வங்காள விரிகுடா

mysixer rating 2.5/5

49

தூத்துக்குடியில் மக்கள் சொல்வாக்கு மிக்க தொழிலதிபராக நாயகன் குகன் சக்கரவர்த்தி இருக்கிறார். இந்நிலையில் குகன் சக்கரவர்த்தி நண்பர் வாசு விக்ரமின் பணிரெண்டாம் வகுப்பு படிக்கும் மகளை ரவுடிகளிடம் இருந்து காப்பாற்றுகிறார். இதனால் மாணவிக்கு குகன் சக்ரவர்த்தி மீது காதல் ஏற்பட இருவருக்கும் திருமணம் நடக்கிறது.

குகன் சக்கரவர்த்திக்கு திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை மகிழ்ச்சியாக செல்லாததால் மனம் உடைந்து கடற்கரையில் தனிமையில் இருக்கும் போது, அவரது முன்னாள் காதலி தற்கொலைக்கு முயற்சிப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து அவரை காப்பாற்றுகிறார்.

தன்னைப் போலயே தனது காதலியும் வாழ்வில் தோல்வியடைந்தது அறிந்து மிகவும் வருந்துகிறார். இதே சமயம் தான் காதலித்த பெண்ணுக்கு அவரது கணவனால் தொல்லை ஏற்பட குகன் சக்ரவர்த்தி தன் ஆட்களை வைத்து அவரை கொலை செய்து தன் காதலிக்கு பாதுகாப்பு கொடுக்கிறார்.

இதனையடுத்து குகன் சக்கரவர்த்தியால் கொலை செய்யப்பட்டவர், அவரது காதலியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிரட்டுகிறார். இறந்தவர் எப்படி பேச முடியும் என்பதை அறிந்து கொள்ள நாயகன் குகன் சக்கரவர்த்தி களத்தில் இறங்குகிறார்.

இறுதியில் நாயகன் குகன் சக்கரவர்த்தி மிரட்டல் விடும் மர்ம நபர் யார்? என்பதை கண்டுபிடித்தாரா? இல்லையா? ’வங்காள விரிகுடா’ படத்தின் மீதிக்கதை.

நாயகனாக நடித்து படத்தை இயக்கவும் செய்திருக்கும் குகன் சக்கரவர்த்தி, இந்த முழுப்படத்தையும் தனி ஆளாக சுமந்து நிற்கிறார். தப்பு செய்ப்வர்களை தட்டி கேற்பது, மனைவி மீதான காதல், காதலி மீது காட்டும் அக்கறை, ஏழை மக்களுக்கு ஊட்டி செய்யும் உதவி என அனைத்திலும் தன் திறமையை நிரூபித்துகாட்டியிருக்கிறார்.

நாயகனின் மனைவியாக டிப்லேனாவும் காதலியாக அலினா ஷேக்கும் நடித்துள்ளனர். இருவரும் காதல் மற்றும் பாடல்கள் காட்சிகளுக்கு மட்டும் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

பொன்னம்பலம், வையாபுரி, வாசு விக்ரம் ஆகியோரது அனுபவ நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. மற்ற வேடங்ககளில் நடித்த அனைவருக்கும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், ஒளிப்பதிவு, இசை, உள்ளிட்ட 21 துறைகளில் பணியாற்றி தனி ஒரு நபராக இப்படத்தைத் தனது தோளில் சுமந்து இருக்கிறார் குகன் சக்கரவர்த்தி தனது முதல் படத்திலேயே இவ்வளவு பெரிய பொறுப்புகளை ஏற்றுக்கொண்டது பாராட்டுக்குரியது.

ஒரு சாதாரண காதல் கதையாக தொடங்கும் படம் திடீர் என பேய் படமாக மாறி பின் அரசியல் படமாக மாறுவது பார்ப்பதற்கு விறுவிறுப்பாக இருந்தாலும் ரசிகர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தும்.

’வங்காள விரிகுடா’ –   முயற்சி!