a K.Vijay Anandh review
கதாநாயகன் பெயர் முருகன், நாயகி பெயர் தெய்வயானை, அவர்களுக்கு கிடைக்கும் காரில் எழுதி வைத்திருக்கும் வாசகம் மனமே முருகனின் மயிலாசனம், அட நம்ம செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா மாதிரி எப்பொழுதும் திருநீறுடன் நாயகனின் நெற்றி, இரண்டாம் பாதியை ஆக்ரமித்திருக்கும் நாய்க்குட்டி அட டைம் மிஷின்ல தேவர் பிலிம்ஸ் காலத்திற்கு போய்விட்டோமா…
அப்புறம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்த்து ரசிக்கத்தக்க படம், மாவட்ட கலெக்டர் காரைவிட்டு இறங்கி, காவல்துறை அதிகாரியிடம் சொல்கிறார், ” நாம வேலை பார்ப்பதே பொதுமக்களுக்காகத்தானே அவரிடம் மன்னிப்பு கேளுங்கள்…” என்று அட நிஜமாகவே நாம், 2023 ல் இல்லை தமிழில் கிளாசிக் சினிமாக்கள் வந்து கொண்டிருந்த காலகட்டத்திற்கே போய்விட்டோம் என்கிற உணர்வை தரத்தக்க ஒரு நேர்மறையான நல்ல FeelGood Tamil Cinema லக்கிமேன்.
காரோ, பணமோ, பங்களாவோ இருந்தால் மட்டும் ஒருவன் லக்கிமேன் ஆகிவிடமுடியாது, பாசம் காட்ட குழந்தைகள், அரவணைக்க அன்பான மனைவி, பக்கபலமாய் நிற்க நல்ல நண்பன் என்று இருப்பவனே லக்கிமேன் என்கிற அழகான விஷயத்தை யோகிபாபு வை உணரவைத்து படம் பார்க்கும் ரசிகர்களுக்கும் உணர்த்திவிடுகிறார் அறிமுக இயக்குநர் பாலாஜி வேணுகோபால்.
மிகவும் இயல்பான அதே நேரம் வலிமையான வசனங்கள், நீட்டி முழக்காமல் ஷார்ப்பாக எழுதப்பட்டிருக்கின்றன. அதிலும் தனக்கு வசனமே இல்லாவிட்டாலும் ஸ்பாட்டில் கவுண்டர்களை அள்ளித்தெளிக்கும் யோகிபாபுவையே ஒரு காட்சியில் எல்லாம் தலைவிதி என்று சைகை மொழி பேசசைத்திருக்கிறார்கள் என்றால் எந்த அளவிற்கு ஷார்ப்பான வசனங்கள் என்பதை புரிந்துகொள்ளலாம்.
இப்பொழுதெல்லாம் நம் இளம் இசையமைப்பாளர்கள் வெறும் பாடல்களுக்கான இசையாக மட்டுமல்ல திரைக்கதையையும் தங்கள் இசையால் நிரப்பி விடுகிறார்கள். ஷான் ரோல்டன், இப்ப பாட்டு வந்துபோச்சா என்று யோசிக்கும் நேரத்தில் இரண்டு மூன்று பாடல்களை இசைத்துவிடுகிறார், அந்தளவுக்கு அவை திரைக்கதையோடு பயணிக்கின்றன.
தொழில் நுட்ப ரீதியாக சந்தீப் விஜயின் ஒளிப்பதிவு மற்றும் மதனின் எடிட்டிங் லக்கிமேனை ரசிக்க வைத்திருக்கின்றன.
யோகிபாபு, நகைச்சுவை நடிகர் என்கிற அடையாளத்திலிருந்து கதைநாயகனாக எப்பொழுதோ பரிணாம வளர்ச்சியடைந்து விட்டாலும் கதைகளை மிகவும் கவனமாக தேந்தெடுத்தே கதாநாயகனை வெளியே விடுகிறார். மண்டேலா வுக்கு பிறகு இந்த லக்கிமேன், முருகன் நீண்ட நாட்கள் பேசப்படுவார்.மகன் மூலமாக மனைவிக்கு முத்தம் கொடுத்து, திருப்பி அதை அறையாக பெறும் இடம் முதல், சம்பளம் கொடுக்கும் முதலாளி முதல் காவல்துறை அதிகாரி வரை மனதில் பட்டதை அப்படியே பேசிவிடும் இடங்கள் வரை மிகவும் இயல்பாக நடிக்கிறார்.
ஸ்ரீதேவி போன்ற காட்டாற்று நடிப்பு வெள்ளத்திற்கு அணைபோட கமல்ஹாசன் போன்று கடினபாறைகளால் தான் முடியும் என்று மூன்றாம் பிறை பட விமர்சனங்களில் படித்த நினைவு. இதில், இது யோகிபாபுவின் மனைவி தெய்வானையாக வரும் ரேச்சலுக்கு சாலப்பொருந்தும். அப்படி ஒரு கஷ்டகாலத்தின் மனைவியாக மிகவும் இஷ்டப்பட்டு சிறப்பாக நடித்திருக்கிறார்.
குழந்தை நடத்திரம் சாத்விக்கும் அற்புதம்.
நேர்மையான காவல்துறை அதிகாரியாக வீரா, யூனிபார்ம் இல்லாமல் சிவில் உடைகளிலேயே வந்தாலும் ஒரு ஸ்ட்ரிக்ட் மற்றும் நேர்மையான காவல்துறை அதிகாரியாக சல்யூட் போடவைத்திருக்கிறார்.
அப்துல், வழக்கம் போல நல்ல நண்பனாக வலம் வந்து கதை நகர்த்தலுக்கு உதவுகிறார். யோகிபாபுவுக்கும் இவருக்குமான கெமிஸ்ட் ரி நன்றாக இருக்கிறது.
முதல்பாதி ஒரு லைவ் காமெடி ஜனரில் சிரிக்க வைக்கிறதென்றால், இரண்டாம் பாதி கொஞ்சம் பிளாக் காமெடி கலந்த கிரைம் திரிக்கராக வேகமெடுக்கிறது.
அதிஷ்டத்தை வெளியே தேடவேண்டாம், உறவுகளின் அன்பில் அது ஒளிந்திருக்கிறது!
mysixer rating 4.5/5