a K Vijay Anandh review
விக்னேஷ் கார்த்திக் , தனக்கு கைகொடுத்த ஆந்தாலஜி பார்முலாவை கச்சிதமாகப் பிடித்துக்கொண்டு களமாடியிருக்கும் படம் ஹாட் ஸ்பாட் 2 மச். நெசமாவே, இது டூ மச் தான், பொழுதுபோக்கில்!
இந்த முறை, தயாரிப்பாளரிடம் கதை சொல்ல, ஒரு பெண்ணை அனுப்பியிருப்பதே நல்ல சிந்தனை. அந்த சிந்தனை எதற்காக என்று தெரியவரும் போது, அட என்னப்பா இது என்று கொஞ்சம் சலிப்புத்தட்டினாலும், குழம்பு ருசியாகவே இருக்கிறது.
பிரியா பவானி சங்கர், தழைய தழைய சேலைகட்டிக்கொண்டு கதை சொல்லும் போதை விட, நைட்டி போட்டுக்கொண்டு , டேபிளில் காலைப்போட்டுக்கொண்டு கதை சொல்லும் போது செம்ம அழகு!
ஏன்..? எப்படி..? என்பதை படம் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
முதல் கதை, தங்களது ஆஸ்தான சினிமா நாயகர்களுக்கு கட் அவுட் வைத்து பாலாபிஷேகம் செய்யும் போது தங்களுக்குத் தாங்களே பாலூற்றிக்கொள்ளும் ரசிகர்களை திருத்துவது பற்றியது. ரக்ஷனும், ஆதித்யா பாஸ்கரும் மோதிக்கொள்ளும் இடங்கள் அருமை என்றால், உள்ளே புகுந்து ஆட்டையைக்கலைக்கும் அல்லது கலகலப்பாக்கும் அல்லது கண்கலங்க வைக்கும் எம் எஸ் பாஸ்கர் அற்புதம். எந்த நடிகரும் தங்களுக்கு கட் அவுட் வைப்பதையோ பாலாபிஷேகம் செய்வதையோ விரும்புவதில்லை என்றாலும், அஜித் மட்டுமே ரசிகர்கள் மன்றங்கள் வேண்டாம் என்று முடிவு எடுத்து வெளிப்படையாக அறிவித்து செயல்படுகிறார். அவரைப்போலவே , இந்த விஷயத்தில் மற்ற நடிகர்களும் இருக்க வேண்டும், இருப்பார்கள், இந்தப்படத்தைப் பார்த்து விட்டு!
இடம், பொருள், ஏவல் தமிழுக்கு மட்டுமே சொந்தமான அழகான வாக்கியம். இதை வைத்துக்கொண்டு, இரண்டாம் பாதியில் தம்பிராமையா மற்றும் சஞ்சனா திவாரியை வைத்துக்கொண்டு, கலாச்சாரச் சீர்கேடுகளை பற்றிய விழிப்புணர்ச்சியை 2கே கிட்ஸ் மட்டுமல்ல 90ஸ் கிட்ஸும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் மிகவும் எதார்த்தமான சொல்லியிருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்.
பவானி ஸ்ரீ மீது அஸ்வின் கொள்ளும் காதலைப்பார்ப்பவர்கள், இதுக்கு எதுக்குடா டைம் மிஷினு எங்க பெருசு, சமகாலத்துகலேயே சாத்தியப்படுத்துடுச்சுடா என்று கருப்புச்சட்டையின் காலரைத் தூக்கிவிட்டுக்கொள்வார்கள், முடிந்தால் சிலையின் தாடியைச் செல்லமாக வருடிக்கொடுப்பார்கள், படம் பார்த்துவிட்டு வெளியே வரும் போது.
மற்றபடி, அஸ்வின் மற்றும் பவானி ஸ்ரீ அருமையான நடிப்பு.
முந்தைய பாதிப்பை போலவே , இதிலும் அமர்ந்து கொண்டே அடடாகாசப்படுத்தியிருக்கிறார் பாலுமணிமார்பன் , சில இடங்களில் வேற்று மார்புடனும். அடுத்த பதிப்பில் இன்னும் சில நடிகர்களை அறிமுகப்படுத்துகிறாரோ இல்லையோ Wife Bestie எனும் அரிய அற்புத உறவை அனைவருக்கும் அறிமுகப்படுத்துவார்.
அஸ்வினின் நண்பர்களாக வரும் அமர் மற்றும் ராபின் என்று இருவருமே அடடாகாசப்படுத்தியிருக்கிறார்கள்.
முதலிலேயே சொன்னது போல , ஹாட் ஸ்பாட் 2 மச். நெசமாவே, இது டூ மச் தான், பொழுதுபோக்கில்!