With Love

mysixer rating 4.5/5

182

a K Vijay Anandh review

பிள்ளையார் சுழி போட்டு தொடங்கும் எல்லாமே வெற்றிபெறும் என்பது பொதுவான ஒன்று. பள்ளிசீருடை போட்டு நடிக்க ஆரம்பிக்கும் நாயகர்கள் திரைத்துறையில் பெரிய ரவுண்டு வருவார்கள் என்பது திரைப்படத்துறைக்கே பொருத்தமான ஒன்று. அதாவது, அவர்கள் 20-30 வயதிற்குட்பட்டவர்களாக இருந்தாலும்,  10-12 படிக்கும் மாணவனாக அவர்கள் பள்ளிசீருடையில் பொருந்திப்போகும் உடல்மொழியை பேணுகிறார்கள் என்றால், நிச்சயம் அவர்களால் வெற்றிகரமான நாயகனாக வலம் வரமுடியும்.

அபிஷன் ஜீவிந்த், ஏற்கனவே இயக்குனராக 100 கோடி கிளப்பில் இணைந்துவிட்டவர், அட்டகாசமான ஒரு கதைக்களத்தில் இன்னொருவரின் இயக்கத்தில் நாயகனாக அறிமுகமாகியிருக்கிறார்.  அவருக்கு இருக்கும் நல்ல நேரத்தை பயன்படுத்திக்கொள்வோம் என்று அவசரவசரமாக ஆரம்பிக்கப்பட்ட படம் போல இந்தப்படம் இல்லை. இவரை விட்டால், இதற்கு பொருத்தமானவர்கள் யாருமில்லை என்கிற அளவிற்கு சிறப்பாக நடித்திருக்கிறார்.

சரி பள்ளிக்கூடக் காதலை மையப்படுத்தி கதை எழுதிவிட்டோம் என்பதற்காக, முழுப்படமும் அதிலேயே பயணிப்பதாக வைத்து, வழக்கமான ஒரு அறிவுரையுடன் முடித்திருந்தால், இது இன்னொரு சராசரியான படமாகிவிடும் என்பதை மிகச்சரியாக புரிந்துகொண்ட  இயக்குநர் மதனும்,  காதலில் தோற்றாலும் வாழ்க்கையில் ஜெயித்த – என்கிற வரியை மையமாக வைத்து, பள்ளிப்படிப்பு, கல்லூரி படிப்பு முடித்துவிட்டு தன் சொந்தக்காலில் நிற்கும் நாயகன் – நாயகி அவர்களது  தோற்றுப்போன அல்லது வெற்றியடையாத பள்ளிப்பருவ காதல் என்பதாக திரைக்கதை அமைத்து, புதிய விருந்து படைத்திருக்கிறார்.

அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் , இருவரும் திருமண ஆப் மூலம் ஒருவரையொருவர் அறிந்துகொண்டு,  இருவீட்டார் சம்மதத்துடன் முதன் முதலாக சந்தித்துக்கொள்கிறார்கள். மிகவும் இயல்பாக பேச ஆரம்பிக்கும் அனஸ்வரா மூலம், பாஸ்ட் லைஃப் அல்லது பாஸ்ட் லவ் பற்றிய பேச்சுடன் கதை பிளாஷ்பேக்காக பயணிக்கிறது.

முதலிலேயே குறிப்பிட்டது போல,  அந்த முதல் காதல் இருவராலும் புரோபோஸ் செய்யப்பட்ட தோற்றுப்போயிருந்தால் கூட கதையில் சுவராஸ்யம் இருந்திருக்காது. இருவருக்குமே தங்கள் காதலை சம்பந்தப்பட்டவர்களிடம் புரப்போஸ் செய்ய இயலாத நிலையில், இன்னும்  முற்றுப்புள்ளி வைக்கப்படாமல் கமாவுடன்  தொடரும் அந்த காதலுக்கு ஒரு விடை காணும் பொருட்டு இருவரும் பயணிக்க அதனைத்தொடர்ந்து இரண்டாவது பாதி விறுவிறுப்பாகிவிடுகிறது.

அப்புறம் என்ன ஆனது என்பதை, கண்டிப்பாக திரையரங்குகளுக்கு சென்று பார்த்தால் தான் சுவராஸ்யம் இருக்கும்.

அபிஷன் ஜீவிந்த், போனில் அக்காவுடன் பேசும் போது ஒரு உடல்மொழி,  மாமா சுதர்ஷன் லைனில் வரும் போது சட்டென மாறும் ஒரு உடல்மொழி என்று நம்பகத்தன்மையான ஒரு நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். மீசை மழித்துக்கொண்டு பள்ளிச்சீருடையில் வரும் காட்சிகளிலும் துறுதுறு மாணவனாக ஆச்சிரியப்பட வைக்கிறார். கடைசி வரைக்கும் , தன்னைவிட இரண்டு வயது சிறியவர் என்று தெரிந்தும் அனஸ்வராவை வாங்க போங்க என்று அழைப்பதாகட்டும், அதே பயத்துடன் தனது பள்ளிப்பருவ காதலியை சந்திப்பதாகட்டும் சிறப்பாக நடித்திருக்கிறார்.

அன்ஸ்வராராஜன், அப்படியே உல்டாவாக சேட்டை செய்யும் மாணவி, 3 பேர் கொண்ட  ஒரு கேங்  என்று நடிப்பில் படு யதார்த்தம். ரொம்பவும் சென்சிட்டிவ் மற்றும் ஸ்ட்ரைட் பார்வார்டாக அபிஷனை மட்டுமல்ல ரசிகர்களையே கூட மிரட்டிவிடுகிறார்!

அபிஷனின் முதல் காதலாக வரும் காவ்யா, இவரது கதாபாத்திரத்தைப்பற்றி குறிப்பிட்ட ,  இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அனைவருமே பாராட்டு மழை பொழிந்தனர். பொதுவாக, பத்திரிகையாளர் சந்திப்பில் இப்படி கேட்கப்படும் புகழுரைகளுடன் படம் 100% ஒத்துப்போவதுமில்லை. ஆனால், வித் லவ் படத்தில் காவ்யா ஏற்று நடித்திருக்கும் அனிஷா கதாபாத்திரம் – மற்றும் இரண்டாம் பாதியில் இவர்களிருவருக்கிடையே வரும் காட்சி 200% ஒத்துப்போயிருக்கிறது,  புகழ்ந்து பேசியவர்களின் கருத்துக்களுடன்.

நண்பனின் காதலியை தட்டிச்செல்லும் ஹரிஷ் குமார், அனஸ்வரா ராஜனை மயக்கிய பாலாஜியாக நடித்த சச்சின் நாச்சியப்பன், அபிஷனின் அக்காவாக நடித்த ஆர் ஜே ஆனந்தி, அப்பாவாக நடித்த தேனி முருகன் என்று அனைவரும் இயல்பாக நடித்திருக்கிறார்கள்.

பள்ளிக்கூடம் என்றாலே காதல் மட்டுமா..? மாணவனுக்கும் வாத்தியாருக்குமான உறவும் இருக்கவேண்டுமல்லவா..? சரவணன், கண்டிப்பான அதே நேரம் நேர்மையான ஆசியராக வந்து அபிஷன் ஜீவிந்திடம் அடியும் வாங்குகிறார். ஏன் ? எதற்கு ? என்பதை படம் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

தியாகராஜ பாகவதர் காலத்துப்படங்களில் காட்சிக்கு காட்சி பாடல்கள் இடம்பெற்றிருந்தாலும், அவை கதையோடு இணையாமல் துண்டாக இருக்கும், இன்றய இளம் இசையமைப்பாளர்கள், பத்து பதினைந்து காட்சிகளில் சொல்லவேண்டியதை  ஐந்து நிமிட பாடல்களில் சொல்லிவிடுகிறார்கள், தங்களது இசை மற்றும் பாடல் வரிகள் மூலம். அவர்களின் உதவியுடன், நான்கு ஐந்து மணி நேரம் எடுக்க வேண்டிய் படங்களை 2 – இரண்டரை மணி நேரப்படமாக இயக்குனர்களால் காட்ட முடிகிறது. அந்தவகையில், ஷான் ரோல்டனின் அற்புதமான இசை மோகன் ராஜன், உமாதேவி ஆகியோரின் கதை சொல்லும் பாடல் வரிகள் என்று வித் லவ்வின் இசையையும் ரசிக்க முடிகிறது.

ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவையும் பாரட்டியே ஆகவேண்டும். பள்ளிகாட்சிகளையும் சமகால காட்சிகளையும் ஏதோ ஒரு மேஜிக் செய்து வேறுபடுத்துகிறார். எடிட்டர் சுரேஷும் அட்டகாசமாக காட்சிகளை கோர்த்திருக்கிறார்.

நடிப்பு, ஒளிப்பதிவு, எடிட்டிங், இயக்கம் ஏன் இசைக்கு கூட இன்ஸ்ட்டியூட்ஸ் வந்துவிட்டது. தயாரிப்பாளர் படிப்பு ஒரு என்று ஒரு கோர்ஸ் ஆரம்பிப்பதாக இருந்தால், அதற்கு  எம் ஆர் பி எண்டெர்டெயின்மெண்ட் மகேஷ்ராஜ் பசிலியனை துறைத்தலைவராகப் போடலாம், இரண்டாவது ஹாட்ரிக்கின் முதல்வெற்ரிப்படமாக வித் லவ்வை தயாரித்திருக்கிறார். அவருடன் தனது சியோன் ஃபில்மஸுடன் இவருடன் இணைந்து வித் லவ்வை தயாரித்திருப்பதன் மூலம் செளந்தர்யா ரஜினிகாந்த், இந்தப்பாராவில் குறிப்பிடப்பட்டிருக்கும் கருத்திருக்கு வலுசேர்த்திருக்கிறார்.

100கோடி கிளப் இயக்குநர் – நாயகன் என்கிற வரிசையில், பிரதீப் ரங்கநாதனுக்கு ஒரு போட்டியாளராக அபிஷன் ஜீவிந்த் களமிறங்கியிருக்கிறார்.

வித் லவ்வுடன் இவர்களுக்கு இடையே ஒரு ஆரோக்கியமான போட்டி ஏற்பட்டால்,  தமிழ் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்!

வித் லவ், காதலர் தின கொண்டாட்டம் ஆரம்பம்!