a K. Vijay Anandh review
தலைவர் தம்பி, ஜீவா தலைமையில் ஒரு இறுதி ஊர்வலம், ஒரு கல்யாணம் இரண்டில் எது சிறப்பாக நடக்கிறது..? அல்லது இரண்டுமே சிறப்பாக நடக்கிறதா..? என்கிற எதிர்பார்ப்புடன் ரசிகர்களை அமர வைத்துவிட்டு, எதிர்பாரா கிளைமாக்ஸை கொடுத்து ஆச்சிரியப்பட வைத்திருக்கிறார் இயக்குநர் நிதிஷ் சகாதேவ்.
ஒரு நாளில் நடக்கும் கதையை, சின்ன சின்ன சுவராஸ்யங்களோடு விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார்கள். படம் முழுவதும் 100 பேருக்கும் மேல் அனைத்து காட்சிகளிலும் இடம்பெறுவது அவர்களைச் சரியாக பயன்படுத்துவது என்பது மிகவும் சவாலான விஷயம். அதனை இயக்குநர் சிறப்பாக கையாண்டிருக்கிறார் என்பதுடன், அனைத்து நடிகர்களும் அர்ப்பணிப்புடன் ஒத்துழைத்திருக்கிறார்கள்.
படம் முழுவதும் வேட்டி கட்டியவராக தமிழ்ப்பட நாயகர்களை பார்ப்பது அரிது, மலையாள இயக்குநரால் தானோ என்னவோ இப்படத்தில் அது சாத்தியமாகியிருக்கிறது. ஜீவா, அழகு அருமை!
மனிதம் செத்துப்போனால் இப்படித்தான், குறிப்பாக பக்கத்துவீட்டில் ஒரு சுப நிகழ்ச்சி நடந்துவிடக்கூடாது என்பதற்காகவே செயற்கையாக தனது வீட்டில் ஒரு இழவு விழவைக்கும் கதாபாத்திரத்தில் தம்பி ராமையா, வழக்கம் போல சிறப்பாக நடித்திருக்கிறார். சாமி வந்து ஆடும் ஒரு நீண்ட காட்சியை ஒரே டேக்கில் ஓகே செய்திருக்கிறார். அத்தனை நடிகர்களையும் வைத்துக்கொண்டு அந்தக்காட்சியை நேர்த்தியாக படம் பிடித்த ஒளிப்பதிவாளர் பப்லு அஜுவுக்கு பாராட்டுக்கள்.
இன்னொரு பக்கம் இளவரசு, மக கல்யாணம் நடக்கலன்னா தன் வீட்டிலும் ஒரு இழவு விழும் என்று அவர் ஒரு பக்கம்.
ஜெய்வந்த், அந்தக்கிராமத்து முரட்டு இளைஞனாக மிகவும் இயல்பாக தனது சகாக்களுடன் நடித்திருக்கிறார்.
மணப்பெண் பிராத்தனா நாதன் மிகவும் இயல்பாக நடித்திருக்கிறார் என்றால் அவரைத் திருமணம் செய்யப்போகும் மணமகனாக நடித்திருப்பவர் அவரது தம்பியுடன் சேர்ந்துகொண்டு பேசும் மார்த்தாண்டம் தமிழ் ரசிகர்களுக்கு புதிய விருந்து.
தவிடு என்கிற கதாபாத்திரத்தில் ஜென்சன் திவாகர், வழக்கமான நகைச்சுவையுடன் வில்லத்தனங்களிலும் அசத்தியிருக்கிறார்.
கல்யாண வீட்டுக்கார இளவரசுவுக்கு , இழவு வீட்டுக்கார தம்பி ராமையா மேல வரும் கோபத்தைப்போலவே, ரசிகர்களுக்கும் தயாரிப்பாளர் கண்ணன் ரவி மீது கோபம் வரலாம், ஒரு நல்ல படத்தை பண்டிகை காலத்தில் வெளியிட்டிருக்கின்றீர்களே என்று!
இன்னொரு சாதாரண நாளில், தலைவர் தம்பி தலைமையில், கூட்டத்தை மறுபடியும் கூட்டலாம் ! அதாவது ரீ ரிலீஸ்!