கள், அதற்கு நேர்த்தியான உதாரணமாக சரத்குமாரின் அறிமுகக் காட்சி அமைக்கப்பட்டிருப்பது அற்புதம். கடித்த பாம்பை அசால்டாக கைகளில் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு வரும் அவரது அறிமுக காட்சி அட்டகாசம். அதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு பிரச்சனைகளிலும் அசால்டாக முடிவெடுத்து அடுத்த கட்டத்திற்கு செல்லும் அவரது பாத்திரப்படைப்பு அருமை. நையாண்டியும் காமெடியும் அதிரடியுமாக அட்டகாசப்படுத்தி இருக்கிறார் சரத்குமார், குறிப்பாக இந்த படத்தில் தான் அவர் மதுரை வழக்கு பேசி நடித்திருக்கிறார் என்று தெரிகிறது, ஒரிஜினல் மதுரைக்காரர்களை விட சிறப்பாக பேசி இருக்கிறார். வானத்தில், ரேவதியையும் ரோகினியையும் தேட முனிஷ்காந்த் சொல்ல அட ராதிகாவையும் தேடிக் கொள்கிறேனே.. அவரும் நட்சத்திரம் தானே என்று மெருகேற்றி இருக்கும் இடம், காமெடி கலாட்டா! சாவைத் தள்ளிப் போடுவது, அதிக நாள் வாழ்வதற்கு என்கிற பஞ்ச் அட்டகாசம்.
சண்முக பாண்டியன், சிறுவயதிலேயே பெற்றோர்களை இழந்து நிற்கும் அனாதையாக இருப்பவருக்கு சரத்குமார் இடம் அடைக்கலம் கிடைக்கிறது. அடுத்தடுத்து இவர் செய்யும் அலப்பறைகள் அட்டகாசம், குறிப்பாக இன்ஸ்பெக்டர் தர்ணிகாவுடன் .
தர்ணிகா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஸ்ரீதிவ்யா , ரஜினி முருகன் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் வரிசையில் பொன்ராமின், அழகான அறிமுகம். தர்ணிகாவுக்கும் , ரசிகர்கள் ஓ போடுவார்கள்.
முனிஷ்காந்த், காளிவெங்கட், ஜார்ஜ் என்று பெரிய நட்சத்திரப்பட்டாளமே , நடித்திருக்கிறது அவரவர் தங்கள் கதாபாத்திரங்களை சிறப்பாக நடித்து படத்தின் வெற்றிக்கு உதவி இருக்கிறார்கள்.
குறிப்பாக கல்கியின் கதாபாத்திரம் நிறைய சேட்டைகளை செய்து ரசிகர்களை மகிழ்விக்கிறது.
ஹிந்து விரோத திராவிட மாடல் அரசுகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை, கொரோனா காலகட்டங்களில் பூசாரிகளின் மீது கை வைத்தது, சமூக வலைத்தளங்களின் மூலம் காண முடிந்தது. அதைப்போல ஒரு காட்சி இந்த படத்திலும் இடம்பெறுகிறது சரி இது நடப்பது தானே என்று கடந்து போய்விடலாம். ஆனால், காந்தாரா படத்தில் வருவது போல சாமி ஆடி ஓ ஓ என்று கத்தும் கல்கியின் வாயில் காக்கா எச்சம் போடுவது போன்ற காட்சி, முழுக்க முழுக்க படைப்பாளி பொன் ராமின் கட்டுப்பாட்டில் வருவது, அந்தக் காட்சி அமைப்பை தவிர்த்திருக்க வேண்டும், வேறு எப்படியாவது யோசித்து இருக்க வேண்டும். அதைப்போல, லு சேர்த்துக்கொண்டால் அது தெலுங்கு என்பதற்காக பூவுடன் லுவை சேர்க்க முயல்வது, மிகவும் மலிவான ஒன்று.
குறைந்தபட்சம், தமிழகத்தின் குறிப்பிடத்தக்க அரசியல் முகங்களாக அறியப்படும் சரத்குமார் மற்றும் சண்முகம் பாண்டியன் சம்பந்தப்பட்ட படங்களில் வைத்திருக்கக் கூடாது.
இப்படி ஒரு சில குறைகளை தவிர்த்து பார்த்தால், கொம்புச்சீவி, அழகான வாழ்வியல்களைச் சொல்லும் படங்களின் வரிசையில் சிறப்பான இடம் பிடிக்கும்.