ஆல் பாஸ்

Rating 4/5

18

a K Vijay Anandh review

செலவு செய்யப்படாத பணம், வெறும் காகிதமே! செலவே செய்யமுடியாத பணம் காகிதம் கூட இல்லை, வெறும் சுமையே .

காகிதங்களை கூட எடைக்கு போட்டு பணமாக்கவிடலாம், ஆனால், செலவு செய்யவே முடியாத பணத்தை வைத்துக்கொண்டு எதுவும் செய்ய முடியாது.

அப்படி ஒரு அழையா விருந்தாளியாக ஒரு நடுத்தரவர்க்க கூட்டுக்குடும்பதிற்குள் வரும் அஞ்சு கோடி ரூபாய், அதன் மரியாதையை இழந்து தனது இடத்திற்கே திரும்பிச்செல்வது தான் ஆல் பாஸ்.

ஜெயப்பிரகாஷ், இதுவரை எத்தனையோ பிரமாண்டமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். ஆனால்,  இதில் ஏற்று நடித்திருக்கும் கதாபாத்திரமான அழகர் அப்பா  பாத்திரம், அவர் வாழ் நாள் முழுவதும் பேசப்படும் அளவிற்கான சிறப்பான பாத்திரம்.

அவரது மனைவியாக வரும் செந்தி குமாரியை பற்றி கேட்கவே வேண்டாம், வழக்கம் போல அட்டகாசப்படுத்தியிருக்கிறார்.

சுப்ரமணிய சிவா, வெள்ளை வேட்டியும் வெள்ளை சட்டையுமாக வில்லனாக மிரட்டிக் கொண்டிருந்தவரை  அவுட்டர் என்று அற்புதமான கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து அழகு பார்த்திருக்கிறார் இயக்குநர்.   ஆங்காங்கே பெயிண்ட் துளிகள் ஒட்டிக்கொண்ட பனியன் பேண்ட் போட்டுக்கொண்டு மனிதர் வாழ்ந்திருக்கிறார்.

அவரது மனைவியாக வரும் வினோதினி, சரி சரி என்று தலையாட்டிக்கொண்டே  வருபவர் ஒரு கட்டத்தில் அனைவரையும் தலைதெறிக்க ஓட விடுகிறார்.

பிரசன்ன பாலசந்திரன் – மோகனா ஆர் இணையும் யதார்த்தமாக நடித்திருக்கிறார்கள்.

அடுத்த தலைமுறை, மூன்று சகோதரர்களாக வரும் கோகுல்,சஞ்சய், நிகில் ஆகியோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். அவர்களது நியாயமான ஆசை அல்லது ஆசை அந்த குடும்பங்களின் துன்பத்திற்கு ஆளாவது தான் திரைக்கதை.

மூன்று குடும்பத்திற்கும் ஒரே மகாலட்சுமியாக ஜனனி,  அவர் இல்லையென்றால் ஒரு முழுமை கிடைத்திருக்காது  என்கிற அளவிற்கு அழகும் யதார்த்தமுமாக அற்புதமாக நடித்திருக்கிறார்.

என்னடா 10-15 நிமிஷம் கூட வரல, துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ் கதாநாயகனா என்றால், ஆம், சீனுக்கு சீன் வரவேண்டியது இல்லை, ஒரே சீனில் வந்தாலும், ஒரு ஆட்டோ கூட சொந்தமாக வாங்க இயலாத நிலையிலும்,  ஒன்றைரைகோடி  இருக்கிறது, உன் இஷ்டப்படி பிசினஸ் செய்யலாம் என்று காதலி கூற, பணத்திற்காக அழகர் அப்பாவையும்  முறைத்து கொண்டீர்கள், உங்களது அழகான கூட்டு குடும்பத்திற்காக தான் உன்னை காதலித்தேன் பணத்திற்காக அல்ல என்று  நேர்மையுடன் சிலிர்த்து  நிற்கின்றானே அவனே கதாநாயகன்!  இவருக்காகவே இனி கோலிவுட்டில் முழுநீள திரைக்கதைகள்  தயாராகும் என்றால் அது மிகையல்ல.

ஜெயப்பிரகாஷ் சமைக்கும் பிரியாணியை குடும்பமாக அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் காட்சி, படம் பார்ப்பவர்களுக்கு பசியை துண்டும் ரகம்.

இன்னொரு பக்கம், கவுன்சிலராக சத்யாவும், MLA ஆக சரத் லோகித்ஷவா உம் பட்டையை கிளப்பியிருக்கிறார்கள். முன்னவர் சிரிக்க வைத்திருக்கிறார், பின்னவர் பயமுறுத்தி இருக்கிறார்.

ஆங்காங்கே  தனியாக இல்லாமல் காட்சிகளாகவே நகைச்சுவை இழையோடியிருக்கிறது, மைதீனின் அற்புதமான திரைக்கதையில்.

தொழில்நுட்ப ரீதியாக ஜேம்ஸ் வசந்தனின் இசை, மற்றும் எஸ் பாஸ்கரின் எடிட்டிங் அருமை.

தில்ராஜின் ஒளிப்பதிவு குறிப்பாக  பெரும்பாலும் நாலு சுவருக்குள் நடக்கும் கதையை அவ்வப்போது சத்யா நகரை கழுகுப்பார்வையால் காட்டி விறுவிறுப்பை கூட்டியிருக்கிறது.

பத்துக்கு பத்து ஹாலில் குடும்பத்தினர் மொத்தம் 10 பேர் அதாவது 10 சதுர அடிக்கு ஒருவர் என்று அமரவே போதுமான இடம் இருக்காது என்கிற நிலையில் அதற்குள் கேமராவையும் இன்னபிற  உபகரணங்களையும் வைத்து கொண்டு  காட்சிகளை கம்போஸ்  செய்திருக்கும் விதம் அருமை.

இயக்குனர் மைதீன், புதிய படைப்பாளிகளுக்கு  ஒரு reference  படமாக இருக்கும் அளவிற்கு இந்தப்படத்தை இயக்கியிருக்கிறார்.

கதை, திரைக்கதை, இயக்கம் என்று மிகவும் கச்சிதமாக உழைத்திருக்கிறார்.

ஆல் பாஸ், எளிமையான அதே நேரம் மிகவும் வலிமையான கருத்தை சொல்லும் படம்!