Dhurandhar & Dhuranthar The Revenge

Rating 5/5

25

a K Vijay Anandh

துரந்தர் முதல் பாகம்,  3 மணி 34 நிமிடம்., இரண்டாவது பாகம் 3 மணி 49  நிமிடம்.  மொத்தம்,  7 மணி 23 நிமிடம்.  ஒவ்வொரு வாரமும் சாதாரணமாக  வெளியாகும் இரண்டரை மணி நேர படங்களாக மூன்று படங்கள் சேர்ந்தது, துரந்தர் முதல் மற்றும் இரண்டாவது பாகங்கள்.

இடைவேளை முடிந்து இரண்டாவது பாகம் ஆரம்பித்த பிறகு, கிளைமாக்சுக்கு 15  முதல் 30 நிமிடங்கள் இருக்கும் நிலையில், படத்தில் ஒரு சஸ்பென்ஸ் வெளியாகும், அதனைத்தொடர்ந்து படம் விறுவிறுப்பாக பயணித்து நிறைவுபெறும்.

இரண்டு பாகங்களாக வெளிவந்திருக்கும் துரந்தர் படத்தை, நாம் ஒரே படமாக எடுத்துக்கொண்டு, ஒரு விரிவான விமர்சனத்தைப் பார்ப்போம். முன்பு குறிப்பிட்டது போலத்தான், மிகச்சரியாக இரண்டாவது பாகத்தின் இடைவேளையில், இந்திய ஏஜெண்ட் பாகிஸ்தானில் இருக்கிறான் என்பதை , பாகிஸ்தான் காவல்துறை, இராணுவம் மோப்பம் பிடிக்க ஆரம்பிக்கிறது. இந்திய ஏஜெண்ட்டின்  பாகிஸ்தான் மனைவிக்கும் தெரிந்து விடுகிறது.

அந்த நொடியிலிருந்து, திட்டமிட்டு வைத்திருந்த பல வேலைகளை அதாவது பழிவாங்குதல்களை வேகப்படுத்தி முக்கிய தலைகளை போட்டுத்தள்ளுவது தான் 7 மணி 23 நிமிட துரந்தர் படத்தின் கிளைமாக்ஸ்.

பெரும்பாலான காட்சிகள், லீனியர் முறையிலும், முக்கியமான திருப்பங்கள் நான் லீனியர் முறையிலும் சொல்லப்பட்டிருக்கிறது.

உதாரணமாக, பதன்கோட்டில் வசிக்கும் ஜஸ்கிரட் சிங் ராங்கி, ஏன்..? எப்படி..? எதற்காக ? ஹம்சா அலி மசாரி ஆகிறார் என்பதை இரண்டாவது பாகத்தில் முதல் காட்சியாக வைத்திருக்கிறார்கள்.  இராணுவ வீரராக ஆகவேண்டும் என்று பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கும் நாயகனின் குடும்பம், அவர்களின் நிலத்தை ஆட்டையைப்போட நினைக்கும் லோக்கல் எம் எல் ஏ வாவால் சிதைகிறது. அப்பாவை அடித்து மரத்தில் தொங்க விடுகிறார்கள், இரண்டு சகோதரிகளை கடத்திச்சென்று கூட்டு பலாத்காரம் செய்கிறார்கள். அதில் ஒரு சகோதரி இறந்துவிட, இன்னொரு சகோதரியைக் காப்பாற்றும் போராட்டத்தில் எம் எல் ஏ வீட்டில் இருக்கும் 12 ஆண்களையும் போட்டுத்தள்ளுகிறார் நாயகன்.  தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், நண்பனிடம் தனது குடும்பத்தை ஒப்படைத்துவிட்டு ஜெயிலுக்கு போகிறான்.  அந்த எம் எல் ஏ ஆட்களை வேட்டையாடும் படலத்திலேயே நண்பன் உதவியுடன் உ.பி யை சேர்ந்த போதை மற்றும் ஆயுதக்கடத்தில் மாஃபியா  ஆடிஃப் அகமது வை பற்றிய அறிமுகம் கிடைக்கிறது. இது, பல வருடங்கள் கழித்து நாயகனின் வேட்டைக்குள் எப்படி வருகிறது என்பது சுவராஸ்யமான திரைக்கதை.

தூக்குல தொங்கப்போற உயிரை நாட்டுக்காக கொடு என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் அவரது உதவியாளர் கேட்க, அதன் பிறகு தீவிரப்பயிற்சிகள், குடும்பத்திற்கு உதவித்தொகை செல்வது  உறுதிப்படுத்தப்படுகிறது.

பாகிஸ்தான், கராச்சியில் அமைந்துள்ள லயாரி, லயாரியை யார் கைக்குள் வைத்திருக்கிறார்களோ அவர்களே கராச்சியை ஜெயிப்பார்கள், கராச்சியை ஜெயிப்பவர்கள் பாகிஸ்தானை ஆளுவார்கள்.

முகமது ஆலம், என்கிற பெயரில் ஏற்கனவே பாகிஸ்தானுக்கு சென்று லயாரி பகுதியில் ஜூஸ் கடை வைத்திருக்கும், முகமது ஆலம் உதவியுடன் பலூச் சகோதரர்கள் ரஹ்மான் டெகட் மற்ரும் உசேர் பலூச் கூட்டணிக்குள் நுழைகிறான் நாயகன்.

ரஹ்மான் டெகட் ஐ வைத்து லயாரியில் உள்ள பிற தீவிரவாத கேங்ஸ்டர்களை முற்றிலும் ஒழிக்கிறான் நாயகன். ரஹ்மான் மூலமாக, அரசியல்வாதி ஜமீல், அவரது மகள் யலினா, எஸ் பி அஸ்லம், மேஜர் இக்பால், இந்திய கரன்சிகளை அச்சடிக்கும் ஜாவேத் கனானி ஆகியோரது அறிமுகம் கிடைக்கிறது.

அரசியல்வாதி ஜமீலின் மகளை திருமணம் செய்துகொண்ட பிறகு,  அவரது பதவி ஆசையைப் புரிந்துகொண்டு சில ஆலோசனைகள் வழங்க, அவருக்கும் அது பிடித்துப்போக, நாயகனின் திட்டங்களுக்கு ஜமீலும் உதவுகிறார்.

எஸ் பி அஸ்லம் கைது செய்து கொண்டு போன ரஹ்மான் டெகட்டை , மிகவும் தீவிரமான நடவடிக்கைகள் எடுத்து மீட்டுக்கொண்டு வந்து, ரஹ்மான் டெகட்டின் ஆட்களுக்கு  எப்பொழுதும்  அசைக்க முடியாத விசுவாசி ஆகிவிடுகிறான் நாயகன்.

அதே காலகட்டத்தில், ஜாவேத் கனானி யின் இந்திய கரன்சி அச்சடிக்கும் ஆலைக்குச் செல்லும் வாய்ப்பு கிடைக்க, அந்த தகவலை இந்திய ரா தலைமையகத்திற்கு அனுப்புகிறான் நாயகன். உடனடியாக நடவடிக்கை எடுக்கலாம் என்று உதவியாளர் கூற, ”இந்த நேரத்தில் நாம் மேலிடத்திற்கு இந்தத்தகவலை தெரியப்படுத்தினால், நம்மை அட்ரஸ் இல்லாமல் செய்துவிடுவார்கள், நம் நாட்டிற்கு நல்ல ஒரு தலைமை வரும் அதுவரை காத்திருப்போம்..”  என்று ஐ பி உயரதிகாரி அஜித்தோவல் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆர் மாதவன் கூறுகிறார்.  கிரையோஜனிக் தொழில் நுட்பத்தை கண்டுபிடித்த விஞ்ஞானி நம்பி நாராயணன் கதி,  ஞாபகம் வருகிறதா..?

இந்திய அமைச்சர் ஒருவர் அவரது மகனுடன் இந்திய கரன்சி அடிக்கும் எந்திரத்தை பாகிஸ்தானுக்கு செல்ல உதவியதும், நமது நாட்டிற்கு நல்ல தலைமை வரும் வரை காத்திருப்போம் என்று சொல்வதும் 2014 க்கும் முன். அதாவது  சோனியா பின்னணியில் இருந்து இயக்கிய மன்மோகன் சிங் ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருந்த காலகட்டம். திறமையான பல அதிகாரிகள் நமது நாட்டை காப்பாற்ற உயிரைக்கொடுத்து பணியாற்றினாலும் அவர்கள் கைகள் கட்டப்பட்டிருந்த காலகட்டம். 2014 க்கு முன், அடுத்து பாஜக ஆட்சிக்கு வரும், நரேந்திர மோடி பிரதமராக வருவார் என்று யாராவது எதிர்பார்த்தோமா..?  நேர்மையாக பணியாற்றும் அரசு அதிகாரிகளுக்குத்தான் தெரியும், மோசமான அரசியல்வாதிகளின் கையில் நாடு இருந்தால் என்ன ஆகும் என்பது. இலவசங்களுக்கும், போலியான வாக்குறுதிகளுக்கும் மயங்கி அல்லது ஏமாந்து தகுதியில்லாதவர்களின் கைகளில் நாட்டைக்கொடுத்தால், நாட்டின் பாதுகாப்பிற்கே உத்திரவாதமில்லாத நிலைக்குக் கொண்டு சென்று விடுவார்கள் என்பதை அறிந்துகொள்ளவேண்டும்.

மேஜர் இக்பாலின் 29/11  மும்பை கொடூர தாக்குதலுக்கு ஆயுதங்கள் கொடுத்து உதவிய ரஹ்மான் டெகட்டை , அவர் மீது எப்பொழுதுமே குறியாக இருக்கும் எஸ்பி அஸ்லம் உதவியுடன் போட்டுத்தள்ளுகிறான் நாயகன்.

இத்தோடு , முதல் பாகம் நிறைவு பெறுகிறது.

முதல் பாகத்தின் முதல் காட்சி, காந்தகரில் நிறுத்தி வைக்கப்பட்ட கடத்தப்பட்ட ஏர் இந்தியா விமானம் , பிணையக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்ட பீதியில் உறைந்த பயணிகள், அவர்களை மீட்க தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தைக்கு சென்று இருக்கும் இந்திய ரா உயரதிகாரி ஆர் மாதவன். இந்தக்காட்சியில்,  பயத்தில் இருக்கும் விமானப்பயணிகளை ஆறுதல் படுத்திவிட்டு, உங்களை மீட்பது இந்திய அரசின் பொறுப்பு என்கிற உத்திரவாதத்தையும் நம்பிக்கையையும் அளித்துவிட்டு, பாரத் மாதா கீ என்று சொல்ல, துப்பாக்கி முனையில் அவர்களை ஜே சொல்லவிடாமல் தடுக்கிறான் ஒரு தீவிரவாதி. இந்தக்காட்சியை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம், அப்பொழுது தான் இரண்டாவது பாகத்தில், இதன் நிறைவுக்காட்சி வரும் போது, மயிர்க்க்கூச்செரிய மகிழ்ச்சி பொங்கும். உதடுகள் தன்னையறியாமல் ஜே என்று முழங்கும்!

ஆபரேசன் துரந்தர் ஐ உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என்கிற எண்ணம் தோன்றும் இடம்,  பாகிஸ்தான் தீவிரவாதிகளின் இந்திய பாராளுமன்றத்தை தாக்கிய தருணம். அங்கே, காவலுக்கு இருந்த பெண் காவலர், உடம்பில் 10 க்கும் மேற்பட்ட குண்டுகள் பாய்ந்த நிலையிலும், வாக்கி டாக்கியில் தகவல் கொடுத்துக்கொண்டே ஓடிப்போய், தீவிரவாதிகளைப் பற்றி சக காவலர்களுக்கு தகவல் கொடுக்கும் காட்சியும் தத்ரூபம், இது சினிமாவுக்காக எழுதப்பட்ட காட்சி அல்ல, உண்மையில் நடந்த சம்பவம்.

இப்படி முதல் பாகத்தில் நடக்கும் ஒவ்வொரு தீவிரவாதத்தாக்குதல்களுக்கும் பதிலடி கொடுக்கும் விதமாக, சம்பந்தப்பட்டவர்களைத் தேடித்தேடி வேட்டையாடும் விதமாக  துரந்தர் தி ரிவெஞ்ச் என்று இரண்டாம் பாகம் வெளியாகியிருக்கிறது.

ரஹ்மான் டெகட்டின் இறுதிச்சடங்கில் இருந்து படம் ஆரம்பிக்கின்றது. ரஹ்மானைக் கொன்றது யார் என்று மேஜர் இக்பால் கேட்க, ஒரு கதை சொல்கிறார் எஸ் பி அஸ்லம்.

ரஹ்மான் டெகட்டின் தம்பி உசேரை உசுப்பேற்றி, லயாரிக்கு போட்டியாக வந்திருக்கும் அர்ஷத் பப்பு என்கிற பதானை போட்டுத்தள்ள வைக்கிறார் நாயகன். அந்த பிரச்சினை பாகிஸ்தானில் பற்றி எரிய, உசேரை, தப்பி செல்ல வைத்து, துபாயில் வைத்து கைது செய்யவும் ஏற்பாடு செய்கிறார் நாயகன். அந்த கேங்கில் இருக்கும் இன்னொரு இந்திய ஏஜெண்ட் ரிஸ்வான், உசேர் குழு, அதாவது இனி நாயகன் குழுவுடன் இணைந்து பயணிக்கிறார்.

லயாரினின்  முடிசூடா மன்னனாக அமர்கிறார் நாயகன்.

பாகிஸ்தானின் துரோகத்தால் தொடர்ந்து வீழ்த்தப்பட்டுக்கொண்டிருக்கும் பலூச்  இனத்தலைவருடன் தொடர்ந்து நல்ல உறவை பேணுகிறார் நாயகன்.

எல்லைதாண்டிய பயங்கரவாதத்திற்காக ஆயுதங்கள் வாங்க நிதி திரட்டும் பொருட்டு, பாகிஸ்தானிலிருந்து இந்தியாவின் எல்லை மாநிலமான பஞ்சாபிற்கு, போதைப்பொருட்களை கடத்த தாவூத் இப்ராஹிம் தலைமையில் முடிவெடுக்கப்படுகிறது. நன்றாக இருந்த தாவூத் கண்டறியப்பட முடியாத உடல் நலக்குறைவால் நிலைகுலைந்து படுத்த படுக்கையாக கிடக்கிறான். ஆனால், அவனது மாளிகை பாகிஸ்தான் அதிர்பர்களின் மாளிகை போன்று, ஆடம்பரமாக இருக்கிறது. அவன் வீட்டு வாசலில் பாகிஸ்தான் இராணுவம் காவல் காக்கிறது. ஒரே ஒரு காரணம், அவன் இந்தியாவை எல்லாவகையிலும் சீர்குலைத்து,  அழிக்கப்பிறந்தவன் என்று பாகிஸ்தான் நம்புகிறது.

அந்த சந்திப்பில் தான் முதன்முறையாக தாவூத்தை பார்க்கும் நாயகன், அதிர்ச்சியடைகிறான்.

போதைப்பொருட்களை கடத்துவதில் விருப்பமில்லை என்று தாவூத் முன்னிலையே தனது கருத்தை சொல்ல, இல்லை… ஒரு முஸ்லீம் முஸ்லீம் நாட்டிற்குத்தான் விசுவாசமாக இருக்கவேண்டும்… அது பாகிஸ்தான் முஸ்லீமாக இருந்தாலும் சரி இந்திய முஸ்லீமாக இருந்தாலும் சரி…  என்கிறான் தாவூத். அரைமனதாக நாயகன் சம்மதிக்கின்றான், இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள், அதை எப்படி முறியடிக்கலாம் என்கிற சிந்தனையோடே..

தாவூத் இப்ராஹிம் , சுதந்திர இந்தியாவில் மகாராஷ்ட்ர மாநில காவல் துறை அதிகாரிக்கு பிறந்த இந்திய முஸ்லீம் என்பதும், பிற்காலத்தில் மும்பையில் டானாக உயர்ந்து பாலிவுட் மற்றும் இந்திய கிரிக்கெட்டையே கைக்குள் வைத்திருந்தவன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கு நடுவே, 2014 இல் இந்திய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கிறார். 1971 பங்களாதேஷ் அதாவது கிழக்கு பாகிஸ்தானுடனான போரில், இந்தியாவிடம் தோற்ற கையோடு 45 வருடங்களாக  சக்கர நாற்காலியில் , உட்கார்ந்திருக்கும் ஜஹாங்கீர் , இக்பாலின் அப்பா, இக்பாலை திட்டுகிறார். “ எவ்வளவோ சதி செய்தும் நாம் விரும்பிய படி இந்தியாவில் ஆட்சி அமையவில்லையே… எனக்கு ஒரு ஆண் பேர வாரிசை கொடுக்க வக்கில்லாத நீயெல்லாம் ஒரு மேஜர்… 1000 பங்களாதேஷ் பெண்களை கற்பழித்தேன்… அவர்களுக்கு பிறந்தவர்கள் அங்கே அலைந்து கொண்டிருப்பார்கள்… அவர்களில் ஒருவனை இங்கே எனது வாரிசாக கொண்டு வராமல் போய்விட்டேன்..” என்று இக்பாலை இழிவு படுத்துகிறார்.

போதைப்பொருட்களை வாங்கிச்செல்ல இந்தியாவின் பதான்கோட்டிலிருந்து நாயகனின் நண்பனே வருகிறான், நாயகனை கண்டுபிடித்துவிடுகிறான்.  நாயகனின் வீட்டில் நடக்கும் இருவருக்குமான சண்டையில், நண்பன் உயிரிழக்கிறான். பழியை சக இந்திய ஏஜெண்ட் ஆலம் ஏற்றுக்கொள்கிறார். அந்த நொடியில் இருந்து எஸ் பி அஸ்லம் மற்றும் அவருடன் பணி புரியும் ஒமருக்கு சந்தேகம் வருகிறது, நாயகனின் மீது.

இதைக்கவனிக்கும் நாயகி, நாயகனின் பொருட்களை சோதனை செய்து , அவன் ஒரு இந்திய ஏஜெண்ட் தான் என்பதை கண்டுபிடித்துவிடுகிறாள்.  தான் ஏமாற்றப்பட்டது, தன்னை வைத்தே தனது நாட்டிற்கு எதிராக இவன் காரியங்களை சாதிக்கிறானே என்கிற இயலாமையோடு அவனை கொல்லப்பார்க்கிறாள்.

“ நான் உன் நாட்டுக்கு எதிரியல்ல, உன் நாட்டு அப்பாவி மக்களைக் கொல்பவனல்ல… எங்கள் நாட்டு அப்பாவி மக்களைக் கொல்ல எல்லை தாண்டிய பயங்கரவாதிகளை அனுப்புபவர்களை மட்டுமே கொல்கிறேன்… ஏன் பாகிஸ்தானின் ஒரு பகுதியான பலூச் மக்களை கொல்கிறார்களே அவர்களைக் கொல்கிறேன்… எனது லிஸ்டில் ஒரே ஒரு நல்ல பாகிஸ்தானி இருந்தால் சொல், நீ என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்கிறேன்…” என்று பேச நாயகியும் புரிந்துகொண்டு, “ செய்வதை சீக்கிரம் செய்.. உன்னை சந்தேகப்பட ஆரம்பித்து விட்டார்கள்…” என்று கூறுகிறாள்.

நாயகன், துபாய்க்கு வரவழைக்கப்பட்டு, ரா அதிகாரிகள் சந்திக்க, ”இனி உனக்கு முழு சுதந்திரம்… என்னவேணா செய்..” என்று ஊக்கமளிக்கப்படுகிறது.

எஸ் பி அஸ்லம், வாண்டடா வந்து செத்துப்போகிறார்.

இந்தியாவிற்குள் , பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட கரன்சியை 60 ஆயிரம் கோடி வரை அனுப்ப சதி நடக்கிறது. தகவல்,  ரா உயரதிகாரிக்கு அனுப்பப்பட, பிரதமர் மோடி வாயிலாக மிகவும் துணிச்சலான பணமதிப்பழப்பு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஜாவேத் ககானியின் புலம்பலைக் கேட்க, மேஜர் இக்பால் ரெடியில்லை. அவன் , வழக்கம் போல நாயகனுக்கு போன் போடுகிறான். பாகிஸ்தான் தீவிரவாதிகளின் கதறலை பார்த்து மகிழும் நாயகன், ஜாவேத் கனானியை கொல்கிறான்,  போலியாக அச்சிடப்பட்ட இந்திய கரன்சிகளை தீயிட்டு கொளுத்துகிறான்.

அயோத்தி தீர்ப்பு இந்தியாவிற்கு சாதகமாக வருகிறது.

கடுப்பான மேஜர் இக்பால், அவனது தந்தையைக் கொல்கிறான்.

அதன் பிறகு, நாயகனின் வேட்டை வேகமெடுக்கிறது.  இந்தியாவிற்குள் பயங்கரவாதம் செய்த ஒவ்வொருவரும் மர்ம  நபர்களால் வேட்டையாடப்படுகிறார்கள். காந்தகர் விமானக்கடத்தலின் போது பாரத் மாதா கீ ஜே என்று சொல்லவிடாமல் செய்த தீவிரவாதியை  வேட்டையாடும் போது வீடியோ கால் போட்டு பாரத் மாதா கீ ஜே என்று சொல்லவைப்பது எல்லாம் அதகளம்.

மறுபடியும் தாவூத் இப்ராஹிமை சந்திக்க கிடைக்கும் வாய்ப்பை, அவனைக்கொல்வதற்கு பயன்படுத்திக்கொள்ள விழைகிறான். ஆனால், அது நடக்காமல் போய்விடுகிறது.

இறுதியாக 26/11 ஐ விட பயங்கரமான ஒரு தாக்குதலுக்கு,  தாவூத் இப்ராஹிம் ஆலோசனையின் பேரில், மேஜர் இக்பால் தலைமையில், ஒரு மதரஸாவில் வைத்து 50 க்கும் மேற்பட்ட ல இ தொ பயங்கரவாதிகளுக்கு பயிற்சியும் ஆயுதங்களும் வழங்க ஏற்பாடு செய்யப்படுகிறது.

வழக்கம் போல, பலூச் தலைவரின் உதவியுடன், அத்தனை பேருக்கும் ஒரே இடத்தில்  சமாதி கட்டுகிறான் நாயகன். மேஜர் இக்பாலை துடிக்க துடிக்க கொன்று சாய்க்கும் இடத்தில், இது புதிய இந்தியா உன் வீட்டிற்கே வந்து சாத்துவோம் என்று சொல்ல அரங்கம் அதிர்கிறது.

காவல்துறை அதிகாரி ஓமரிடம் சிக்கிக்கொண்ட நாயகனை, பாகிஸ்தான் ஐ எஸ் ஐ தலைவரை மிரட்டி , ஆர் மாதவன் மீட்கிறார், பலிகடாவாக உசேர் பலூச் சிக்கவைக்கப்படுகிறான்.

தாவூத்தை கொல்லமுடியவில்லையே என்று வருந்தும் இடத்தில், ஜமீல் ஒரு அட்டகாசமான டிவிஸ்டை கொடுக்கிறார்.

இந்தியன் என்கிற பெருமிதத்துடன் படம் நிறைவடைகிறது.

நிஜமான கதாபாத்திரங்கள் என்றாலும், பெயர் தான் மாற்றியிருக்கிறாரே தவிர ஆட்களை மாற்றவில்லையோ எனும் அளவிற்கு மிகப்பொருத்தமான நடிகர்களை தேர்வு செய்து நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் ஆதித்யா தார்.

ரன்வீர் சிங், சாரா, ஆர் மாதவன் உள்ளிட்ட அத்தனை பேரும் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

சஷ்வத் சச்தேவின் இசை மாயாஜாலம் நிகழ்த்தியிருக்கிறது.

விகாஷ் நெளலாகாவின் ஒளிப்பதிவு உள்ளிட்ட தொழில் நுட்பக்கலைஞர்களின் கைவண்ணத்தில் துரந்தரின் இரண்டு பாகங்களும் சர்வதேச அளவில் ஒரு உச்சக்கட்ட தரத்தை நிர்மானித்து விட்டன.

இனி, இந்திய  திரையுலகில் மட்டுமல்ல, சர்வதேச அளவில் துரந்தர் ஒரு அளவுகோலாக வைக்கப்படும்.

கதை சொல்லலுக்கே ஒரு புதிய பாணியை அறிமுகப்படுத்தியிருக்கிறார் ஆதித்யா தார். நாயகனின் வெறித்தனமான வேட்டையில், சுதந்திர இந்தியாவில் 1990 களில் காஷ்மீரில் இருந்து அடித்து விரட்டப்பட்ட கொன்று குவிக்கப்பட்ட காஷ்மீர் பண்டிட்டுகளின் வலி, ரத்தம் போல தெறித்திருக்கிறது.

இனி, இந்துக்களையும், இந்தியர்களையும்,  இந்தியாவையும் தொட எவனும் யோசிக்கக்கூட மாட்டான் !

கதையில், உண்மை இருக்கிறது, ஆகவே ஆயிரம் கோடிகள் என்கிற வசூல் சாதனையை அசால்ட்டாக எட்டிப்பிடித்திருக்கிறது.

ஆனாலும், சாதனைகள் முறியடிக்கப்படுவதற்கே! இதைவிடச் சிறந்த ஒரு படைப்பை யார் கொடுக்கிறார் பார்ப்போம்!

NB:  இந்த விமர்சனம் எழுதப்பட்ட நேரம் வரை தமிழ் பதிப்பு வெளியாகவில்லை, ஆகவே அனைவருக்கும் சுலபமாக புரியும் வண்ணம் , விமர்சன நடையாக அல்லாமல், கதைச்சுருக்க நடையில் இந்த கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது.

இன்னொரு முக்கியமான விஷயம், ராஜ்யங்கள் என்று எப்பொழுது உருவானதோ, அப்பொழுதே உளவாளிகளும் உருவாகிவிட்டார்கள். இந்திய உளவாளிகள் பாகிஸ்தானுக்குள் சென்று, இந்தியாவிற்கு எதிரான சதிகளை கண்டுபிடிப்பது போல, இந்தியாவிற்குள்ளும் பாகிஸ்தான் உளவாளிகள் இருக்கலாம். பிச்சைக்காரன் முதல் மதத்தலைவர் அல்லது அரசியல்வாதிகள் என்று எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் இருக்கலாம்.

உளவாளிகள் மாட்டிக்கொண்டால்,  முடிந்தவரை காப்பாற்ற முயற்சித்து முடியாவிட்டால், அவர்களை சம்பந்தப்பட்ட நாடுகள் அங்கீகரிக்காது, கைவிட்டுவிடுவார்கள்.

எதிர்காலத்தில் இப்படிப்பட்ட சாகசம் நிறைந்த உளவாளிகளாக ஆகவேண்டும் என்று ஆசைப்படுபவர்கள், தங்களது சிறுவயதிலிருந்தே தங்களை தயார்ப்படுத்திக் கொள்ளவேண்டும். உடல் உறுதி, தற்காப்புக்கலைகள், பல மொழிப்புலமை, பல மதங்களை பற்றிய கலாச்சாரம் பற்றிய அறிவு மற்றும் புரிதல், எந்த சூழ் நிலையில் சரியான முடிவெடுக்கும் திறன், மன உறுதி அதிமுக்கியமாக தியாகம் ஆகிவற்றை கற்றுக்கொள்ளுங்கள்1